2025 ஜூலை 12, சனிக்கிழமை

’ஐ.நாவின் அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப ரணில் கோரிக்கை’

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 05:02 - 1     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசாங்கத்தை வீழ்த்துவதற்​காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நாவின் அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, ஐ.நா அமைதிகாக்கும் படையினர், இலங்கை இராணுவத்தை வீழ்த்திவிட்டே அரசாங்தை வீழ்த்த முடியும் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று(30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், தாம் அரசமைப்புக்குற்பட்டே செயற்படுவதாகவும், அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளினாலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த டளஸ் அழகப்பெரும எம்.பி, தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி யுத்ததின்போது ஏற்பட்டிருந்த அசாதாரண நிலைமைகளிலும் கூட நாம் ஒருபோதும், ஐ.நா அமைதிகாக்கும் படையினரின் உதவியை  கோரியிருக்கவில்லை எனவும், ஆனால், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஐ.நா அ​மைதிகாக்கும் படையினரின் ஒத்துழைப்பு வேண்டும் எனக் கோரியிருப்பது தேசத்துரோகம் எனவும் தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது, 9 மாகாண சபைகளில் 6 மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளன. இரண்டரை வருடங்களுக்கு மேலாக மாகாண சபைகளுக்கான  தேர்தல் நடைபெறாதிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களமும் இது தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

அமெரிக்கா பிரஜையான ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி சௌதி அரசாங்கத்தினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது வார்த்தைகளில் கவனம் செலுத்திய அமெரிக்கா, தற்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஜனநாயகம் தொடர்பில் சான்றிதழ் வழங்க முயற்சிக்கிறது எனவும் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவின்  வெளிநாடு சார்பு கொள்கைகளினாலேயே அவரை பாதுகாக்க அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றதாக குறிப்பிட்ட அவர், இலங்கை வரலாற்றில் இதுவரையில் 24 தடவைகள் நாடாளுமன்றம் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 24 நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இருப்பதாகவும், ஆகவே தற்போது நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது முதன்​முறையல்ல எனவும் எடுத்துரைத்தார்.


You May Also Like

  Comments - 1

  • S.Kugathas Tuesday, 30 October 2018 04:41 PM

    ஜனநாயகமான முறையில் இந்த மாற்றம் இடம்பெறவில்லை என்பதை அறிவீர்கள் ஜனநாயக நாடு என சொல்லும் போது இப்படியான முறைகளை கையில் எடுப்பது தவறு நாடாளுமன்றை கூட்டாமல் எப்படி பிரதமரை மாற்றுவது இது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடு என கருத்தில் கொள்ளவேண்டும் ஆகையால் பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்க அவர்கள் எடுத்த முடிவு அதாவது அமெரிக்காவின் அமைதி காக்கும் படையை இறக்குவதில் நாம் அதில் பெருமிதம் அடைகின்றோம் வரவேற்கின்றோம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .