2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

’சரத் வீரசேகரவின் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை’

Freelancer   / 2026 ஏப்ரல் 08 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவின் அண்மைய கருத்துக்களைக் கடுமையாகச் சாடியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனத் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் சரத் வீரசேகர சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகப் பணியாற்றிய காலப்பகுதியில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் விசாரணைகள் தொடர்பில் அவரது இயலாமையே வெளிப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு இந்தத் தாக்குதலுடன் தொடர்பிருப்பதாக தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்துக் கடும் அதிருப்தியை வெளியிட்டார்.

சரத் வீரசேகர பொலிஸ் அமைச்சராக அதிகாரத்தில் இருந்தபோது, முஜிபுர் ரஹ்மானை ஏன் கைது செய்யவில்லை என்றும், அந்த காலப்பகுதியில் அவர் அமைச்சராகப் பொறுப்புடன் செயல்படாமல் தூங்கிக் கொண்டிருந்தாரா என்றும் விஜேசிரி கேள்வி எழுப்பினார்.

அன்று உரிய நடவடிக்கை எடுக்காமல், இன்று அரசியல் தேவைகளுக்காக இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது நகைப்புக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த நாட்டு மக்கள் இனம் மற்றும் மதத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்பவர்களைத் தற்போது முழுமையாக நிராகரித்து வருவதாகவும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைப் பிளவுபடுத்தி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஆட்சியாளர்களுக்குத் தற்போது இயற்கை நீதியால் தண்டனை கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டம் தற்போது சரியாகச் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், குற்றவாளிகள் எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என சமிந்த விஜேசிரி மேலும் வலியுறுத்தினார்.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .