2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கொன்ஸ்டபிள்கள் நால்வருக்கு வலைவீச்சு

Editorial   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்கம - ரத்ன உதாகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு எரியூட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் நால்வர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது தப்பிச் சென்று மறைந்திருப்பதாகக் கூறப்படும் தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் விசேட விசாரணைப் பிரிவைச் சேர்ந்த கொன்ஸ்டபிள்கள் தொடர்பிலேயே, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

அவர்கள், இந்த இரட்டைப் படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்பது தொடர்பில், ஏற்கெனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் உயர்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

கடந்த 22ஆம் திகதி காலை, மேற்படி விசாரணைப் பிரிவைச் சேர்ந்த ஐந்து கொன்ஸ்டபிள்கள், பணியிடத்துக்கு அறிவிக்காது, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் மாத்திரம், மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். 

தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, வீட்டுக்குச் சென்று, மீண்டும் பணிக்குத் திரும்பியதாக, அந்தக் கொன்ஸ்டபிள் தெரிவித்திருந்தார்.  

மேற்படி ஐந்து கொன்ஸ்டபிள்கள் உள்ளிட்ட மேற்படி விசாரணைப் பிரிவைச் சேர்ந்த 15 பேர், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால், தென் மாகாணத்துக்கு வெளியேயான பொலிஸ் நிலையமொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் இது தொடர்பான அறிவித்தலை வழங்குவதற்காக அவர்களைத் தேடிய போதே, அவர்கள் பணியிடத்துக்கு அறிவிக்காது சென்றுள்ளமை தெரியவந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.  

ரத்ன உதாகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் இருவரும், கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதியன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் இதற்காக, பொலிஸ் சீருடை அணிந்த 13 பேர், உத்தியோகபூர்வமற்ற முறையில் செயற்பட்டுள்ளனர் என்றும், குற்றப்புலனாய்வு விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.  

இவர்களில் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள், இந்தக் குற்றத்தில் நேரடியாகப் பங்குகொண்டுள்ளனரென, விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

சம்பவத்தில், 31 வயதுடைய ரஸீன் சிந்தக்க மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகிய இருவருமே, இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .