2021 மே 15, சனிக்கிழமை

அந்த ஐந்து நாட்களில் மர்மமான ‘தலையும்’ அநாதையான ‘முண்டமும்’

Editorial   / 2021 மார்ச் 04 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அந்த ஐந்து நாட்களில் மர்மமான ‘தலையும்’ அநாதையான ‘முண்டமும்’

“பெரிய மனிதர்கள், எனக்குப் பெரியவர்கள் அல்ல; நல்லவர்களே எனக்குப் பெரியவர்கள்” இது, கொழும்பு டாம் வீதியில், பயணப் ​பையிலிருந்து தலையின்றி முண்டமாக மீட்கப்பட்ட குருவிட்டவைச் சேர்ந்த 30 வயதான திலினி யேஹன்சா என்ற யுவதியின் பேஸ் புக்கில் எழுதப்பட்டிருக்கும் வாசகமாகும்.

அந்த யுவதி, ஒரு சமூக ஆர்வலர்; சமூகத்தில் நன்மதிப்பைக் கொண்டிருந்தவர். ஆனால், திருமணம் முடித்த ஒருவருடன் ஏற்பட பேஸ்புக் காதலால், தலையிழந்து, முண்டம், கண்டந்துண்டங்களாக்கப்பட்டு, மிகக் கொடூரமாகப் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

தான் நேசித்த பெண்ணை, இதயம் இல்லாமல் எவனாலாவது கொல்ல முடிந்தால், அவனால் மனிதநேயத்தை எந்தளவுக்கு சில்லறைத்தனமாக  விற்பனை செய்யத் துணிவான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஒரு மனிதன், தலையைத் துண்டித்து, உடலை ஒரு பயணப் பையில் வைத்து, பஸ்ஸில் ஏற்றிக்கொள்ள முடியுமா? அந்தளவுக்கு யாருக்குத்தான் இதயத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்.

அவ்வாறு இதயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, படுகொலை செய்த, புத்தள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உபபொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.பி​ரேமசிறி, பதுளையிலுள்ள தனது வீட்டுக்குப் பின்னாலுள்ள காட்டுப்பகுதியில், தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மார்ச்  முதலாம் திகதி பகல் வேளையில், புறக்கோட்டை- ஐந்துலாம்புச் சந்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த, மர்மப் பயணப் பொதியில், பெண்ணொருவரின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சி.சி.ரி.வி கமெராக்களில் பதிவான காட்சிகளின் ஊடாக, விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.

மர்ம பயணப் பொதி வைக்கப்பட்டது மட்டுமன்றி, எங்கிருந்து ஏற்றப்பட்டது? உள்ளிட்ட விவரங்களும் மிகவேகமாகப் பொலிஸாரின் கைகளுக்குக் கிடைத்தன. அதனடிப்​படையில், ஹங்வெல விடுதிக்குச் சென்றிருந்த பொலிஸார், விவரங்களைத் திரட்டிக்கொண்டு, பதுளை- படல்கும்பர பிரதேசத்திலுள்ள சந்தேகநபரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் (02) சென்றனர்.
எனினும், “பொலிஸார் வந்திருக்கின்றனர்; ஏனென்று பாருங்கள்” எனத் தனது மனைவியிடம் தெரிவித்துவிட்டு, வீட்டின் பின்பக்கமாகத் தப்பியோடிய சந்​தேகநபர், தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

ஆனால், யுவதியின் தலைக்கு என்ன நடந்ததென்பது இதை எழுதும் வரையிலும் மர்மமாகவே இருந்தது.

பேஸ் புக்கின் ஊடாகக் காதல் கொண்ட இவ்விருவரும் அவ்வப்போது, வெளியில் சுற்றிதிரிந்துள்ளனர். இந்தக் ‘கள்ளக்காதல்’ எவ்வளவு நீளமானது? படுகொலை, தற்கொலை இவ்விரண்டுக்குமான காரணங்கள் என்ன என்பதெல்லாம் வெளியாகவில்லை.

ஆனால், ​பொலிஸ் உப பரிசோதகர், திருமணம் முடித்தவர்; யுவதி திருமணம் முடிக்காதவர் என்பது தெரியவந்தது. இதற்கிடையே, “அந்த யுவதி, கடுமையான அழுத்தங்களைத் தனக்கு கொடுத்து வந்தாள்” என உபபொலிஸ் பரிசோதகரின் எழுத்துமூல ஒப்புதல் வாக்குமூலத்தில் உள்ளது.

படல்கும்பர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அவர், விடுமுறையில் இருந்துள்ளார். கதிர்காமத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, வீட்டிலிருந்து பெப்ரவரி 27ஆம் திகதியன்று வெளியேறிய அந்த யுவதி, தனது காதலனுடன் சேர்ந்து, ஹங்வெல்லயிலுள்ள விடுதியொன்றுக்கு, பெப்ரவரி 28ஆம் திகதி வந்துள்ளனார்.

ஆனால், விடுதியை விட்டு வெளியேறும் போது, பயணப்பையுடன் இளைஞன் மட்டுமே சென்றுள்ளார் என்பதும் விடுதியிலுள்ள சி.சி.டி.வி கமெராக்களில் பதிவாகியுள்ளது. அத்துடன், விடுதியில் கையளிக்கப்பட்ட அடையாள அட்டையிலிருக்கும் விவரங்களை வைத்துக்கொண்டே, பதுளை- படல்கும்பர பிரதேசத்திலுள்ள சந்தேகநபரின் வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

சந்கேநபர், காட்டுக்குள் தப்பியோடி தலைமறைவாகி விட்டதால், பல பொலிஸ் குழுக்கள் அமைத்து தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனால், சந்தேகநபரான பொலிஸ் உபபரிசோதகர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

தாய் மற்றும் உறவினர்களால் யுவதி அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் கடந்த 27ஆம் திகதி கதிர்காமம் செல்வதாகத் தெரிவித்து இவர் வீட்டை விட்டு வெளியேறினார் எனவும் தெரிவித்துள்ள பொலிஸார், இந்த யுவதியின் சகோதரர் பிரதேச அரசியல்வாதி என்றும் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் வலைத்தளம் ஊடாகவே, யுவதியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட சந்தேகநபர், தான் திருமணம் முடிக்காதவர் என அடையாளம் காட்டிக்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவதியைக் கொலை செய்த சந்தேகநபர், தலையை வேறாக்கி முண்டத்தை மாத்திரம் பயணப் பொதியில் போட்டு, ஹங்வெல்ல நகரிலிருந்து தனியார் பஸ் ஒன்றில் ஏறி, புறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் அந்தப் பொதியைக் கைவிட்டு, தப்பிச் சென்றுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர் தங்கியிருந்த விடுதியையும் பொலிஸாரால் மார்ச் 2ஆம் திகதியன்று, பரிசோதனை செய்யப்பட்டதுடன், இதன்போது சந்தேகநபரின் பெயர், அவரது முகவரி உள்ளிட்ட விடயங்களை விடுதியிலிருந்து பெற்றுக்கொண்டுள்ளர்.

விடுதி உரிமையாளரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைக்கமைய, சந்தேகநபர் யுவதியுடன் விடுதிக்கு 28ஆம் திகதி வருகை தந்ததாகத் தெரியவந்துள்ளது.

இ​தேவேளை, சந்தேகநபருக்கு  18 வயது மகனொருவர் உள்ள நிலையில், சந்தேகநபரின் மனைவியிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, கடந்த 27ஆம் திகதி தனது கணவர் வீட்டை விட்டு வெளியேறி, 2ஆம் திகதி அதிகாலை மீண்டும் வீட்டுக்கு வந்ததாகவும் இவர் உபபொலிஸ் பரிசோதகராவதற்கு முன்னர், அமைச்சு பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றியவர் என்றும் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர், சிறந்த குத்துச்சண்டை வீரர் என்பதுடன், நீண்டகாலமாகப் பழகிவந்த யுவதியை, ஏன் கொன்றார் என்பது குறித்து, இதுவரை தகவல்கள் கசியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட யுவதியின் ஆடைகள் அடங்கிய பொதியொன்று, ஹங்வெல பஸ் தரிப்பிடத்திலிருந்து நேற்று முன்தினம் (2) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. யுவதி, சந்தேகநபரின் விவரங்கள் கிடைத்திருந்தாலும், ‘தலை’ மர்மமாகவே இருக்கிறது.  (கலாதேவி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .