2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உலக அஞ்சல் தினம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 08 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுதர்ஷினி சாமிவேல்

வீடுகளின் முன்... ரீங்...ரீங் என்ற சைக்கிளின் மணியொலிக்கு பின்னால் 'சார் போஸ்ட்', 'லியூம்' சிங்களத்தில், தமிழில், 'கடிதம் வந்திருக்கு' என்ற குரல் அத்தருணத்தில் வீட்டில் இருப்பவர்களின் இதயத்தையே ஒரு கணம் நிசப்திக்க செய்துவிடும். என்ன கடிதமோ என்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

அதற்கு அப்பால்... சார் தந்திவந்திருக்கு என்று தபால் காரர் சொல்லிவிட்டால் மரண படுக்கையில் இருக்கின்ற உறவுமுறை சார்ந்த முதியோர்களின் உருவங்கள் எல்லாம் ஒருநிமிடம் கண்முன்னே ஓடி மறையும். தபால் சேவையின் அருமைக்கு அப்பால் தந்திவழங்கினால் அவரை அபசகுணமானவன் என்றழைத்த காலமொன்று இருந்தது.

தந்தியென்றால் இறந்தவரின் மரண செய்தியை தாங்கிவரும் ஒன்றாகவே கருதினர். ஆனால், திருமணம், பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு மற்றும் அலுவலகங்களில் விடுமுறை எடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட தந்தி சேவை இன்றில்லை.


யார் என்னதான் நினைத்து கொண்டாலும் தபால் சேவை இன்றியமையாத சேவையாக உலகளாவிய ரீதியில் இன்றும் காணப்படுகின்றது. இலங்கையை பொறுத்தவரையில் தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்று 9ஆம் திகதியுடன் 215 வருடங்கள் நிறைவடைகின்றன.

சரி... ஆரம்ப காலத்தில் மனிதன் தகவல்களை பரிமாற்றிக் கொள்ள பறவைகள் மற்றும் விலங்குகளை பயன்படுத்தினான். பிறகு ஊர் ஊராக சென்று முரசுக் கொட்டி தகவல்களை அறிவித்தான்.

ஆனால் உலகின் எந்தவிளிம்பில் இருப்பவருடனும் தொடர்புகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சிக் கண்டுள்ளமையால் தபாலுக்கு மவுசு கொஞ்சம் குறைந்துவிட்டது எனலாம்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தகவல் பரிமாற்றம் மின்னஞ்சல், பெக்ஸ், எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ். என பரவலாக விரிவடைந்து சென்றுள்ளது. எனினும், உத்தியோகபூர்வமான தகவல் பரிமாற்றமானது அஞ்சல் வழியே அனுப்பப்படுகின்றது.

சர்வதேசதபால் ஒன்றியம் என்ற எண்ணக்கரு 1863ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் அப்போதைய தபால் மா அதிபராகவும் ஜனாதிபதியின் மந்திரி சபையின் உறுப்பினராகவும் கடமையாற்றிய மொன்கெரிபிளேயரின் எண்ணக்கருவாக வெளிப்பட்டது.

பாரிஸ் நகரில் கூட்டப்பட்ட 15 பிரதிநிதிகளின் ஒன்று கூடலின் போது பரஸ்பர நம்பிக்கையுடன் கூடிய பொதுவான அமைப்பினை ஏற்படுத்த இணக்கம் தெரிவித்தனர்.

ஜேர்மன் நாட்டின் தபால் மா அதிபரின் பெரும் முயற்சியால், 1874ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி சர்வதேச தபால் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 1878ஆம் ஆண்டு கூட்டப்பட்ட தொடரின் போது சர்வதேச தபால் ஸ்தாபனம் என பெயர் மாற்றப்பட்டது.

140ஆவது வருடத்தில் கால்பதிக்கும் சர்வதேச தபால் ஒன்றியம் 22 நாடுகளின் உறுப்புரிமையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 192 நாடுளை உறுப்பு நாடுகளாக கொண்டு தன்னிறைவற்ற ஸ்தாபனமாக செயற்பட்டு வருகின்றது.

ஆரம்பகாலத்தில் தபால்களை கொண்டு செல்பவர்களே தபால்களை வாங்கியும் வந்தனர்.  இம்முறையை மாற்றுவதற்காக 1653ஆம் ஆண்டு பிரித்தானியாவின் தபால் மா அதிபரின் மனைவியின் யோசனையில் தபால் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

சால்ஸ் ரீவிஸ் என்பவரால் தபால் பெட்டிகளுக்கு மாதிரிவடிவம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து 1851ஆம் ஆண்டு பிரித்தானியாவின் லண்டன் நகரத்தில் தபால் பெட்டிகள் வைப்பதற்காக தபால் துறையின் மேம்பாட்டு அதிகாரியை பணித்தது.

தபால் பெட்டிகள் அதிகப்பட்சம் ஐந்தேகால் அடி உயரத்தையும் குறைந்தப்பட்சம் நான்கு அடி உயரத்தையும் கொண்டதாக அமைக்கப்பட்டன.
லண்டனில் வைக்கப்பட்ட தபால் பெட்டிகளில் பிரித்தானிய அரசின் சின்னமும் அதற்கு கீழ் பகுதியில் ரோயல் மெயில் சேவையின் சின்னமும் காணப்பட்டது. மேற்பகுதியில் மகாராணியின் கீரிடசின்னம் பொறிக்கப்பட்டது.

மக்களின் கண்களை கவரும் வண்ணமான சிவப்பு நிறம் தபால் பெட்டிகளுக்கு பூச அறிவுறுத்தப்பட்டது. மேலும், புகையிரதம், பேருந்துகளிலும் தபால் பெட்டிகள் வைக்கப்பட்டன.

காலப்போக்கில் தபால் பெட்டிகளுக்கு குறிக்கப்பட்ட சிவப்பு நிறம் அஞ்சல் அலுவலகங்களை பிரதிபலிப்பதாக மாறியது. 1834ஆம் ஆண்டு ஒட்டும் தன்மையுள்ள முத்திரைகளும் ஒரே அளவைக்  கொண்ட தபால் கட்டணம் தொடர்பிலான கருத்தை, ஜோம்ஸ் சால்ஸ்மல் வெளியிட்டார்.

அவரது கருத்துக்கு ஒத்தகருத்தை 1837ஆம் ஆண்டு ரோலண்ட் ஹில் வெளியிட்டார். அவரின் கருத்தின் படி, கடிதத்தை பெற்றுக்கொள்பவர் கட்டணத்தை செலுத்தமறுக்க கூடும். எனவே கடிதத்தை அனுப்புபவரிடம் இருந்தே கட்டணத்தை அறவிடுவது சிறந்தது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரது கருத்து 1839ஆம் ஆண்டு பிரித்தானிய நாடாளுமன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1876 தொடக்கம் 1971ஆம் ஆண்டு வரை தபால் பொருட்களை அனுப்பும் மூல நிறுவனங்கள், அறவிடப்படும் கட்டணங்களை தமதாக்கிகொள்ள அனுமதிக்கப்பட்டடிருந்தன.

இந்நிலையில் டோக்கியோவில் இடம்பெற்ற மாநாட்டின் போது கூடுதலான பொருட்களை அனுப்பும் நாடு, பொருட்கள் அனுப்பப்படும் நாட்டுக்கு ஒன்றியத்தால் குறித்துரைக்கப்பட்ட நியதிகளுக்கு இணங்க ஒரு தொகையை வழங்கவேண்டும் என அறிவித்தது.

ஓன்றியத்தின் அமைப்புவிதி,பொருட்களின் கட்டணவீதம், அதியுயர் மற்றும் அதிகுறைந்த நிறை, பருமன் அத்துடன் பதிவுக் கடித சேவை, விஷேட  பாதுகாப்புடன் அனுப்பவேண்டிய பொருட்கள் தொடர்ப்பில் விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டன.

சர்வதேச தபால் ஒன்றியத்தின் சர்வதேச தபால் சேவை தொடர்பான ஒருங்கிணைப்பு வெளியீடுகள், பிரசுரம் என்பன இதன் முக்கியபணிகளாகும். 1947 இல் ஐக்கியநாடுகள் சபையுடன் விஷேட அந்தஸ்த்துடன் கூடிய உறுப்பினர் வரிசையில் ஸ்தாபனம் இணைந்துக்கொண்டது.

தபால் துறையை பொறுத்தமட்டில் இலங்கையை 1,500களில் ஆண்ட போர்த்துக்கேயர் காலத்திலும் 1,600 களில் இலங்கையை ஆண்ட ஒல்லாந்தர் காலப் பகுதியிலும் போதியளவு வளர்ச்சியை கண்டிருக்கவில்லை.

இலங்கை குடியேற்ற நாடாக 1877ஆம் ஆண்டும் சுதந்திரநாடாக 1949ஆம் ஆண்டும் ஒன்றியத்தில் இணைந்துக்கொண்டது. இலங்கை தபால் துறையின் சேவைகள் மக்களை சரியாக சென்றடையும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தபால் சேவை 1980ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தபால் மற்றும் தந்திச் சேவை என இரண்டாகப் பிரிக்கப்பட்டு தந்திக்கு துரித வசதிகள் செய்யப்பட்டன.

1981இல் அஞ்சல் முகவர் நிலையங்கள் அனுமதிக்கப்பட்டன. மேலும், 1989 ஒக்டோபர் மாதம் ஈ. எம். எஸ். என்னும் விரைவுத் தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

அதன் வரிசைகளில் 2001ஆம் ஆண்டு; இணையத்தளம், மின்னஞ்சல், ஒன்லைன் சேவை என தபால் திணைக்களத்தின் சகல செயற்பாடுகளும் அதிநவீன மின்னியல் உலகத்தினுள் பிரவேசித்தன.

தற்போது அநேகமாக அனைத்து தபால் நிலையங்களிலும் ஒன்லைன் வாயிலாக மின்பட்டியல் கொடுப்பனவு, வெளிநாட்டுக் கடிதங்களுக்கான ஒப்படைப்பு அறிவிப்பு, இலத்திரனியல் காசுக்கட்டடளைச் சேவை,தபால் பணப்பரிமாற்றச் சேவை, (பீ.எம்.ரீ) என்பன புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு துரிதகதியில் சேவையாற்றப்பட்டு வருகின்றன.

157 வருடங்கள் பழமையான தந்தி சேவையானது  2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி இரத்துசெய்யப்பட்டு ரெலி மெயில் என்ற பெயரில் புதிய சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டது.

மின்னஞ்சல், தொலைபேசியின் பாவனைக் காரணமாக தந்திசேவையின் பாவனை வெகுவாக குறைந்தமையே இதற்கு காரணமாகும்.
தொழிநுட்பத்தின் காற்று பாடாத கிரமங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், தபால் சேவையின் முழு பயனை பெறாதவர்கள் யாரும் இல்லை என சொல்லும் அளவுக்கு பட்டணம் தொட்டு பட்டிக்காடு வரை தபால் துறையின் சேவை வியாபித்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


ஒரு பார்வை


1500ஆம் ஆண்டு இலங்கையை ஆண்ட போர்த்துக்கேயர் காலத்திலும் 1600களில் ஆண்ட ஒல்லாந்தர் காலத்திலும் அஞ்சல் துறையில் போதிய வளர்ச்சிகளோ அபிவிருத்திகளோ காணப்படவில்லை.

1700களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அஞ்சல் துறையில் துரித வளர்ச்சியும், அபிவிருத்தியும் நவீன தொடர்பாடல் உத்திகளும் ஏற்பட்டன.

வரலாறு

    இலங்கையில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனியாரின் தகவல் பரிமாற்ற வசதிக்காக இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான ஒரு ஒழுங்கமைக்கப்படாத தபால் சேவை கெப்டன் ஏ. கென்னடி என்பவரால் ஏற்படுத்தப்பட்டது.

    1804 தொடக்கம் 1817 வரை அஞ்சல் துறையின் தலைமைப் பொறுப்பிலிருந்த ஈ. பிளாட்டமன் 1815 இல் கொழும்பு, காலி, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய ஆறு இடங்களில் அஞ்சல் அலுவலகங்களை ஆரம்பித்தார்.

    1832இல் ஆசியாவிலேயே முதல் தடவையாக கொழும்புக்கும் கண்டிக்கும் இடையிலான குதிரை வண்டித் தபால்சேவை ஆரம்பிக்கப்பட்டது.
    1838இல் கொழும்புக்கும் காலிக்குமிடையில் இச்சேவை விஸ்தரிக்கப்பட்டது.

    1850இல் கொழும்புக்கும் காலிக்கும் இடையில் பழக்கப்பட்ட தபால் புறாக்கள் மூலம் அவசர தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

    1857  ஏப்ரல் 1ஆம் திகதி 6 பென்ஸ் பெறுமதியானதும் விக்டோரியா மகாராணியாரின் தலையுருவம் கொண்டதுமான முத்திரை வெளியிடப்பட்டது.

    1865இல் கொழும்புக்கும் அம்பேபுஸ்ஸவுக்கும் இடையிலான தபால் புகையிரத சேவை உருவாக்கப்பட்டது.

    1867இல் தனியாருக்கான தபால் பை, தபால் பெட்டி சேவைகள் கொழும்பிலும் கண்டியிலும் ஆரம்பிக்கப்பட்டன.
    1872இல் ஆகஸ்ட் 22, முதன் முறையாக தபால் அட்டை வெளியானது.

    1873இல் கொழும்புக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான காசுக் கட்டளை சேவை ஆரம்பிக்கப்பட்டது.

    1877இல் உள்நாட்டு காசுக்கட்டளைச் சேவை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தும், 1877 ஏப்ரல் 1ஆம் திகதி இலங்கை அகிலதேச அஞ்சல் சங்கத்தில்        ஒரு உறுப்பினராக இணைந்து கொண்டதிலிருந்தும், தபால்துறை துரித அபிவிருத்தி காணத் தொடங்கியது.

    1880இல் இலங்கை இந்திய காசுக்கட்டளை சேவை தொடங்கியது.

 1855 மே 1ஆம் திகதி அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கியும் ஆரம்பமானது.

    1893 இல் இலங்கை நாணயப் பெறுமதியில் இரண்டு சதம் பெறுமதியான முத்திரை வெளியிடப்பட்டது.

   1895 ஆகஸ்ட் 19 ஆம் திகதி கொழும்பு பிரதம அஞ்சல் அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

    1913 தொடக்கம் 1923 வரை இலங்கையில் அஞ்சலதிபதியாக இருந்த எப். ஜே. ஸ்மித் முதல்முறையாக 6 உப தபால் அலுவலகங்களை அக்மீமன, திவுலப்பிட்டிய, ஆனமடுவ, கிரியெல்ல, மூதூர், சிலாபத்துறை ஆகிய இடங்களில் அமைத்தார்.

    1928 இல் இலங்கையின் முதலாவது வான்கடிதம் மாஸெல்ஸ் நகரத்திற்கு விமானஅஞ்சல் வாயிலாகப் பறந்தது.

    1936 இல் அஞ்சல் அறிமுக அட்டை விநியோகம் செய்யப்பட்டது. இங்கிலாந்திலிருந்து தபால்கள் விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தன.
    1947 இல் இலங்கை நாட்டவரான திரு. ஏ. இ. பெரேரா அஞ்சல் அதிபதியாக நியமனம் பெற்றார்.

    1949 இல் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் வான் அஞ்சல் சேவை ஆரம்பித்தது.

    1958 இல் இலங்கை போக்குவரத்துச் சேவையுடன் இணைந்து தபால் பஸ்சேவை தினமும் ஓடத் தொடங்கின. இலங்கை மக்கள் அனைவரும் அஞ்சல்களைத் தங்குதடையின்றிப் பெற்றுக் கொண்டனர்

    ஜனவரி 1 1967இல் இலங்கை முத்திரைப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டது.

    செப்டெம்பர் 1967 இல் முதல் முத்திரைக் கண்காட்சி மக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது.

    1972 இல் முத்திரைகளை வெளியிடும் பணி முத்திரைப் பணியகத்திற்கு வழங்கப்பட்டது.

2011 பெப்ரவரி 3ஆம் திகதி இலங்கையில் பயன்படுத்தப்படும் நிலக்கரி மூலம் இயங்கும் வைஸ்ரோய் புகைவண்டி, சுற்றுலாத் துறையில் ஈடுபடுத்தப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு அதன் ஞாபகார்த்தமாக முத்திரை வெளியிடப்பட்டது.

இதன் அகலம் 132 செ.மீற்றர். உயரம் 30 செ.மீற்றர். இது இலங்கையில் வெளியிடப்படும் மிகப்பெரிய முத்திரை எனத் தபால்சேவை அமைச்சு அறிவித்துள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X