2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தாலி மாற்ற காத்திருந்த தேவிகள்

Thipaan   / 2014 ஒக்டோபர் 16 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அழகன் கனகராஜ்


அனல்பறக்கும் வேகத்துடன் சில்லுகள் சுழல அதிலிருந்துவரும் ங்ங்ங்.....ங்ங்;ங்.... கூங்... கூங்....கிரீச்....கிரீச்.... ங்ங்ங்.....என்ற இடைவிடா சத்ததுடன் கூடிய இசைக்கு பனைமரங்கள் தலையசைக்க, மேய்ச்சல்கள் காதுகொடுக்க கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறக்கும் ரயில்களின் சத்தங்கள்; 24 வருடங்களின் பின்னர் குடாநாட்டு மக்களின் காதுகளில் கடந்த13ஆம் திகதிக்கு பின்னர் ரீங்காரம் இட்டுகொண்டிருக்கிறன.

இந்தியாவின் ஈர்கோன் நிறுவனத்தின் உதவியுடன் பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரைக்குமான யாழ்தேவி ரயில் சேவை 24 வருடங்களின் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த வடக்கு பாதையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொக்குவில், கோண்டாவில், இணுவில், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, மாவிட்டபுரம் ஆகிய ரயில் நிலையங்களை உள்ளடக்கிய  காங்கேசன்துறை வரைக்குமான  ரயில் பாதைகளை செப்பனிடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்தேவி (யாழ் தேவி எஸ்பிரஸ்) என்ற சேவை யாழ்ப்பாணத்துக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டாலும் யாழ் தேவிக்கான இயந்திரங்கள் கனடாவால் வழங்கப்பட்டதன் பின்னர் 1956ஆம் ஆண்டு தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது.

யாழ்தேவி, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை இயங்கிய பயணிகள் புகையிரத சேவையாகும். இச்சேவை இராகமை, பொல்கஹவெல, மாஹோ, அநுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து சென்றது.

காங்கேசன்துறையில் இருந்து காலை 5.45க்;கு புறப்படும் யாழ்தேவி, மதியம் 1.15க்கு கொழும்பை வந்தடைந்தது. இதேபோல கொழும்பில் இருந்து காலை 5.45க்கு புறப்படும் யாழ்தேவி மதியம் 1.15க்கு காங்கேசன்துறையை சென்றடைந்தது.

யாழ்தேவி புகையிரதத்துக்கு வட பகுதியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இலங்கை புகையிரத திணைக்களத்தால் வட பகுதி போக்குவரத்து சேவைக்காக உத்தரதேவி என்னும் புகையிரதம் 1960ஆம் ஆண்டளவில்  மேலதிகமாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

மதியம் 1.15க்கு கொழும்பில் இருந்து புறப்படும் உத்தரதேவி, இரவு 8.30க்கு காங்கேசன்துறையை சென்றடைந்தது. அதுபோல காங்கேசன்துறையில் இருந்து மதியம் 1.15க்கு புறப்படும் உத்தரதேவி, இரவு 8.30க்கு கொழும்பை வந்தடைந்தது.

இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு கிடைத்த ஆண்டு வருமானத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதமான வருமானம், யாழ்தேவி மற்றும் உத்தரதேவி ஆகியவற்றின் இணைந்த சேவை மூலம் கிடைத்த என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டணியின் வெற்றியின் காரணமாக பதுளை உடரட்ட மெனிக்கேயின் இணைந்த சேவையாக பொடி மெனிக்கேயும் காலி சமுத்திரதேவியின் இணைந்த சேவையாக காலுகுமாரியும் 1960ஆம் ஆண்டளவிலேயே ஆரம்பிக்கப்பட்டன என்று இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டறை தகவல்கள் தெரிவிகின்றன.

இலங்கைப் புகையிரத சேவை நாட்டின் அபிவிருத்தியுடன் இணைந்த ஒரு சாதனமாக 1850ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் தோற்றம் பெற்றது.
இலங்கையில் புகையிரதப் பாதைக் கட்டமைப்புக்களை உருவாக்கிய பெருமை பிரிட்டிஷ் அரசாங்கத்தையே சாரும். இரும்புத் தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகள் மற்றும் சரளைக் கற்களைக் கொண்டு உறுதியான புகையிரதப் பாதைகளை அவர்கள் அமைத்தார்கள்.

ஆரம்ப காலங்களில் மலை நாட்டிலிருந்து தேயிலை மற்றும் கோப்பி போன்றவற்றை கொழும்புக்கு கொண்டு வருவதற்குப் புகையிரதம் பயன்படுத்தப்பட்டது. ஏற்றுமதிக்காக கொண்டுவரப்பட்ட மேற்கூறப்பட்ட உற்பத்திகள், நாட்டின் பிரதான வருமான வழியாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் சேர் ஹென்ரி வோர்ட் அவர்களால் 1858ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கையில் புகையிரத சேவைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. முதலாவது பிரதான புகையிரதப் பாதை கொழும்பிலிருந்து அம்பேபுஸ்ஸ வரையில் கிழக்குக்கு 54 கிலோ மீற்றர் தூரம் நிர்மாணிக்கப்பட்டது.

அதன் பின்னர் முதலாவது புகையிரதம் 1864 டிசெம்பர் மாதம் 27ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்தது. மேலும் இப்பாதை புகையிரத போக்குவரத்துக்காக 1865ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பின்னர் 1927ஆம் ஆண்டு 1,530 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட முழு பயண வழியொன்று செயற்படுத்தப்பட்டு, புகையிரத வலையமைப்பு முறைமை விஸ்தரிக்கப்பட்டது. பிரதான புகையிரத வீதி 1867ஆம் ஆண்டு கண்டி வரையும் 1874இல் நாவலப்பிட்டி வரையும் 1885ஆம் ஆண்டு நானு ஓயா வரையும் 1894ஆம் ஆண்டு பண்டாரவளை வரையும் 1924ஆம் ஆண்டில் பதுளை வரையும் கட்டம் கட்டமாக விஸ்தரிக்கப்பட்டது.

ஏனைய புகையிரத பாதைகள் நாட்டின் எஞ்சிய பிரதேசங்களை இணைத்துப் பூரணப்படுத்தப்பட்டன. இதன்படி மாத்தளைப் பாதை 1880ஆம் ஆண்டும் கரையோரப் பாதை 1895ஆம் ஆண்டும் வடக்குப் பாதை 1905ஆம் ஆண்டும் மன்னார் பாதை 1914ஆம் ஆண்டும் களனி பாதை 1919ஆம் ஆண்டும் புத்தளம் பாதை 1926ஆம் ஆண்டும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பாதை 1928ஆம் ஆண்டும் பூர்த்தி செய்யப்பட்டன. மேலும் 1956ஆம் ஆண்டு காங்கேசன்துறை பாதை பூரணப்படுத்தப்பட்டது.

இலங்கையில் பல வழித் தடங்கள் கொண்ட புகையிரத சேவைகள் காணப்பட்டாலும், கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான புகையிரதப் பாதை (பிரதான பாதை), கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான புகையிரதப் பாதை (வட பாதை), கொழும்புக்கும் மாத்தறைக்கும் இடையிலான புகையிரதப் பாதை (கடலோரப் பாதை), கொழும்புக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரதப் பாதை (இறங்குதுறைப் பாதை), கொழும்புக்கும் புத்தளம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகியவற்றுக்கு இடையிலான புகையிரதப் பாதைகள் முதலிய பாதைகள் முக்கியத்துவம் பெற்றவை.

குறிப்பிடப்பட்ட அனைத்துப் பாதைகளும் அகலப் பாதைகள் என அழைக்கப்படுகின்றன. கொழும்புக்கும் அவிசாவளை இடையிலான புகையிரதப் பாதை (களனிப் பள்ளத்தாக்குப் பாதை) ஒடுங்கு பாதை என அழைக்கப்படுகிறது.

இராகமை, பொல்கஹவெல, மாஹோ, அநுராதபுரம், மதவாச்சி, பேராதனை போன்றவை புகையிரத பாதைகளில் அமைந்துள்ள பிரதான புகையிரத சந்திகள் ஆகும். நாட்டில் ஏற்பட்ட சனத்தொகைப் பெருக்கம் காரணமாகவும் பயணிகள் போக்குவரத்து அதிகரித்த காரணத்தாலும் 1960ஆம் ஆண்டுகளில் தமது பிரதான தொழில் முயற்சியின் அடிப்படைப் பொருட்களைப் புகையிரதம் ஊடாகக் கொண்டு செல்லும் நடவடிக்கை தோற்றம் பெற்றது.

வட பகுதிக்கான யாழ்தேவி மற்றும் உத்தரதேவி சேவைகளுக்குப் புறம்பாக விடுமுறையில் யாழ்ப்பாணம் சென்றவர்களின் வசதி கருதி கடுகதி சேவை (எக்ஸ்பிரஸ்) ஒன்று, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு நாளும் தபால் சேவை (மெயில்), பொருட்கள் சேவை (குட்ஸ்), எண்ணெய் சேவை (ஒயில்) ஆகிய புகையிரத சேவைகளும் இடம்பெற்றன.

கொக்குவில்லுக்கும் மாங்குளத்துக்கும் இடையில் 1985ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் யாழ்தேவியின் ரயில் பெட்டிகள் பல தூக்கி வீசப்பட்டன. இதில் தெற்கிலிருந்து பயணித்த 50க்கும் மேற்பட்ட படையினர் பலியாகினர்.

1986 காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துகொண்டிருந்த உத்தரதேவி பரந்தனில் தாக்குதலுக்கு உள்ளானது. அதேயாண்டு ஓமந்தையில் வைத்து யாழ்தேவி தாக்குதலுக்கு உள்ளானது.

அத்துடன் 1987 வவுனியா கிளிநொச்சி பாதைகள் சேதமாக்கப்பட்டன. அதன் பின்னர் பாதுகாப்பு இன்மையால் தனது பயணத்தை இவ்விரு தேவிகளும் 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் திகதியுடன்  நிறுத்திகொண்டன.

வடக்கில் பிரபல்யாமான யாழ் மற்றும் உத்தர ஆகிய இரண்டு தேவிகளில் இலட்சக்கணக்கானோர் பயணித்து நூற்றுக்கணக்கானோர் மரணித்திருந்தாலும் முதலாவதும் இறுதியுமான மகாத்மா காந்தியின் பயணமே இன்றும் நினைவு கூரப்படுகின்றது.

1927ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அஹிம்சா வாதியான மகாத்மா காந்தி, நவம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு ரயிலில் சென்றுள்ளார். யாழ்ப்பாணம் தேசிய காங்கிரஸின் அழைப்பின் பேரில் காந்தி, யாழுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவியின் மீள் பயணம் கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் அதனுடன் இணைந்த சேவையாக 60களில் இணைத்து கொள்ளப்பட்ட உத்தரதேவி, மறக்கப்பட்டுவிட்டதா இன்றேல் யாழ்தேவிக்கு இணைந்ததாக உத்தரதேவியும் சேவையில் இணைத்துகொள்ளப்படுமா என்று கேள்வி எழும்பியுள்ளது.

அதற்கான பதிலை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ரயில்வே திணைக்களத்திலிருந்து உத்தியோகபூர்வ பதில் எதிவும் கிடைக்கவில்லை. (இதனை எழுதி முடிக்கும் வரை)
யாழ்தேவியும்; உத்தரதேவியும் எங்கள் தேவிகள் என்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் பொப்பிசை பாடல் உட்பட இந்ததேவிகளுக்காக பாடப்பட்ட பாடல்கள் அக்காலத்தில் பிரபல்யமாகவே இருந்ததுள்ளன என்று கூறப்படுகின்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரைக்கும் பல்லின மக்களை இவ்விரு தேவிகளும் ஏந்தி செல்வதனால் சிங்கள-தமிழ் மக்களுக்கு இடையிலான சம்பாஷணைகள் பல கதைகளுக்கு கருவாகின.


ரயிலொன்று ரயில் நிலையத்தில் தரிக்கும்போது ரயில் சாரதி ஒரு வளையத்தை வீசுவார்;. பதிலுக்கு ஸ்டேஷன் மாஸ்டரும் சாரதிக்கு இன்னொரு வளையத்தை நீட்டுவார். அது நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களை கொண்டிருக்கும் இதனை ரயில்களில் பயணிப்போர் கவனிக்காமல் இருந்திருப்பதற்கு வாய்பேயில்லை.

அந்த வளையத்துக்குள் சாதாரண வட்டவடிவிலான பித்தளை தகடு இருக்கும். அதனை தன்னுடைய அறையிலிருக்கின்ற இயந்திரத்துக்குள் உட்செலுத்தும் போது அருகிலிருக்கின்ற ரயில்நிலைய ஸ்டேஷன் மாஸ்டரின் அறையிலிருக்கின்ற இயந்திரத்திலிருந்து மற்றொரு தகடு வில்லை மெதுவாக வெளிவரும்.

பித்தளை வில்லை வெளிவரும் போது ரயிலொன்று தனது நிலையத்தைநோக்கி வந்துகொண்டிருக்கின்றது என்பதனை ஸ்டேஷன் மாஸ்டர் அறிந்துகொள்வார்.

வளர்ச்சியடைந்து வருகின்ற நாடுகளில் சமிக்ஞை முறைமைகள் இருக்கும் அதேநேரத்தில் ஆட்கள் இல்லாது ரயில்களும் ஓடத்தான் செய்கின்றன. இலங்கையிலும் இந்தியாவிலும் இந்த வளைய மாற்றும் முறை இன்னுமே இருக்கத்தான் செய்கின்றது.

இந்த வளையத்தை வைத்து சிரித்திரன் சுந்தர் என்ற கார்ட்டூனிஸ்ட் 'ஸ்டேஷன் மாஸ்டரின் தாலி' என்று நக்கலடித்து கார்ட்டூன் வரைந்துள்ளதாக பழங்காலத்து கதைகள் கூறுகின்றன.

அந்த வளையம் ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற ஒருவிதமான சாவியாகும் அது கையில் கிடைக்காமல் ரயில், ஒரு அடி கூடவேணும் முன்னே நகரமுடியாது.

ஆரம்பத்தில் ரயில் பாதைகள் ஒருவழிப்பாதைகளாகவே இருந்தன. அதாவது இரண்டு நிலையங்களுக்கிடையில் ஒரே ஒரு பாதை தான். எல்லா ரயில்களும் அதில் தான் பயணிக்கவேண்டும். ஒரு நிமிடம் பிசகினாலும் இரண்டு ரயில்களும் நடுவழியில் நேருக்கு நேரு மோதிக்கொள்ளும்.
இரண்டு ரயில்கள் இடையில் மோதி கொள்வதை தவர்ப்பதற்கே இந்த வளையங்கள் மாற்றிக்கொள்ளப்படுகின்றன.

தேவிகள் பயணிக்கும் போதும் இதே முறைமைதான் கையாளப்பட்டன. யாழ்ப்பாணத்தில், காங்கேசன்துறை முதல் கொக்குவில் வரையிலான ரயில் நிலையங்களுக்கு இடையிலான  ரயில்வே பாதை ஒருவழிப்பாதையாகவே இருந்துள்ளது.

காங்கேசன் துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும் மாவிட்டபுரம்;, தெல்லிப்பழை, மல்லாகம், சுன்னாகம், இணுவில், கோண்டாவில், கொக்குவில், ஆகிய ரயில் நிலையங்கள் இருந்துள்ளன.

யாழ்தேவி ரயில், காங்கேசன்துறையில் இருந்து புறப்படுகிறது. டிரைவர் கையில் சிவப்பு வளையம் (சிவப்பு தாலி) இருக்கும். சுன்னாகம் நிலையத்தில் அதனை (சிவப்பு தாலியை) கொடுத்துவிட்டு பச்சைத்தாலியை (பச்சை வளையம்) ஸ்டேஷன் மாஸ்டரிடம் டிரைவர் வாங்கிக்கொள்வார். இப்போது சுன்னாகத்திலிருந்து கோண்டாவிலுக்கு ரயில் பயணிக்கும், டிரைவர் கையில் பச்சைத்தாலிதான் இருக்கும்.
அதே சமயம் கொக்குவிலில் இருந்து உத்தரதேவி புறப்படும், அந்த ரயில் சாரதியின் கையில் நீல நிற வளையம் (நீலத்தாலி) இருக்கும். உத்தரதேவி கோண்டாவிலை அடையும் முன்னமேயே யாழ்தேவி கோண்டாவிலை அடைந்துவிடுமாம்.

ஆனால் கோண்டாவிலில் இருந்து கொக்குவிலுக்கு யாழ்தேவி போகவேண்டுமானால் நீலத்தாலியை மாற்றவேண்டும். உத்தரதேவி வந்துசேரும் மட்டும் யாழ்தேவி கோண்டாவிலில் காத்துக்கிடக்கவேண்டும். உத்தரதேவி வந்ததன் பின்னர்  யாழ்தேவி நீலத்தாலியையையும் உத்தரதேவி  பச்சைதாலியையும் எடுத்துக்கொண்டு அந்தந்த திசையில் பயணிக்குமாம்.

ரயில் பயணமே ஒரு வாழ்க்கை என்பர் அதில் ரயில்சாரதிகளுக்கும் ஸ்டேசன் மாஸ்டர்களுக்கும் இடையில் இடம்பெறும் தாலி மாற்றம் இசகு பிசகாகினால் பயணிகளுக்கு சங்குதான்.


You May Also Like

  Comments - 0

  • Kavi Friday, 17 October 2014 05:33 AM

    This is very useful article, because we need to know the fact. Thanks for the good Knowledgeable article.

    Reply : 0       0

    Mutabi3 Saturday, 18 October 2014 04:29 PM

    நல்லதொரு கட்டுரை. மேலும் தகவல்களை உள்ளடக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனைய பாதைகளுக்குமான தகவல்களும் உள்ளடக்கப்படுவது சிறந்தது. புகையிரத திணைக்களத்தின் உதவியுடன் இலங்கை ரயில்வே வரலாற்றை தமிழில் ஆவணப்படுத்த கட்டுரையாசிரியர் முயற்சிக்க வேண்டும் என்பது எனது பணிவான ஆசை. மட்டக்களப்பு – கொழும்பு பாதியில் ஹிஜ்ரா என்றொரு ரயில் சேவை இருந்ததாக ஞாபகம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X