2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

உதயங்க தொடர்பில் பதிலளிக்க அரசாங்கத்துக்கு கால அவகாசம்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் மற்றும், அவரைக் கைதுசெய்ய இன்டர்போலின் உதவி கோரப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பதிலளிக்க, அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை, சபையில் இருவார கால அவகாசத்தைக் கோரியது.

நாடாளுமன்றத்தில் நேற்று, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, மேற்படி விடயம் தொடர்பான கேள்வியை எழுப்பியிருந்தார்.

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக, உதயங்க வீரதுங்க கடமையாற்றிய கால எல்லை யாது? அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்கள் யாவை? மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றம் யாது? அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுதல் தாமதமடைவதற்கான காரணங்கள் யாவை?  அவரைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளதா? என நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பி.யினால், வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.  
எவ்வாறாயினும், அக்கேள்வி எழுப்பப்பட்ட போது, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் சபையில் பிரசன்னமாகி இருக்காத நிலையில், அவர்கள் சார்பில் கருத்து வெளியிட்ட ஆளுந்தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக, மேற்படி கேள்விக்கு பதிலளிக்க இருவார கால அவகாசத்தைக் கோரினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .