2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஆயுதக் களஞ்சியசாலை தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

Princiya Dixci   / 2016 ஜூன் 06 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) மாலை 06 மணியளவில் ஏற்பட்ட தீ, இன்று திங்கட்கிழமை (06) அதிகாலை 01 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 

சுமார் 07 மணித்தியாலப் போராட்டத்தின் பின்னர் இத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நேற்று மாலை வெளியேற்றப்பட்ட பொது மக்கள், அவர்களது வீடுகளுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்தீ விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பொதுமக்கள் உட்பட 47 பேர் காயமடைந்துள்ளனர். 

எனினும், உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இத்தீ விபத்தினால் பொது சொத்துகளுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. 

இதேவேளை, இவ்வாறான பாரியதொரு அனர்த்தம் யுத்த காலப்பகுதியில் பதிவாகியிருக்குமானால் இலங்கை இராணுவம் பின்னடைவைச் சந்தித்திருக்க நேரிட்டிருக்கும் என இராணுவம் தெரிவித்துள்ளது. 

குறித்த ஆயுதக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீயின் முழுமையான சேத விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. 

ஆயுதக் களஞ்சியப் பகுதிக்குள் சென்ற பின்னரே இழப்புக்கள் குறித்த உண்மைத் தகவல்களை மதிப்பிட முடியும் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது. 

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிறிஸ்ந்த டி சில்வா, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்றவுடனேயே, இத்தீ விபத்துத் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இத்தீ விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்புக் கருதி கொஸ்கம மின்சார உற்பத்தி நிலையம், நேற்று (05) இரவு மூடப்பட்டுள்ளமையினால் அவிசாவளை பிரதேசத்துக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கொஸ்கமவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தையடுத்து, அப்பிரதேசத்தில் குடி நீரைப் பயன்படுத்தும் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ள ஜனாதிபதி, அவிசாவளை தேர்தல் தொகுதிக்குட்பட்ட, அனைத்துப் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலங்கள் இன்னைய தினம் மூடப்படும் என அறிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .