2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

கோவை வன்கொடுமை : வீடு,வீடாக சென்று கதவை தட்டி கதறிய மாணவி

Editorial   / 2025 நவம்பர் 07 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, கோவையில் தனியார் விடுதியில் தங்கி இருந்து ஒரு கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். மாணவிக்கும், கோவையில் ஆட்டோ மொபைல் நிறுவனம் நடத்தி வந்த வாலிபர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் உருவாகி காதலாக மலர்ந்தது. சம்பவத்தன்று இரவு மாணவி, காதலனுடன் காரில் கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பேசி கொண்டிருந்தார்.

அங்கு மதுபோதையில் வந்த 3 வாலிபர்கள், காரின் கதவை திறக்க சொல்லி மிரட்டினர். இதனால் பயந்து கதவை திறந்த காதலனின் நெற்றியில் வெட்டியதில் அவர் மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து கொடூர ஆசாமிகள், மாணவியை, இருளான பகுதிக்கு கடத்தி சென்றனர். காதலன் பொலிஸூக்கு தகவல் கொடுத்து விடுவார் என்று கருதி, செல்போனையும் பிடுங்கிச்சென்றதாக தெரிகிறது.

பின்னர் அங்கிருந்த 6 அடி உயர தடுப்பு சுவரை தாண்டி மாணவியை மறுபுறம் தூக்கி சென்றனர். பின்னர் 3 பேரும் மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பினர். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவி மயங்கி கிடந்தார்.

இதற்கிடையில் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த காதலன் அங்கிருந்து நடந்தே மெயின்ரோட்டுக்கு வந்துள்ளார். அங்கு சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம் போனை வாங்கி பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பொலிஸார் இரவு 11.20 மணிக்கு சம்பவ பகுதிக்கு வந்து காதலனிடம் தகவல்களை பெற்று தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். முட்புதர்களாகவும், இருள்சூழ்ந்தும் இருந்த பகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும் தலா 3 காவலர்கள் வீதம் அனுப்பி நாலாபுறமும் டார்ச்லைட் வெளிச்சத்தில் தேடினர்.

 இந்த நிலையில், அந்த மாணவி மயக்கம் தெளிந்து அருகில் உள்ள ஒரு வீட்டின் முன் கதவை தட்டினார். அந்த வீட்டுக்காரர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் கதவு தட்டும் சத்தம் கேட்கவில்லை. இதனால் திறக்க வில்லை. அழைப்பு மணி வேலை செய்யாததால், உதவி தேடுவதற்காக அவசரமாக மோட்டார் பம்பின் சுவிட்சை மாற்றி அழுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவி திறந்த படிக்கட்டில் ஏறி, மொட்டை மாடியை அடைந்தார். அங்கிருந்து முதல் மாடியில் உள்ள வீட்டின் கதவை தட்டி உதவி கோரியுள்ளார். அங்கும் உதவி கிடைக்கவில்லை.

பின்னர் மற்றொரு வீட்டின் தரைத்தளத்துக்கு சென்ற மாணவி கதவைத் தட்டினாள். கதவை திறந்தவர்கள் மாணவியின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீட்டினர் மற்ற வீட்டினரையும் உதவிக்கு அழைத்தனர்.

மாணவி அவர்களிடம் நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதார். தனது தாயிடம் பேச வேண்டும் என்றும், போனை கொடுக்குமாறும் கூறினார். அங்கிருந்தவர்கள் தங்களது போனை மாணவிக்கு பேச கொடுத்துள்ளனர். மேலும் மாணவி அணிந்து இருந்த உடைக்கு மாற்றாக ஒரு பெண் துணியை கொடுத்து அணிய செய்தார். மேலும் குடியிருப்பு வாசிகள் கொடுத்த தகவலின்பேரில் பொலிஸார் அங்கு வந்து மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  இதற்கிடையில் தனிப்படை பொலிஸார், இந்த ஆசாமிகள் விட்டுச்சென்ற மொபட்டின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது, அது திருட்டு மொபட் என்று தெரியவந்தது.

மேலும் காதலனிடம் பறித்துச்சென்ற செல்போன் முக்கிய துருப்பு சீட்டாக பொலிஸாருக்கு அமைந்தது. அந்த போனை இந்த ஆசாமிகள் ஒரு கடைக்கு சென்று விற்பதற்காக கொடுத்துள்ளனர். கடைக்காரரும் சந்தேகம் அடைந்து அந்த ஆசாமிகள் குறித்த தகவலை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் துரித விசாரணையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது சதீஷ் என்ற கருப்பசாமி (வயது 30), கார்த்தி என்ற காளீஸ்வரன் (20) ஆகிய அண்ணன், தம்பியும், குணா என்ற தவசி (20) என்றும் தெரியவந்தது. செல்போன் சிக்னல் காட்டியதை வைத்து, ஆசாமிகள் சத்தியமங்கலத்துக்கு சென்று அங்கிருந்து துடியலூர் வெள்ளக்கிணறு பகுதிக்கு வந்து பதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பதுங்கி இருந்த போதுதான் அவர்களை பொலிஸார் சுட்டு பிடித்தனர்.

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காதலன், தன்னால் பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்து கொள்வதாக போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X