2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுபான்மையினரிடம் தீர்மானம்

Thipaan   / 2014 நவம்பர் 23 , பி.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதியில் தம்மாலும் எதனையும் சாதிக்க முடியும் என்பதை இந்நாட்டு எதிர்க்கட்சிகள் நிரூபித்துவிட்டன. ஒரு நீண்ட கால போரில் வெற்றி பெறுவதற்கு பாதுகாப்புப் படைகளுக்கு வழிகாட்டிய உளவுத்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, அக் கட்சிகள் அரசாங்கத்தின் முக்கிய நபர் ஒருவரை தமது அணியில் சேர்த்துக் கொண்டன.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று பலரால் குறிப்பிடப்படும் அளவுக்கு, அரசாங்கத்தின் மூத்தவரான சுகாதார அமைச்சராகவிருந்த மைத்திரிபால சிறிசேனவை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் கண்ணில் படாமலே தம் வசம் இழுத்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அவரை எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க் கட்சிகள் ஏற்பாடு செய்திருக்கின்றன.

மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கடற்றொழில் அமைச்சராகவிருந்த ராஜித்த சேனாரத்வும் ஆளும் கட்சியில் இருந்து விலகிய மேலும் சிலரும் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகயிலாளர் மாநாடொன்றின் போது இதனை அறிவித்தனர். இந்த மாநாட்டில், ஐ.தே.க. தலைவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அன்றே நடைபெற்ற ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தில் இக்கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தது.

மைத்திரிபாலவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தும் திட்டமானது, திடீரென ஓரிரு நாட்களில் முடிவு செய்யக் கூடிய விடயம் அல்ல. இதனை ஓரிரு பேச்சுவார்த்தைகளில் முடிவு செய்யவும் முடியாது.

பல மாதங்களாக இல்லாவிட்டால் பல வாரங்களாக இரகசியமாக பல சுற்று பேச்சுவார்த்iதைகளை நடத்தி ஐக்கிய தேசிய கட்சியினதும் மக்கள் விடுதலை முன்னணி தவிர்ந்த எதிர்க் கட்சியின் ஏனைய சிறு கட்சிகளினதும் இணக்கத்தைப் பெற்று, சிறிசேனவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்துவதானது பாரிய விடயமாகும்.

இதைப் பற்றி வதந்திகள் பரவியிருந்த போதிலும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கத்தின் தலைவர்களோ கடைசி நாள் வரை அதனை நம்பியதாகவோ உளவுத் துறையினர் மூலம் அதனை அறிந்து கொண்டதாகவோ தெரியவில்லை. சிறிதளவேனும் சந்தேகம் ஏற்பட்டு இருந்தால் நிச்சயமாக ஜனாதிபதி, மைத்திரிபாலவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் அமைச்சர் பதவியியலிருந்தும் நீக்கியிருப்பார். சிலவேளை அவர் வேறு பல பிரச்சினைகளையும் எதிர்நோக்கியிருப்பார். சிலவேளை எதிர்க்கட்சிகளின் திட்டமும் குழம்பிப்போயிருக்கும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பதவிக் காலத்தின் நான்காண்டுகள் பூர்த்தியாகியவுடன் மற்றுமொரு ஜனாதிபதித் தேர்தலை நடத்த எடுத்த முடிவு உத்தியோகபூர்வமாக கடந்த 20ஆம் திகதி வெளியிட்ட போதிலும் அந்த முடிவு பல மாதங்களுக்கு முன்னரே உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளியிடப்பட்டு, அதன் படி பல அரசியல் கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.

மக்கள் விடுதலை முன்னணி, ஜனாதிபதியின் இந்த முயற்சியை சட்ட ரீதியாக தோற்கடிப்பதற்காக மக்களை அறிவூட்டி வந்தது. ஐக்கிய தேசிய கட்சி, மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் தோற்கடிப்பதற்காக நடவடிக்கை எடுப்பதற்காக கூறி வந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்று தெளிவாக தெரியவில்லை. அவை எதிர்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக பல செய்திகள் வந்த போதிலும் அதற்கான தெளிவானதோர் திட்டமோ அல்லது முயற்சியோ தென்படவில்லை.

ஐக்கிய தேசிய கட்சி, சில நாட்களில் பொது வேட்பாளர் ஒருவரைப் பற்றியும் வேறு சில நாட்களில் தமது கட்சி வேட்பாளர் ஒருவரைப் பற்றியும் கருத்து வெளியிட்டு வந்தது. மாதுளுவாவே சோபித்த தேரர், பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்காகவென, நீதியான சமூகத்துக்கான அமைப்பை உருவாக்கினார். மக்கள் விடுதலை முன்னணி இந்த பொது வேட்பாளர் என்ற கருத்தை நிராகரிக்கவும் இல்லை. ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

அதேவேளை, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க வருவார் என்றும் ஐ.தே.க. தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய வருவார் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வருவார் என்றும் சோபித்த தேரர் வருவார் என்றும் பல்வேறு கருத்துக்கள் பரவி வந்தன. எனவே தான் எதிர்க்கட்சிகள் தடுமாறுவதாக நாமும் கடந்த வாரம் கூறியிருந்தோம்.

எனினும், அதற்கிடையே இரகசியத் திட்டமொன்று செயற்பட்டு வந்ததை எவரும் கண்டுகொள்ளவில்லை. அத் திட்டத்தை செயற்படுத்தி வந்தவர்கள் மற்றவர்களை திசை திருப்பி வந்தமையும் இதற்கு காரணமாகியது. உதாரணமாக, மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவித்த கடந்த வெள்ளிக்கிழமை, ஐ.தே.க. தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தது.

இந்த இரகசியத் திட்டத்தின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவே செயற்பட்டிருக்கிறார். அதன் பிரகாரமே மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த ஐ.தே.க.வும் இணக்கம் தெரிவித்து இருக்கிறது. 

பொது வேட்பாளர் யார் என்பதை, ஜனாதிபதித் தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர் தெரிவிப்பதாக ரணில் விக்கிரமசிங்க அதற்கு முன்னர் தெரிவித்து இருந்தார். எதிர்க் கட்சிகளின் இயலாமையை மறைப்பதற்காகவே அவர் அவ்வாறு கூறுகிறார் என்றே அப்போது பலர் நினைத்தனர். ஆனால் அதன் அர்த்தம் இப்போது தான் தெரிகிறது.

மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நிறுத்தும் திட்டத்தை முன்கூட்டியே அறிவித்து இருந்தால், ஜனாதிபதி ராஜபக்ஷ தேர்தல் பற்றிய தமது உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிடாமல் சிலவேளை அதனை ஒத்திப் போடலாம்.

அப்போது எதிர்க் கட்சிகளின் திட்டம் குழம்பிப் போகலாம். அதேவேளை எதிர்க் கட்சிகளிடையே பொது வேட்பாளர் விடயத்தில் கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம். ஆனால், இப்போது எதிர்க் கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரையே தம் பக்கம் வளைத்துக் கொண்டதையிட்டு மகிழ்ச்சியோடு இருக்கின்றன. அதேவேளை, இனி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப் போட சட்டத்தில் இடம் இல்லை.

மைத்திரிபாலவுடன் அரசாங்கத்தின் சில அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் எம்.பிக்களும் அரசாங்கத்தில் இருந்து விலகியிருக்கிறார்கள். ராஜித்த சேனாரத்ன, துமிந்த திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ் குணவர்தன, ரஜீவ விஜேசிங்க ஆகியோர் 21ஆம் திகதி அவ்வாறு அரசாங்கத்தில் இருந்து விலகினர். ஆனால், அவர்கள் ஐ.தே.கவில் இணைந்ததாக கூறவில்லை. பின்னர் அன்றே மாலை நுவரெலியா மாவட்ட எம்.பி. பெருமாள் இராஜதுரையும் ஆளும் கட்சியிலிருந்து விலகி ஐ.தே.க.வில் இணைந்து கொண்டார்.

மேலும் பலரும் ஆளும் கட்சியில் இருந்து விலகி வரவிருப்பதாகவும் அவர்களை கட்டம் கட்டமாக வெளியே எடுப்பதாகவும் ராஜித சேனாரத்ன, மைத்திரிபாலவை பொது வேட்பாளராக நிறுத்துவதை அறிவித்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது கூறினார்.

ஏற்கனவே ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்களான சம்பிக்க ரணவக்கவும் உதய கம்மன்பிலவும் அரசாங்கத்தினதும் மேல் மாகாண சபையினதும் அமைச்சர் பதவிகளில் இருந்து விலகியிருந்தனர். அக் கட்சியின் தவிசாளர் அத்துரலியே ரத்ன தேரர், திலுபிட்டிய அபிவிருத்திக் குழுத்தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தார். ஆனால், அக் கட்சி ஆளும் கூட்டணியலிருந்து விலகவில்லை. விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கும் சில நாட்களுக்கு முன்னர், கடந்த 14ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினதும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியினதும் தலைவர்களில் ஒருவராகவிருந்து பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்த நந்தன குணதிலக்க, சுதந்திரக் கட்சியிலிருந்தும் பாணந்துறை நகர சபைத் தலைவர் பதவியிலிருந்தும் இராஜினாமாச் செய்தார். அவர் தான் இந்த வெடிப்பை ஆரம்பித்து வைத்தவர்.

ஜனாதிபதி சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார் என்பதே இவர்கள் அனைவரினதும் குற்றச்சாட்டாக இருக்கிறது. அமைச்சர்கள் இருந்த போதிலும் அவர்களுக்கு சுதந்திரமாக செயற்பட முடியாது என்றும் அமைச்சு செயலாளர்கள் மூலம் ஜனாதிபதியே சகல அமைச்சுக்களையும் வழிநடத்துகிறார் என்றும் நீதிமன்ற சுதந்திரமோ அல்லது ஊடக சுதந்திரமோ நாட்டில் இல்லை என்றும் நாட்டின் பொருளாதாரம் ஒரு குடுமபத்தின் கையில் இருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்துவிட்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி ராஜபக்ஷ, பின்னர் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அந்த ஆட்சி முறையை மேலும் பலப்படுத்திக் கொண்டதாகவும் குற்றஞ்சாட்டும் அவர்கள் அனைவரும், இப்போது அந்த அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தாமும் இது தொடர்பாக வருந்துவதாக இதற்கு முன்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களும் பல முறை கூறியிருக்கின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் ஆளும் கட்சியின் தலைவர்கள், சிறு பிள்ளைகளாவது ஏற்றுக் கொள்ளாத கருத்துக்களையே வெளியிட்டு வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழஹப்பெரும, விமல் வீரவன்ச ஆகியோர் வழமை போல் எதிர்க்கட்சிகளின் இந்தத் திட்டத்தின் பின்னால் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக கூறினர்.
இது பழைய பல்லவியே தான், அவர்களை எதிர்க்கும் எல்லோரும் வெளிநாட்டு சக்திகளால் வழிநடத்தப்படுபவர்கள் என்றே அவர்கள் எப்போதும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையிலேயே வெளிநாட்டு பணம் பெற்று இயங்கும் பொது பல சேனாவை அவர்கள் கட்டுப்படுத்துவதில்லை.

தமது மகன் விமுக்தி குமாரதுங்கவை இறுதியில் ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வருவதே சந்திரிகாவின் திட்டமாக இருப்பதாக, விமல் வீரவன்ச கூறினார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது தொடர்பான குற்றச்சாட்டைப் பற்றி குறிப்பிடுகையில், தாம் அதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் அதில் கலந்து கொள்ளாததால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய முடியவில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது கூறுகிறார்.

இதற்குத்தான் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டது என்று இப்போது தான் ஜனாதிபதி கூறுகிறார். இதற்கு முன்னர் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காக அது நியமிக்கப்பட்டதாகவே அரசாங்கம் கூறி வந்தது. அதேவேளை, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதானது ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதியாகும் அதற்காக மக்கள் ஆணையே கிடைத்திருக்கிறது. இனி எதற்கு தெரிவுக் குழுக்கள்? இது வெறும் மழுப்பலே தவிர வேறொன்றுமல்ல.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தெரிவுக்குழு வேண்டும் என்றால், அந்த வாக்குறுதிக்கு முரணாக கொண்டு வரப்பட்ட 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஆராய ஏன் தெரிவுக் குழு நியமிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேட்கலாம்.

தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பும் புலம் பெயர் தமிழர்களும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால், தாம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாகவே ஜனாதிபதி அண்மையில் கிளிநொச்சிக்குச் சென்ற வேளை கூறியிருந்தார். இப்போது தெரிவுக் குழுவொன்றைப் பற்றி கூறுகிறார். அவ்வாறாயின் தமிழீழக் கோரிக்கை இருக்கும் போதே ஆளும் கட்சியின் உறுப்பினர்களை அதிகமாகக் கொண்ட தெரிவுக் குழு அம் முறையை இரத்துச் செய்ய முடிவு செய்யுமா? 

ஆளும் கட்சியில் எவரும் சர்வாதிகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பதில்லை. அதேவேளை, மைத்திரிபால உட்பட எதிர்க்கட்சிகள் பதவிக்கு வந்து அமுலாக்குவதாகக் கூறும் வேலைத் திட்டத்தை இதுவரை விமர்சிக்கவும் இல்லை.

தாம் ஜனாதிபதி பதவியை ஏற்றதன் பின்னர், ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாகவும் 100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாகவும் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்து, முன்னர் அமுலில் இருந்த 17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீண்டும் அமுலுக்கு கொண்டு வருவதாகவும் மைத்திரிபால அறிவித்து இருக்கிறார். இதுவரை இக் கருத்துக்களை எவரும் விமர்சிக்கவில்லை.

100 நாட்களில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை எவ்வாறு இரத்துச் செய்யப் போகிறீர்கள் என்று கடந்த சனிக்கிழமை தனியார் தொலைக் காட்சி; நிகழ்ச்சியொன்றின் போது ஒருவர், மைத்திரிபாலவிடம் கேள்வி எழுப்பினார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கும் போது அதனை எவ்வாறு செய்வீர்கள் என்பதே அந்தக் கேள்வியின் அர்த்தமாகியது. அதற்கு பதிலளித்த மைத்திரிபால, அதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தலாம் என்று சட்ட ஆலோசகர்கள் தமக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக கூறினார்.

மறுபுறத்தில் இம் முறையை இரத்துச் செய்வதற்காக, தெரிவுக் குழுவொன்றை நியமித்ததாக ஜனாதிபதியே கூறுகிறார் என்றால், ஆளும் கட்சி அவ்வாறானதோர் அரசியலமைப்புத் திருத்தத்தை ஆதரிக்காமல் இருக்க முடியாது என்றும் வாதிடலாம்.

இந்தக் கொள்கைகள் ஆளும் கட்சியிலுள்ள பலரினதும் மனசாட்சியை கேள்விக்குறியாக்கிலாம். அதேவேளை, ஏற்கெனவே அரசாங்கத்தில் பதவிகளை துறந்த ஹெல உறுமயவின் தலைவர்களும் மைத்திரிபாலவின் பின்னால் அணி திரளக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவே தெரிகிறது. ஏனெனில், அவர்கள் முன்வைத்த ஆலோசனைகளை மைத்திரிபால, ஏறத்தாழ ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும் மைத்திரிபாலவை பாராட்டியிருந்தது. தேர்தலின் பின்னர் இந்தக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இப்போதிருந்தே தாம் மக்கள் அமைப்போன்றை உருவாக்குவதாகவும் அதன் படி மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை தீர்மானிக்கட்டு;ம் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூறினார்.

அதாவது அவர்களும் மைத்திரிபாலவின் திட்டத்தை ஆதரிக்கிறார்கள் என்பதே. இப்போது ஜனாதிபதித் தேர்தலின் இரண்டு பிரதான அணிகளும் தீர்மானிக்கப்பட்டுவிட்டன. பெரும்பான்மை மக்களின் வாக்குகள் அனேகமாக சரி சமமாக பிரியலாம். இந்தநிலையில், தமிழ், முஸ்லிம் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பதே முக்கியமான கேள்வியாகும். ஏனெனில், அவர்களிடமே சுமார் 25 வீத வாக்குகள் இருக்கின்றன.


 
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X