2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் அ.தி.மு.க.?

George   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாடு சகஜ நிலைமைக்கு இன்னும் திரும்பவில்லை. அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர். சமாதி முன்பு பிரமாண்டமான உண்ணாவிரதம் இருந்தார்கள். பிறகு சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருந்தார்கள்.

ஹோட்டல்கள் அடைக்கப்படுகின்றன. கடைகள் மூடப்படுகின்றன. தனியார் பஸ் உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள பந்த் அனுசரிக்கிறார்கள். இப்படி தமிழகத்தில் ஆங்காங்கே தங்கள் இஷ்டப்படி ஏதாவது ஒரு வகையில் கடையடைப்பு, பந்த், மனித சங்கிலி என்று போராட்டத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இத்தனை போராட்டங்களுமே ஊழல் வழக்கில் நான்கு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துத்தான்.

பால் குடம் எடுக்கிறார்கள். ஒப்பாரி வைத்து அழுகிறார்கள். மொட்டை போடுகிறார்கள். தீக்குளித்து இறக்கிறார்கள். இந்த சம்பவங்களும் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் நோக்கமும் ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவரை இப்படி போராட்டங்கள் மூலம் விடுவித்து விட முடியுமா என்பது கேள்விக்குறியே. சட்ட ரீதியான முயற்சிகள் மூலமே ஜெயலலிதாவிற்கு ஜாமின் பெற முடியும். ஆனால் அதை விடுத்து போராட்டங்கள் நடத்தி விடுதலை பெற்று விட வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் முயலுவதில் வேறு யுக்தி இருக்கிறது.

ஏதாவது ஒரு காரணத்திற்காக தேர்தலை முன்கூட்டியே சந்திக்க வேண்டும் என்ற நிலை வந்தால், மக்களின் அனுதாபத்தைப் பெற வேண்டும். அதை வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பது அக்கட்சியின் வியூகமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

இதற்கு முன்பு சில தேர்தல்களில் இந்த அணுகுமுறையை அ.தி.மு.க. கடைப்பிடித்தது. உதாரணமாக 1989 சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் சட்டமன்றத்திற்குள் தி.மு.க. உறுப்பினர்களுக்கும், அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் பெரும் கலாட்டா உருவானது. அதில் ஜெயலலிதா தாக்கப்பட்டார். ஆளுங்கட்சி வரிசையில் இருந்த அன்றைய முதல்வர் கருணாநிதியும் தாக்கப்பட்டார்.

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை' மையமாக வைத்து 1991 சட்டமன்றத் தேர்தலை சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது ராஜீவ் படுகொலையும் அனுதாபத்தைப் பெற்றுத் தர அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். ஜெயலலிதா முதன் முதலில் முதலமைச்சரானது இப்படித்தான்.

அடுத்து 1998 நாடாளுமன்றத் தேர்தல். டான்சி பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதா தி.மு.க. ஆட்சியில் கைது செய்யப்பட்டார். அந்த கைதை முன் வைத்து அந்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தார். 1996ல் ஊழல் என்று கூறி புறக்கணித்த அ.தி.மு.க.விற்கு இந்த கைது பலன் கொடுத்தது.
1998 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. மத்தியில் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கும் முக்கியக் கட்சியாகவும், முக்கியத் தலைவராகவும் மாறினார் ஜெயலலிதா.

இதே போல் 2001 சட்டமன்றத் தேர்தலிலும் அனுதாபத்தை மூலதனமாக வைத்து அமோக வெற்றி பெற்றார். அப்போது டான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனைக்கு அப்பீல் செய்தார்.

ஆனால் தீர்ப்பில் உள்ள கன்விக்ஷனை' தடை செய்ய முடியாது என்று அப்போது உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மலை சுப்பிரமணியன் கூறி விட்டார். இதனால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என்று நெருக்கடி உருவானது. அவர் வேட்பு மனு தாக்கல் செய்தால் அதை தேர்தல் அதிகாரி நிராகரிப்பார் என்பது மிக எதார்த்தமான சட்ட நிலைமை. ஆனால் இது தெரிந்தும் ஜெயலலிதா புதுக்கோட்டை, புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

அதுவரை பிரச்சார வேனில் அமர்ந்து இருந்து கொண்டே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதா, இந்த நான்கு தொகுதிகளில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டவுடன் பிரச்சார வேனில் எழுந்து நின்று பிரச்சாரத்தை தொடங்கினார்.

தன் மகனை (மு.க.ஸ்டாலின்) முதல்வராக்க என் வேட்புமனுக்களை நிராகரித்து தேர்தலில் நிற்க விடாமல் செய்து விட்டார் கருணாநிதி' என்ற குற்றச்சாட்டையே பிரச்சாரத்தின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தினார். இதனால் வீசிய அனுதாப அலை அவருக்கு 2001 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

இரண்டாவது முறையாக முதலமைச்சரானார். அவர் மூன்று முறை முதல்வரானதில் இரு முறை அனுதாப அலை உதவியிருக்கிறது. அதனால் இந்த முறை கிடைத்த சிறைத் தண்டனையையும் அப்படி அவர் மாற்றுவதற்கு முயற்சிக்கலாம். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் முன்கூட்டியே தேர்தலை சந்திக்கும் யுக்தியாக இந்தப் போராட்டங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் தீர்ப்பு பற்றி கருத்துச் சொல்லாமல் இருந்த தி.மு.க. இப்போது தன் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை ஒக்டோபர் 8ஆம் திகதிக்கு வைத்திருக்கிறது.

அன்றைய தினம் இந்த தீர்ப்பால் ஏற்பட்டிருக்கின்ற சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றி சீரியஸாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இது மட்டுமல்ல, தி.மு.க. தலைவர் கருணாநிதியை டாக்டர் ராமதாஸ் சந்தித்து தன் பேத்தியின் திருமண விழா அழைப்பிதழைக் கொடுத்திருக்கிறார்.

வைகோ தி.மு.க.வின் முந்தைய ஆட்சியைப் பாராட்டியிருக்கிறார். இப்போது கூட தீர்ப்பிற்கு பிறகு வைகோவின் வீட்டின் அருகில் (கலிங்கப்பட்டியில்) அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி, அதனால் ம.தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மோதல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த மோதல் பற்றி தன் கேள்வி-பதில்' பகுதியில் குறிப்பிட்டுள்ள கருணாநிதி வைகோவின் பெருந்தன்மையை' பெரிதும் போற்றியிருக்கிறார். தீர்ப்பு பற்றி விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கூறியிருக்கின்ற கருத்துக்களை கருணாநிதியும் வழி மொழிகிறார்.

இப்போது ம.தி.மு.க., பா.ம.க, தே.மு.தி.க. போன்ற கட்சிகளை நோக்கி தி.மு.க.வும், அதே போல் தி.மு.க.வை நோக்கி அந்தக் கட்சிகளும் நகருவது போன்ற இமேஜ் இந்த தீர்ப்பிற்குப் பிறகு உருவாகியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. முன்கூட்டியே தேர்தலை சந்திக்கலாம் என்று நினைத்தால் அதற்கு மத்திய அரசின் உதவி வேண்டும். ஏனென்றால் ஆட்சியைக் கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலுக்கு அ.தி.மு.க. முன் வந்தால், அதை மாநில கவர்னரும், மத்திய அரசும் சம்மதிக்க வேண்டும்.

இந்த சமயத்தில் தமிழகத்தில் ஜிகாதி தீவிரவாதமும், சட்டம் ஒழுங்கும் கெட்டு விட்டது' என்று விஜயதசமி விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

உள்நாட்டு பாதுகாப்பு என்ற விஷயத்தில் தமிழகத்தில் நிலைமைகள் சரியாக இல்லை. ஆகவே இப்போது தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை' என்று கூறி மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்தலாம். அ.தி.மு.க.வினர் நீதித்துறைக்கு எதிராக நடத்தும் இந்த போராட்டமே அதற்கு அச்சாரமாக அமைந்து விடும் ஆபத்தும் இருக்கிறது.

இதையெல்லாம் மனதில் வைத்தே ஆர்.எஸ்.எஸ். தலைவர் இப்படிப் பேசியிருக்கிறாரா என்பது போகப் போகத்தான் தெரியும். ஆனால் தமிழக அரசியலில் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்த ஆர்.எஸ்.எஸ்.விரும்புகிறது என்பது மட்டும் பகவத்தின் பேச்சிலிருந்து தெரிகிறது.

ஆகவே ஒரு தீர்ப்பு பல அரசியல் பாதைகளை அமைத்துக் கொடுத்துள்ளது. அ.தி.மு.க. எது மாதிரி பாதையை தேர்வு செய்யப் போகிறது என்பதை வைத்து தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கும். அதை உணர்ந்துதான் தி.மு.க தனது மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தை கூட்டியிருக்கிறது.

எதிர்கட்சிகள் அனைத்துமே தீர்ப்பு பற்றி அ.தி.மு.க. நடத்தும் போராட்டங்களைக் குறை கூறியிருக்கின்றன. ஜெயலலிதாவின் விடுதலை, கருணாநிதியின் வியூகம், மற்ற எதிர்கட்சிகளின் எண்ணவோட்டம் எல்லாம் இணைந்து சட்டமன்ற தேர்தல் 2016ல் வருமா அல்லது முன்கூட்டியே வந்து விடுமா என்பதை உறுதி செய்யும்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X