2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஜாதிக ஹெல உறுமயவின் பரிசு

Thipaan   / 2014 நவம்பர் 20 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69ஆவது பிறந்த தினத்துக்கு ஜாதிக ஹெல உறுமய, சிறப்புப் பரிசொன்றை அளித்திருக்கின்றது. அது, ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கும்(?) ஜாதிக ஹெல உறுமய, தன்னுடைய கட்சியினர் வகித்து வந்த அமைச்சுப் பதவிகள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புக்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக கடந்த செவ்வாய்க்கிழமை (18) அறிவித்துள்ளது.

அந்த முடிவை ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தர்கள் கொழும்பில் ஊடகங்களிடம் வெளியிடுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, குடும்பத்தினர், அரச படை பரிவாரங்கள் சூழ தன்னுடைய பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடியிருந்தார்.

 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிகளில், அடிப்படைவாத இனவாத, மதவாத கட்சிகளின் பங்கு அதிகமிருக்கின்றது. குறிப்பாக அவரது முதலாவது ஜனாதிபதித் தேர்தல் வெற்றி என்பது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமய இல்லாவிட்டால் சாத்தியமாகியிருக்காது.

ஏனெனில், மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிகளில், சிறுபான்மை வாக்குகள் அவருக்கு அவ்வளவாக எந்தக் காலத்திலும் கிடைத்தது இல்லை. இப்போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் சில முஸ்லிம் கட்சிகளின் கூட்டினால் குறிப்பிட்டளவான வாக்குகள் கிடைத்திருக்கின்றன என்பது உண்மை. ஆனால், அது, பெரும் தேர்தல்களில் அவருக்கு சார்பாக பெரும்பாலும் இருந்திருக்கவில்லை.

இப்படியான நிலையில், பௌத்த அடிப்படைவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் அரசாங்கத்துக்கு எதிரான முடிவு, பெரும் அடியாக விழுந்திருக்கின்றது. அரசாங்கத்தின் பங்காளியாக ஜாதிக ஹெல உறுமய இருந்து வந்தாலும் சில வருடங்களாகவே அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதி மீதும் அதிருப்தியை வெளிப்படையாக முன்வைத்து வந்தது.

குறிப்பாக, பொது பல சேனா என்கிற அமைப்பின் பெரும் வளர்ச்சிக்கு அரசாங்கம் ஆதரவளிக்கின்றது என்ற பரவலான கருத்து, ஜாதிக ஹெல உறுமயவை மிகவும் சினம் கொள்ள வைத்திருந்தது. அது, ஓர் உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்ற பழமொழியைப் பிரதிபலிப்பது போன்றது.

மக்களை நோக்கிய அரசியலை ஒவ்வொரு கட்சியும் தலைவர்களும் தமது புனிதத் தன்மை தொடர்பில் வெளிப்படுத்திக் கொண்டே அறிவிக்கின்றார்கள். அதுவும், தேர்தல் காலத்தில் நிகழும் அரங்கேற்றம் என்பது பெரும் சுவாரஸ்யங்களினால் ஆனது.

அதன், பெரும் அரங்கேற்றத்தின் முதல் அத்தியாயத்தை ஜாதிக ஹெல உறுமய பகுதியளவில் அரங்கேற்றியிருக்கின்றது. இதில், இன்னொரு விடயம் இருக்கின்றது. அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் தீர்மானமான முடிவை அறிவிக்காமல், அமைச்சு உள்ளிட்ட பொறுப்புக்களிலிருந்து விலகுவதாக மட்டுமே அறிவித்திருக்கின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

 ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர், தமது முடிவை கீழுள்ளவாறு அறிவித்தார். 'ஜனாதிபதி (மஹிந்த ராஜபக்ஷவு)க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். முற்போக்கு சிந்தனையினூடாக நாட்டினதும் புத்த சாசனத்தினதும் நலன் கருதி, ஜனாதிபதிக்கு பரிசு ஒன்றை வழங்குவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். மன்னர் மகாசேனன் நாட்டுக்கு அளப்பெரிய சேவையாற்றினார். பின்னர், தவறான நண்பர்களின் தொடர்பினால் அவர் தவறான வழியில் சென்றார்.

மகா விகாரையை அழித்தார். நற்பண்பு இல்லாமற்போனது. நாட்டில் ஊழல் வலுப்பெற்றது. இதன்போது, மகாசேனனுக்கு எதிராக மக்கள் அணி திரண்டனர். அந்தப் போராட்டத்துக்கு மகாசேனனின் நல்ல நண்பரான மேகவர்ண அபய என்ற அமைச்சர் தலைமை வகித்தார்.

ஒருநாள், அமைச்சருக்கு சுவையான உணவு கிடைத்தது. தனது நண்பரான மகாசேனனுடன் அதனைப் பகிர்ந்து கொள்வதற்காக மேகவர்ண அபய செல்கின்றார். 'எனக்கு எதிரான பாரிய போராட்டத்துக்கு தலைமை தாங்கும் தாங்கள், ஏன் இந்த உணவை பகிர்ந்து கொள்வதற்காக வந்தீர்கள்?', என மன்னர் கேள்வியெழுப்புகின்றார்.

'மன்னரே, உங்களுடன் எனக்கு தனிப்பட்ட பிரச்சினையில்லை, விரோதமில்லை. உங்களுடைய கொள்கை தொடர்பிலேயே பிரச்சினையுள்ளது. அதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே போராட்டத்துக்கு தலைமை வகித்தேன்' என்று மேகவர்ண அபய கூறுகின்றார்.

ஆகவே, நாட்டுக்காகவும் இனத்துக்காகவும் புத்த சாசனத்துக்காகவும் இன்று எமது தீர்மானத்தை அறிவிக்கின்றோம். நண்பர் செய்யும் வழிகாட்டலாக இதனைக் கொள்ளுமாறு நாம் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.'

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தமக்கு தனிப்பட்ட விரோதங்கள் இல்லை என்பதை 'மகாசேனன்- மேகவர்ண அபய' என்ற வரலாற்று மனிதர்களின் கதையினூடு ஜாதிக ஹெல உறுமய வெளிப்படுத்தியிருக்கின்றது. இது, மிகவும் சிக்கலான விடயத்தையும் தெளிவாக முன்வைக்கும் உத்தி.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கல், நீதிமன்றத்தின் சுயாதீனத்தை உறுதி செய்தல், ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 35 அம்சங்கள் அடங்கிய  கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனும் ஜாதிக ஹெல உறுமய, அண்மைய நாட்களில் பேச்சுக்களில்  ஈடுபட்டு வந்தது.

அதன் அடுத்த கட்டம் 19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தைக் கோருவதாக இருந்தது. அதில், ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரர் முன்னின்று செயலாற்றினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் போக்கில் அதிகம் அதிருப்தி கொண்டவராக முதலில் காட்டிய ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தர் அத்துரலியே ரத்ன தேரர். அவரின் 19ஆவது அரசியல் திருத்த முன்வைப்பு நிகழ்வின்போது தற்போது பொது எதிரணியாக உருவெடுத்துள்ள கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் பங்கெடுத்திருந்தன.

அத்தோடு, அவரினால் ஒழுங்கமைக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிரான பொதுக் கூட்டத்தின் மேடையையும் எதிரணியின் முக்கியஸ்தர்களே அலங்கரித்திருந்தனர். அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அது, அரசாங்கத்தோடு பங்காளியாக இருந்து கொண்டு எதிர்க்கட்சிகளோடு கைகோர்க்கும் நிகழ்வாக பார்க்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் முன்னெடுத்த யுத்தத்துக்கு ஜாதிக ஹெல உறுமய ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. இதன்மூலம் பிரவினைவாதம் தோற்கடிக்கப்பட்டு நாடு காப்பாற்றப்பட்டது.

ஆனால், புலிகள் அழிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டில் புத்த சாசனத்தையும் நல்லாட்சியையும் காப்பாற்றுவதற்கான கரிசனையை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. ஆகவே, அரசாங்கத்தோடு முரண்பட்டிருக்கின்றோம் என்ற கருத்தியலையே  ஜாதிக ஹெல உறுமய, சிங்கள மக்களிடம் கொண்டு சேர்க்க முனைந்திருக்கின்றது. அதில் குறிப்பிட்டளவு வெற்றியும் பெற்றிருக்கிறது என்று கொள்ளலாம்.

அத்தோடு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக மக்கள் மெல்ல மெல்ல திரள்கிறார்கள் என்ற  உண்மை, அதன் பக்கம் ஜாதிக ஹெல உறுமயவையும் பலமான செய்தியொன்றை அரசாங்கத்துக்கு சொல்ல வைத்திருக்கின்றது. அதுவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிரான அவர்களின் கோஷமும் 19ஆவது அரசியல் சீர் திருத்தம் தொடர்பிலான கோரிக்கைகளிலும் அதிகம் பிரதிபலிக்கின்றது. இது, தேர்தல் அரசியலில் வாக்குகளையும் மக்கள் செல்வாக்கையும் தக்க வைக்க உதவும்.

 ஜாதிக ஹெல உறுமயவின் இந்த முடிவு, மாற்றமொன்றின் ஆரம்பமாகவும் சிலவேளை அமையலாம். ஏனெனில், ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பெரும் தேர்தல்கள் தான், கட்சி தாவல்கள், கூட்டணி சேர்த்தல்கள் என்ற பெரும் அரங்காற்றுகைகளுக்கான காலம். அதுவரை அதிருப்திகளோடு கூட்டுக் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தவர்கள், வெளிப்படையாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தனிக் குடித்தனம் போவார்கள் அல்லது புதிய கூட்டுக் குடித்தனத்துக்கு தயாராகுவார்கள்.

பொது எதிரணி, மெல்ல மெல்ல வலுப்பெற்று வரும் நிலையில், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும் கூட ஜாதிக ஹெல உறுமயவின் முடிவையொத்த முடிவுகளுக்கு எதிர்காலத்தில் வரலாம். ஏனெனில், 'ராஜபக்ஷ'க்களின் அதிகார உச்சம் பற்றி, முக்கிய அமைச்சர்களுக்கே பெரும் அதிருப்திகள் உண்டு.

அரசாங்கத்துக்கு எதிராக மக்களின் நிலைப்பாடும் அதிகரித்து வருகின்ற நிலையில், எதிர்காலத்தில் அதிகாரத்திலும் கூட மாற்றங்கள் ஏற்படுவதற்காக சாத்தியங்கள் அதிகம். அது, ஜனாதிபதித் தேர்தலில் இல்லாவிட்டாலும்,  நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தியமாகலாம். அவ்வாறான நிலையில், தோல்வியின் பக்கம் நிற்பதால் பயனில்லை. வெற்றி வாய்ப்புள்ள பக்கம் தாவுவதே தம்மை தக்க வைக்க உதவும் என்று அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளும் முக்கியஸ்தர்களும் கூட எண்ணுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.

இன்னொருபுறம், பொது எதிரணியோடு பேச்சுக்களில் ஈடுபடுவது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. பொது எதிரணியின் அடிப்படைய இணக்க கோரிக்கையான 'நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல்' என்ற விடயத்தில் ஜாதிக ஹெல உறுமயவும் ஒன்றித்தேயிருக்கின்றது. அப்படியான நிலையில், பொது எதிரணிக்குள் ஜாதிக ஹெல உறுமய கலப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் காய் நகர்த்தல்களின் போக்கில், அரசாங்கத்துக்குள் ஜாதிக ஹெல உறுமய முற்றுமுழுதாக உள்வாங்கப்படும் சூழலும் உண்டு. அதற்கான வாய்ப்புக்களையும் மறுப்பதற்கில்லை. இந்த நிலையில், வரும் ஜனாதிபதித் தேர்தல் பெரும் காட்சி மாற்றங்களைக் கொண்டதாக இருக்கப் போகின்றது என்பது மட்டும் உண்மை. ஆனால், அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையாக அமையுமா என்பதுதான் பெரும் கேள்விக்குறி!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X