2021 மே 13, வியாழக்கிழமை

இந்திய விமானங்களும் கொழும்பு வானில் கரணம்

Editorial   / 2021 மார்ச் 01 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களும், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களும் காதைக் கிழிக்கும் சத்தத்துடன், கொழும்பு வானில், கரணமடித்துச் சாகசங்களில் ஈடுபட்டுள்ளன. 

நேற்று (28) காலை முதல், அவ்வப்போது இரண்டொரு விமானங்கள் பறந்தன. மாலைவேளையில் ஆகக் கூடுதலான விமானங்கள் புகையைக் கக்கிக்கொண்டு பறந்து, கரணமடித்து சாகசங்களில் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்கமுடிந்தது. 

விமானங்களின் சத்தங்களைக் கேட்டு, வீடுகளிலிருந்து வெளியேவந்து,வானத்தைப் பார்க்கும் முன்னரே, புகைகளைக் கக்கும் விமானங்கள், விருட்டென மறைந்துவிடுகின்றன எனப் பலரும் தங்களைச் சலித்துக்கொண்டனர். 

இவ்வாறான விமானங்கள், ஏன் பறக்கின்றன என்பது தொடர்பில் பலருக்கும் தெரியாமலே இருந்தது. எனினும்,   இலங்கை விமானப்படையின் 70ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படவிருக்கின்ற பிரதான வைபவத்தின் போது, சாகசகங்களைக் காண்பிப்பதற்கான ஒத்திகைகளே நேற்று  முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இலங்கை விமானப்படையானது, தனது 70ஆவது ஆண்டு நிறைவை இன்று முதல் கொண்டாடவுள்ளது. பிரதான வைபவம் காலி முகத்திடலில், 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது.

 இதன்போது, விமானப்படையின் இல. 5 தாக்குதல் ஸ்குவாட்ரன், இல. 6 தாக்குதல் ஸ்குவாட்ரனின் ஜனாதிபதி வர்ண விருதுகள் வழங்கும் விழாவும் இடம்பெறவுள்ளது. 

அந்தவகையில்இ குறித்த வரலாற்று நிகழ்வை நினைவுகூருவதற்காக விமான அணிவகுப்பு, சாகச நிகழ்வுகள் பாரியளவில் முதன்முறையாக முன்னெடுக்கப்படவுள்ளன. 
இந்நிலையில், இரண்டு நாடுகளுக்கிடையிலான மற்றும் இராணுவங்களுக்கிடையிலான நெருங்கிய ஆண்டுக்கணக்கான தொடர்பாடல்களை நினைவுகூரும் வகையிலும், ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் குறித்த நிகழ்வில் இந்திய விமானப்படையும், கடற்படையும் பங்கேற்கவுள்ளன. 

இவை மேம்பட்ட இலகுரக ஹெலிகொப்டரான சரங்க், ஹவாக்ஸ் சூர்ய கிரண், தேஜாஸ் தாக்குதல் விமானம், தேஜாஸ் பயிற்சி விமானம், டொர்னியர் கடல் ரோந்து விமானத்துடன் மொத்தமாக 23 விமானப்படை, கடற்படை விமானங்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளன.

 அந்தவகையில், விமானக் கண்காட்சிக்கான விமானங்கள், இந்திய விமானப்படையின் சி17 குளோப் மாஸ்டர், சி120ஜெ போக்குவரத்து விமானங்களுடன் கொழும்பை நேற்று முன்தினம் வந்தடைந்திருந்தன.

கண்காட்சியிலுள்ள அனைத்து இந்திய விமானங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .