2025 ஜூலை 12, சனிக்கிழமை

‘இலங்கையில் ஜனநாயகம் எவ்வாறு தடம் புரண்டது?’

Editorial   / 2018 நவம்பர் 01 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஜனநாயகம் எவ்வாறு தடம் புரண்டதெனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, மக்களுக்காக மக்களால் ஆளப்படுவதே ஜனநாயகம் என ஆபிரகாம்லிங்கன் பரிந்துரைத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகது,

“இலங்கையில் ஜனநாயக ஆட்சி, காலம் காலமாக நூற்றுக்கு நூறு வீதம் நடந்ததென நான் கூறவரவில்லை. இடைக்கடை சிறியதாகவும் சிலவேளைகளில் கூடுதலாகவும் ஜனநாயகம் தடம்புரண்டதுண்டு.  ஆனால், 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி நடந்த நாடாளுமன்றத்  தேர்தலில் தான் ஜனநாயகம் முற்றுமுழுதாக தடம் புரண்டதாகும்.

“ஜனநாயகம், நம்நாட்டில் இது போன்று முன்பு எப்பொழுதும் சீரழிக்கப்படவில்லை. தென் இலங்கை கட்சிகள் எதுவும் 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் வடக்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. தமிழத் தேசியக் கூட்டமைப்பினரைத் தவிர, வேறு எந்தக் கட்சி வேட்பாளர்களையும் எதுவித பிரசாரத்துக்கும் ஈடுபடவிடாது வன்முறைக் கொள்கையுடன் இயங்கிய ஒரு குழு தடுத்தது.

“பணம் கொடுத்து பத்திரிக்கை விளம்பரங்கள் போடுவதற்கு கூட  அனுமதிக்கப்படவில்லை. அத்தேர்தலில் காலையில் தோல்வி அடைந்தவ,ர் மாலையில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆள்மாறாட்ட வாக்களிப்பு உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.

“இந்த நிலைமை ஏற்பட்டதற்கு முழுப் பொறுப்பையும் இரா. சம்பந்தனும் மாவை சேனாதிராசாவுமே ஏற்க வேண்டும்.

“அத்தேர்தலில் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட ஜனநாயகம் இன்றும் புதைக்கப்பட்டே உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை கௌரவமாக செய்திருக்க வேண்டியது, மிகக் கண்ணியமான முறையில் பதவிகளைத் துறந்திருக்க வேண்டும்.

“2010ஆம் ஆண்டு தேர்தலில் கலந்து கொண்ட அதே குழு, 10 தொடக்கம் 15 சதவீத வாக்குகளைப் பெற்று, 14 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆனால், இத்தேர்தலிலும் ஜனநாயகம் தன் முன்னைய இடத்துக்குத் திரும்பவில்லை.

“இக்கால கட்டத்தில்தான் சிலரின் எண்ணத்தில், “நல்லாட்சி அரசு” என்ற எண்ணம் உதித்தது. இதனால் மேலும் பிரபல்யம் அடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கே, தேசிய இயக்குநர் சபையிலும் இடம் கிடைத்தது.

“இன்று நடந்திருப்பவை, சம்பந்தன், சேனாதிராசா போன்றோருக்கு பொதுமக்களின் அடிப்படை உரிமைகளில் விளையாடாதீர்கள் என்ற எச்சரிக்கை ஒலியாகும். தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தை, சம்பந்தப்பட்டவர்கள் பேசித் தீர்த்துக்கொள்ளட்டும்.

“அதன் முதற்கட்டமாக, தமிழ் மக்கள் நன்கறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த மூன்று பிரமுகர்களும், நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறி, பிரச்சினையை அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடியவர்களின் கைகளில், தீர்வுக்காக விட்டுவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .