2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

அர்ஜுன் மகேந்திரன் இல்லாமல் விசாரணை

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் பேர்பேச்சுவல் ட்ரெஸரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான அஜஹான் கார்டி புஞ்சிஹேவா ஆகிய பிரதிவாதிகள் இன்றி மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி வழக்கு விசாரணையை தொடருமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், நேற்று (13) கட்டளையிட்டது.

மேற்குறிப்பிட்ட பிரதிவாதிகள் இருவரும் இன்றி, வழக்கு விசாரணையைத் தொடர்வதற்கு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கின் பிரதிவாதிகள் இருவரும் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு  மூன்று நீதிபதிகள் அடங்கிய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது, வழக்கின் முதலாவது பிரதிவாதியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான, அவரை
நாடுகடத்துவதற்கான ஒப்படைக்கும் செயன்முறை சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இடம்பெற்று வருவதாகவும் அறிவித்தார்.

ஒப்படைக்கும் செயன்முறை முடிவடைய காலம் எடுக்கும் என்பதால், பிரதிவாதியான அர்ஜுன் மகேந்திரன் இல்லாமல் வழக்கு விசாரணையை தொடங்குவதற்கு தேவையான சாட்சியங்களைத் திரட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக மன்றில் அறிவித்தார்.

இந்த வழக்கின் 10 ஆவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள அஜஹான் கார்டி புஞ்சிஹேவா மலேசியாவில் வசிக்கிறார் என்றும், அவரை நாடு கடத்தும் சட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டு வருவது நடைமுறையில் சாத்தியமற்றது என தெரியவந்துள்ளதால், பிரதிவாதி இல்லாமல் வழக்கை விசாரிப்பதற்கு கோரிக்கை விடுத்தார்.

வழக்கை டிசெம்பர் 03 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க  உத்தரவிட்ட நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகள் இருவர் இன்றி வழக்கைத் தொடர தேவையான சாட்சியங்களைத் திரட்ட நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாட்டாளர் தரப்புக்கு உத்தரவிட்டனர்.

மேலும், அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையில் ஏதேனும் முன்னேற்றம் இருந்தால் மன்றுக்கு தெரியப்படுத்துமாறும் நீதிபதிகள் குழாம் அறிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .