2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

எட்கா ஒப்பந்தம் கட்டாயம் கைச்சாத்தாகும்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான பொருளாதார மற்றும் ஒத்துழைப்புக்கான (எட்கா) ஒப்பந்தம், இவ்வருட இறுதியில் கட்டாயமாக கைச்சாத்திடப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவில் நேற்று வியாழக்கிழமை (06) நடைபெற்ற இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

தானும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தீர்மானித்ததற்கிணங்க, இந்து - லங்கா எட்கா ஒப்பந்தம், நிச்சயமாக கைச்சாத்திடப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இந்தியாவுக்குச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அம்மாநாட்டில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிலையில், இலங்கையின் புதிய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் கண்டறிவதற்காக, இந்தியாவின் முன்னிலை தொழிலதிபர்கள், அடுத்தவாரமளவில் இலங்கைக்கு வரவுள்ளதாக, இந்திய கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் நௌஸாட் போப்ஸ், பிரதமரிடம் நேற்றுத் தெரிவித்தார்.

இந்திய பொருளாதார மாநாட்டை அடுத்து, பிரதமர் உள்ளிட்ட குழுவினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய அவர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், ஆழமானதும் நெருக்கமானதுமான வர்த்தகத் தொடர்புகளைப் பேணுவது, தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் சில மாதங்களுக்குள், தெரிவுசெய்யப்பட்ட சில துறைகளில் முதலிடுவதற்காக, மற்றுமொரு தொழிலதிபர் குழுவொன்றை, இலங்கைக்கு அனுப்பிவைக்க எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்திருந்த பிரதமர், வலய ரீதியிலான பயங்கரவாதம், போதைப்பொருள் வியாபாரம், மனிதக் கடத்தல்கள், சமுத்திரப் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்,  இலங்கையும் இந்தியாவும் ஒன்றிணைந்து முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .