2025 ஜூலை 14, திங்கட்கிழமை

’ஒழுக்கப் பண்பாடான சமூகத்துக்கு சமயம் வழிகாட்டும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றுக்குத் தேவையான வழிகாட்டல்கள் அனைத்து சமய நூல்களிலும் உட்பொதிந்துள்ளன என்றும் சமய சூழலில் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (26) முற்பகல் கம்பஹா திருச்சிலுவைக் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் சிறுவர் தலைமுறையினருக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்வதற்குப் பரீட்சைகளில் மட்டுமன்றி வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதற்கு அவர்களை பயிற்றுவிப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பிள்ளைகளிடத்தில் ஆன்மீகத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுத்துள்ள இச்சந்தர்ப்பத்தில், நாட்டின் பிள்ளைகளை அறிவும் ஆன்மீகமும் கொண்ட தலைமுறையாக கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் கம்பஹா தேவாலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட திருச்சிலுவை கல்லூரிக்கு 90 வருடங்கள் நிறைவடைகின்றன. நாட்டுக்கு பல சிறந்த பிரஜைகளை வழங்கியுள்ள கம்பஹா திருச்சிலுவை கல்லூரி, மாணவர்களின் ஆன்மீகத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களின் வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் பல்வேறு நிகழ்ச்சிதிட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இன்று முற்பகல் கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதியை, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.  ஜனாதிபதியின் விஜயத்தை நினைவுகூரும் முகமாக கல்லூரி வளாகத்தில் சக்குரா மரக் கன்று ஒன்று நடப்பட்டது. பல்வேறு துறைகளில் கல்லூரியில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் பரிசில்களையும் விருதுகளையும் வழங்கிவைத்தார்.

கல்லூரியின் அதிபர் அருட் சகோதரி தர்ஷிகா கல்லூரியின் வருடாந்த சஞ்சிகையையும் விசேட நினைவுசின்னம் ஒன்றையும் ஜனாதிபதிக்கு வழங்கிவைத்தார். பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித், பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும, கம்பஹா ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அஜித் பஸ்நாயக்க, கம்பஹா நகரபிதா எரந்த சேனாநாயக்க, கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .