2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

கொழும்பு மாணவர்களுக்கு நாளை ஃபைசர் தடுப்பூசி

Nirosh   / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்திலுள்ள கொழும்பு, ஹோமகம, பிலியந்தல, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய கல்வி வலயங்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மற்றும் ஏற்கெனவே ஒரு தடவை தோற்றிய 18 மற்றும் 19 வயது மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (15) முன்னெடுக்கப்படவுள்ளதென கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், நாளை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதென தெரிவித்த அவர், அரச அனுசரணையின் கீழ், ஜனாதிபதியின் விசேட அறிவுறுத்தலுக்கமைய இதற்கு தேவையான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், குறிப்பாக மாணவர்களுக்கான சிறப்பான பரிசாகவே அரசாங்கம் இதனை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு மத்திய நிலையங்களிலும் அதிக எண்ணிக்கையைக் கொண்ட மாணவர்களுக்கு அவர்களது பாடசாலைகளிலேயே தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.

இது தொடர்பான அறிவித்தல் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளதுடன், அந்தந்த பாடசாலை அதிபர்களுடன் தொடர்புகொண்டு இதனை வினவலாம்  என்றார்.

இவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் மாணவர்கள், அடையாள அட்டையை கொண்டு வருவது அவசியமாகும் என தெரிவித்த அவர் 21ஆம் திகதிக்குப் பின்னர், நாடு முழுவதும் 18 மற்றும் 19 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.

அரசாங்கம் அதிக நிதி செலவில் எதிர்கால சந்ததியினருக்கு  வழங்கும் பரிசை நிராகரிக்காமல் மாணவர்கள் பெற்றுகொள்ள வேண்டும் என்பதுடன், பெற்றோர்களும் இதுகுறித்து அக்கறை காட்ட வேண்டும் என்றார்.

அத்துடன், இந்த செயற்பாட்டுக்கு பெற்றோர் மற்றும்  பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அதிபர், ஆசிரியர்களின்  உங்கள் அர்ப்பணிப்பு எமது பிள்ளைகளுக்காக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் சகல பேதங்களையும் மறந்து மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஒத்துழைப்பை வழங்கவும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .