2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

”இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்ப்போம்” ஜனாதிபதி

Freelancer   / 2025 ஒக்டோபர் 01 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக சிறுவர்கள் தினம் மற்றும் உலக முதியோர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின் உலகம்  உண்மையான மற்றும் அழுக்கற்ற உலகம் என்பதால் அது  மிகவும் அழகானது. அந்த அழகை அனுபவிக்க அவர்களுக்கு தடையற்ற வாய்ப்பை வழங்குவது ஒரு சமூகத்தின் பொறுப்பாகும். 

உரிமைகளுடன் கடமைகளும் பொறுப்புகளும் வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளும் ஒரு அரசாங்கமாக, சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் நாங்கள் எப்போதும் உறுதிபூண்டுள்ளோம்.  சிறுவர் என்பது யார் என்பதை மிகவும் நடைமுறை மற்றும் விரிவான முறையில் வரையறுப்பதன் மூலம் சிறுவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான தலையீடுகளை நாங்கள் செய்து வருகிறோம்.


அதில் சகல பிள்ளைகளினதும் உடல், உள நலன் மற்றும் அபிவிருத்திக்காக  கல்விக்கான சமமான பிரவேசம், வழிகாட்டுதல், சமூகப் பாதுகாப்பு, சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம், பாகுபாடு மற்றும் பிள்ளைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் பாதுகாப்பு, அத்துடன் அனைத்து பிள்ளைகளின் உடல் மற்றும் மன நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்காக சரியான ஊட்டச்சத்தை வழங்குதல் மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.  

பாடசாலை செல்லும் வயதுடைய எந்த ஒரு பிள்ளையும் இனம், பொருளாதார நிலை அல்லது வேறு எந்த காரணிகளாலும் கல்வியை இழக்கக்கூடாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். 


எனவே, இந்த ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில், ஒட்டிசம் உள்ளிட்ட வளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய சேவை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.

அத்தகைய சமயத்தில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தின கொண்டாட்டத்தை " உலகை வழிநடாத்த - அன்பால் போஷியுங்கள்" என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்வதன் மூலம் அந்த இலக்குகளை நோக்கி செல்ல மேலும் வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த  விசேட தினத்தில், நம் பிள்ளைகளுக்கு அன்பு, ஆதரவு மற்றும் பாதுகாப்பை வழங்குவதாக நாம் மீண்டும் உறுதிமொழி அளிக்கிறோம். அவர்களின் மகிழ்ச்சியான புன்னகை நமது தேசத்தின் நம்பிக்கையும் பலமும் ஆகும். 

மேலும், இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு நமது முதியவர்கள் அளித்த பங்களிப்பிற்காக அவர்களுக்கு நமது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சிறுவர்களும்  முதியவர்களும் பாதுகாப்பும் மரியாதையும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்ப்போம்! எனத் தெரிவித்துள்ளார். R

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X