2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

அநுரவை பார்த்தார் மஹிந்த

George   / 2016 ஜூன் 06 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவை, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ,

வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று நேற்று திங்கட்கிழமை பார்வையிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவுடன் அவருடைய மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவும் சென்றிருந்தார். 

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து திரும்பிய மஹிந்த ராஜபக்ஷ, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், 'அநுர சேனாநாயக்க, கொழும்பு மாநகரத்துக்கு பெரும் சேவையாற்றியவர். ஆகையால், அவரை சந்தித்து நலன் விசாரித்தேன்' என்றார். 

குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள், கொஸ்கம சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கேட்டபோது, 'கொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமை, தற்போதுள்ள இடத்திலிருந்து வேறு ஓர் இடத்துக்கு மாற்றுவதற்கு எனது ஆட்சிக் காலத்தில்  நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்று கூறிய மஹிந்த, 'அது தேசிய பாதுகாப்பு தொடர்பிலான விவகாரம் என்பதனால், எடுத்த எடுப்பிலேயே அதுதொடர்பில் கருத்துரைக்க முடியாது' என்றார். 

வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதசெய்யப்பட்ட அநுர சேனாநாயக்க, எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வசீம் தாஜுதீனின்  ஜனாஸா, நாரஹேன்பிட்டிய சாலிக்கா மைதானத்துக்கு அருகில், காரொன்றுக்குள் எரிந்த நிலையிலிருந்து 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .