2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் யாத்திரை

Thipaan   / 2014 ஒக்டோபர் 19 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்தேவி ரயில் 24 வருடங்களுக்குப் பின்னர் கடந்த 13ஆம் திகதி மீண்டும் யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்றது.  வடகில் வாழும் தமிழ் மக்களையும் தெற்கில் வாழும் சிங்கள மக்களையும் இணைக்கும் பாலம் போன்ற இந்த ரயிலை அன்று ஓட்டிச் சென்ற சாரதியின் தந்தை தமிழர் என்றும் தாய் சிங்களவர் என்றும் செய்திகள் கூறின. தற்செயலானதாயினும் அதுவும் முக்கியமான செய்தி தான்.

13ஆம் திகதி வரை யாழ்தேவி ரயில், பளை ரயில் நிலையம் வரை மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தது. 13ஆம் திகதி யாழ்ப்பாணம் வரையிவான அதன் பிரயாணத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதில் சென்று யாழ்ப்பாண ரயில் நிலையம் உட்பட பல இடங்களை திறந்து வைத்தார்.

அவரது இந்தப் பயணத்தை அடுத்த வருடம் நடைபெறப் போவதாகக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட தேர்தல் யாத்திரையாகவே பலர் கருதுகிறார்கள்.

அது உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமது மூன்று நாள் வடக்கு விஜயத்தின் போது அவர் செய்தவற்றையும் கூறியவற்றையும் பார்க்கும் போது அவை அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து, தமிழ் மக்களை பிரிப்பதையும் தமது அரசாங்கத்தின் பால் தமிழ் மக்களை ஈர்ப்பதையும் நோக்காகக் கொண்டதாகவே அமைந்திருந்தன.

எனவே அதனை ஜனாதிபதித் தேர்தலை இலக்காக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பயணமாகக் கருதுவது நியாயமே.

தமிழீழ வைப்பகம் என்ற பெயரில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினரால் நடத்தப்பட்டு வந்த வங்கிகளில் வட பகுதி மக்கள் வைப்பீடு செய்திருந்து, இறுதிப் போரின் போது படையினரால் கைப்பற்றப்பட்ட நகைகளில் ஒரு பகுதியையும் ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது அவற்றின் உரிமையாளர்களிடம் கையளித்தார்.

சுமார் 20,000 காணிகளின் உறுதிப்ப பத்திரங்களையும் அவர் மக்களிடம் கையளித்தார்.

இவை நீண்டகாலமாக மக்களிடம் கையளிக்கப்படாது வைக்கப்பட்டு இருந்தவையே. அவற்றை நீண்ட காலத்துக்;கு முன்னரே அதிகாரிகளால் மக்களிடம் கையளிப்பட்டு இருக்கலாம்.

ஆனால், இவ்வளவு காலம் கடந்து ஜனாதிபதித் தேர்தலொன்று வரப் போகிறது என்ற செய்தியோடு ஜனாதிபதியே அவற்றை கையளிப்பதை அரசியல் லாபம் தேடும் செயலாக எவரும் கருதினால் அதனை குறைகூறவும் முடியாது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பல கூட்டங்களில் உரையாற்றினார். அவற்றின் போது, தமிழ் மக்களை மட்டுமன்றி தெற்கில் தமது அரசியல் போட்டியாளர்களையும் மனதில் வைத்து சில விடயங்களை அவர் கூறினார்.

புலம் பெயர் தமிழர்களும் தமிழத்; தேசியக் கூட்டமைப்பினரும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால், தாம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்து செய்யத் தயார் என்று அவர் 12ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது கூறியது அவ்வாறானதொன்றே.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்பது புலம் பெயர் தமிழர்களினதோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்மைப்பினதோ கோரிக்கையல்ல.

அவர்களில் சிலர் அதனை விரும்பலாம். ஆனால் அவர்கள் எப்போதும் அதனை அரசியல் கோரிக்கையாக முன்வைத்ததில்லை. எனவே, இது தமிழ்த் தலைவர்களுக்கன்றி தெற்கில் தமது அரசியல் போட்டியாளர்களை மனதில் வைத்து ஜனாதிபதி; கூறியதொன்று என்பது தெளிவாகிறது.

தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, இடதுசாரி கட்சிகள், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அத்துரலியே ரத்ன தேரரின் தலைமையிலான பிவிதுரு ஹெட்டக் (தூய நாளை) அமைப்பு மற்றும் மாதுலுவாவே சோபித்த தேரரின் தலைமையிலான நீதியான சமூகத்துக்கான தேசிய அமைப்பு, ஆகியனவே நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. வடக்கில் அவ்வாறானதோர் கோரிக்கை இல்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூற்றின் படி தமிழீழ அபாயத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவே அவர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை வைத்துக் கொண்டிருக்கிறார்.

இது சற்று விசித்திரமானதாகவே தெரிகிறது. கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக, நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ உட்பட பலர் கோஷம் எழுப்பி வந்த போதிலும் தமிழீழத்தை தடுப்பதற்காகவே தாம் அதனை வைத்திருப்பதாக இதுவரை எந்த ஆட்சியாளனும் கூறவில்லை. இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் செயலாகும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வேன் என்பதே 2005ஆம் ஆண்டு முதன் முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான வாக்குறுதியாகியது.

அப்போது தமிழீழக் கோரிக்கை மட்டுமன்றி அதற்கான ஆயுதப் போரொன்றே நடந்து கொண்டிருந்தது. அவ்விரண்டும் இருக்கும் நிலையிலேயே நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக அவர் அன்று வாக்குறுதியளித்தாரேயன்றி தமிழீழக் கோரிக்கையையும் முடிவுக்குக் கொண்டு வந்து நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வேன் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை.

தமிழீழக் கோரிக்கையை ஆதரிப்பதாக ஜனாதிபதி, தமிழ் தேசியக் கூட்;மைப்பையும் இந்த உரையின் மூலம் குறை கூறியிருக்கிறார்.

இது முற்றிலும் உண்மையல்ல. ஆனால் அக் கூட்டமைப்பு தமிழீழக் கோரிக்கையை இன்னமும் ஆதரிக்கிறதா என்று சந்தேகிக்கும் வகையில் நடந்து கொள்கிறது என்பது உண்மையே.

தாம் கேட்பது தனித் தமிழ் நாடல்ல, ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறைக்கான அதிகார பரவலாக்களே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல முறை கூறியிருக்கிறது. இன்னமும் கூறி வருகிறது.

அண்மையில் ஆறு அமைப்புக்களால் கூட்டமைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றின் போது இலங்கை ஒற்றையாட்சியுள்ள நாடு என்பதை தாம் ஏற்பதாக கூட்டமைப்பு சத்தியக் கடதாசி மூலம் நீதிமன்றத்துக்;கு தெரிவித்தது.

ஆனால், சிலவேளைகளில் கூட்டமைப்பு மயக்கமான செய்திகளையும் வழங்குகிறது. உதாரணமாக மேற்படி வழக்கையே எடுத்துக் கொள்ளலாம்.
இலங்கை ஒற்றையாட்சியுள்ள நாடு என்பதை தாம் ஏற்பதாகவே கூட்டமைப்பு இந்த வழக்கின் போது கூறியதேயல்லாமல், இலங்கை ஒற்றையாட்சி உள்ள நாடாகத் தான் இருக்க வேண்டுமா எனறு கேட்டால் கூட்டமைப்பு என்ன பதில் கூறும் என்பது தெளிவாகவில்லை.

அதேபோல் 2012ஆம் ஆண்டு மே மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14ஆவது மாநாட்டின் போது அக் கட்சியின் அப்போதைய தலைவர் இரா. சம்பந்தன் உள்வாரி சுய நிரணய உரிமை வழங்கப்படாவிட்டால் தாம் வெளிவாரி சுயநிர்ணய உரிமைக்காக போராடவும் தயார் என்றார்.

வெளிவாரி சுயநிர்ணய உரிமை என்பது தனி நாட்டுக்கான உரிமை என்பது தெரிந்ததே. கடந்த வருடம் வட மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற போது கூட்டமைப்பின் தலைவர்கள் புலிகளையும் அவர்களின் போராட்டத்தையும் போற்றிப் புகழ்ந்தனர்.

இது நேர்மையாக செய்ததா இல்லையா என்பது வேறு விடயம். அதேபோல் இவ்வாறு செய்தமை சரியா பிழையா என்பதும் வேறு விடயம்.
ஆனால், அவ்வாறு நடந்து கொள்ளும் போது ஜனாதிபதியின் குற்றச்சாட்டு போன்றவை நியாயப்படுத்தப்படுகிறது.

எனினும், ஜனாதிபதி வடக்குக்குச் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழத்துக்காக போராடுகிறது என்று குற்றஞ்சாட்டுவதால் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெறுக்கப் போவதில்லை. சிலவேளை அது அவர்களுக்கு சாதகமான பிரசாரமாகவே அமையும்.

வாக்கு வேட்டைக்குத் தான் ஜனாதிபதி  வடக்கே சென்றார் என்றால் இவ்வாறான பேச்சுக்களால் அவரது கட்சிக்குத் தான் நட்டம் ஏற்படப்போகிறது.

ஏனெனில் போர் காலத்தில் வட பகுதி மக்கள் சொல்லொனா துன்பங்களை அனுபவித்தார்கள் என்பது உண்iயாக இருந்த போதிலும் அதேபோல் போர் முடிவடைந்த பின்னர் அம் மக்கள் சாதாரண வாழ்க்கையை நடத்த முடிந்த போதிலும் அவர்கள் தமிழீழக் கோரிக்கையையோ அல்லது அதற்கான போராட்டத்தையோ வெறுக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை.

கடந்த வருடம் வட மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்ற போதும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இதே குற்றச்சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சுமத்தியது.

ஆயுத பலத்தால் அடைய முடியாது போன தமிழ் ஈழத்தை சட்ட ரீதியாக பெறுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரான சி.வி.விக்னேஸ்வரனை முதலைமைச்சர் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது என்று அப்போது ஆளும் கட்சியினர் கூறினர்.
ஆனால், அந்தப் பிரசாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமாக அமைந்தது எனலாம்.

ஜனாதிபதியின் இந்த விஜயம் அரசாங்கத்துக்கும் வட மாகாண சபைக்கும் இடையிலான முறுகல் நிலையை மீண்டும் ஒரு முறை அரங்கத்துக்கு கொண்டு வந்துள்ளது.

அவரது இந்த விஜயத்தின் போது வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் உட்பட அவர் கலந்து கொண்ட எந்தவொரு நிகழ்ச்சியிலும் வட மாகாண சபையினதோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ தலைவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. 

வட பகுதி மக்களின் நலனுக்காக அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்களின் பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அக்கறையில்லை என்பதை இது காட்டுகிறது என்று கூற இதனால் அரசாங்கம் முற்பட்டது.

அத்தோடு வட மாகாண சபை வைக்கோல் பட்டடை நாயைப் போல் வடக்கில் மக்கள் நலனுக்காக தாம் எதையும் செய்வதுமில்லை அரசாங்கத்துக்;கு அதற்காக இடமளிப்பதுமில்லை என்றும் ஜனாதிபதி கிளிநொச்சியில் உரையாற்றும் போது கூறியிருக்கிறார்.

இது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கருத்திற் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சியாகவே தெரிகிறது.

ஆனால் தமக்கு தமது கடமைகளை நிறைவேற்ற அரசாங்கம் போதிய அதிகாரங்களை வழங்குவதில்லை என்றும் பல்வேறு இடையூறுகளை செய்வதாகவுமே வட மாகாண சபையின் தலைவர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, ஜனாதிபதியின் வட மாகாண பயணத்தைப் பற்றிய நிகழ்ச்சி நிரலைப் பற்றி தம்மோடு கலந்துரையாடப்படவில்லை என்றும் மாகாண சபை நிறுவப்படு முன் 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என்றே அதற்கான அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும்; அதன் படி தாம் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்றும் வட மாகாண முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

தமிழ் மக்கள், ஜனாதிபதி கூறுவதை ஏற்பார்களா அல்லது முதலமைச்சர் கூறுவதை ஏற்பார்களா?

முதலமைச்சரின் வாதத்தில் நியாயம் இருந்த போதிலும் அவரோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களோ அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததால் கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதியின் முயற்சி இலகுவாகியது என்பதையும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரேனும் கிளிநொச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் வைக்கோல் பட்டடைக் கதையை ஜனாதிபதி கூறுவாரா என்பது சந்தேகமே. அவ்வாறு கூறினாலும் உடனே அதற்கு பதிலளிக்க வாய்ப்பும் கூட்டமைப்பினருக்கு கிடைத்திருக்கும்.

தமிழ் மக்களின் மனதில் மாற்றம் ஏற்படும் என்ற பயத்தினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாம் கலந்து கொண்ட கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

இது நியாயமான கற்பனைத் தான். ஏனெனில் தமிழ் தலைவர்கள் ஜனாதிபதியுடன் வடக்கில் ஒரே மேடைகளில் இருப்பதைக் காணும் வட பகுதி மக்கள் இவர்கள் எல்லோரும் ஒன்று தான் என்று நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தாம் எதைக் கூறினாலும் தமிழ் மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கப் போவதில்லை என்பதை தாம் அறிந்திருந்ததாகவும் ஜனாதிபதி தமது வட பகுதி விஜயத்தின் போது கூறியிருந்தார்.

இது அரசாங்கமே தமது நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கான அவசியத்தை தான் எடுத்துக் கூறுகிறதேயல்லாமல் வேறொன்றையும் வலியுறுத்தவில்லை.

தமிழ்த் தலைவர்கள் இனவாதத்தை தூண்டி மக்களை தம் வசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று ஆளும் கட்சியினர் இதற்கு காரணம் கூறலாம். ஆனால், ஆளும் கட்சி உட்பட தென் பகுதி அரசியல்வாதிகளும் அதையே தான் செய்கிறார்கள்.

புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை முறையானதல்ல என லக்ஸம்பேர்க் நீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே அத் தீர்ப்புக்குக் காரணமென சிலர் கூச்சலிடுவது அதற்கு சிறந்த உதாரணமாகும்.

இது ரணில் விக்கிரமசிங்கவின் தவறல்ல. இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சின் திறனின்மையே. ஆனால், இதை அரசியலாக்குவதன் மூலம் தேர்தல் பிரசாரம் எங்கே போகப் போகின்றது என்பதை ஊகித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

தமிழீழத்தை கைவிட்டால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை கைவிடுவேன் என்று ஜனாதிபதி கூறியிருப்பதால், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்கிறவர்கள் தமிழீழத்துக்;காகவே அவ்வாறு கூச்சலிடுகிறார்கள் என்றும் ஆளும் கட்சியினர் நாளை கூறலாம்.

சுருக்கமாக வரப் போகும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார மேடைகள் புலி எதிர்ப்பு என்ற போர்வையில் இனவாதத்தை கக்கும் மேடைகளாக மாறும் அறிகுறிகள் ஏற்கனவே தெரிகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X