2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

உடன்படிக்கைகளில் அரசாங்கம் கைச்சாத்திடாது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பொருளாதாரத்துக்கு அல்லது தேசிய கலாசாரத்துக்கு  பாதிப்பாக அமையும் எந்தவொரு நாட்டுடனும் எந்தவொரு உடன்படிக்கையிலும் அரசாங்கம் கைச்சாத்திடாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்தியவுடன் செய்துகொள்ளப்படவுள்ள ஓர் உடன்படிக்கை தொடர்பில் அரசியல் எதிர்த் தரப்பினர் பல்வேறு பிழையான கருத்துக்களை முன்வைத்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று நாட்டிலுள்ள ஊடகச் சுதந்திரத்தின் காரணமாக இத்தகைய கருத்துக்களை முன் வைக்கக்கூடிய சூழல் இருந்தபோதும் அவற்றில் எவ்வித உண்மைகளும் இல்லை எனத் தெரிவித்தார்.

பலாங்கொடையில் கொங்கிரிட் உற்பத்தி தொழிற்சாலையை, நேற்று வெள்ளிக்கிழமை (12) திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

அண்மையில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து நாட்டில் உண்மையான நிலை தொடர்பில் அறிந்துகொண்டதுடன், தன்னை சந்தித்த சந்தர்ப்பத்தில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டதாக இங்கு தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை முன்கொண்டு செல்வதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்குவதற்கு அவர் உறுதியளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இன்று எந்தவொரு நாட்டினதும் அல்லது எந்தவொரு நபரினதும் ஒரு கட்டளை அல்லது அழுத்தம் இலங்கைக்கு கிடையாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சில தலைவர்கள் பல்வேறு பத்திரிகைகளின் ஊடாக அது தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தபோதும் இன்று தனது அரசாங்கத்துக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பது அவர்களது பிழையான செயற்பாடுகளின் பிரதிகூலமான விளைவுகளுக்காகும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நாட்டு மக்கள் தன்னை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தது நாட்டை முன்கொண்டு செல்வதற்காகவே அன்றி, எதிர்த் தரப்பினர் குறிப்பிடுவது போன்று நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதற்கல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி, எவ்வித வெளிநாட்டு தலையீடுகளுக்கும் அடிபணியாது நாட்டினதும் மக்களினதும் கௌரவத்தை பாதுகாப்பதற்கு உயிரைத் தியாகம் செய்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

தாம் இன்னும் சில நாட்களில் மேற்கொள்ளவுள்ள ஜெர்மனி மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கான விஜயத்தின்போது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக அந்த நாடுகளுடன் பல்வேறு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X