2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சிறுபான்மையினரின் வகிபாகத்துக்கு ஆப்பு?

Niroshini   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா  

இந்த நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக, சிறுபான்மையினச் சமூகங்கள் இருக்கக்கூடாது என்பதை இலக்காகக் கொண்டு, தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வதற்கு, இரு பெரும் தேசியக் கட்சிகளும் தீவிரப் போக்குடன் செயற்பட்டு வருவதாக, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  

அத்தோடு, சர்வஜன வாக்கெடுப்பு இன்றியே, புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டா​ர்.   

அம்பாறை - கல்முனைப் பிரதேசத்தில்,  வெளிவாரிப் பட்டதாரிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,  

'எமது நாட்டின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மேலும் பலப்படுத்தி, நல்ல விடயங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், நல்லாட்சி அரசாங்கமானது, இந்நாட்டின் அரசியல் யாப்பை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

இருந்தபோதிலும், அதில் முக்கிய அம்சமாக இருக்கின்ற தேர்தல் முறை மாற்றம் என்பது, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு பெரும் பாதிப்பாக அமையலாம் என்று அஞ்சப்படுகிறது.   

இதுவரை காலமும், விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் ஆட்சியின் பங்காளிகளாக, சிறுபான்மையினர் இருந்து வருகின்றனர். தேசிய அரசியலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகச் சிறுபான்மைக் கட்சிகள் கொண்டிருக்கின்ற வகிபாகத்தை இல்லாமல் செய்து, சிறுபான்மையினரின் தயவின்றி ஆட்சி அமைவதற்கான தேர்தல் முறையை, தெற்கிலுள்ள சில சக்திகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சிறுபான்மைக் கட்சிகளின் பங்களிப்பின்றி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான கனவை நிறைவேற்றிக்கொள்வதற்கு, இரு பெரும் தேசியக் கட்சிகளும் காய்களை நகர்த்தி வருகின்றன. அதன்படி, சிறுபான்மைச் சமூகங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை வெகுவாகக் குறைப்பதற்கான எத்தனிப்புகள் இடம்பெற்று வருகின்றன.  

தற்போதுள்ள விகிதாசாரத் தேர்தல் முறைமைக்குப் பதிலாக, ஜேர்மன் நாட்டைப் போன்று, கலப்புத் தேர்தல் முறையைக் கொண்டுவருவதற்கு, தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. அரசியலமைப்புக் குழுவுக்கு தலைமை வகிக்கின்ற சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்னவின் கூற்றுப்படி, 140 தொகுதிகள் வரையறுக்கப்பட்டு, 233 எம்.பி.க்களை தேசிய, மாகாண, மாவட்ட ரீதியாக தெரிவுசெய்வதற்கான ஒரு தேர்தல் முறை பற்றி ஆராயப்படுவதாக அறிய முடிகிறது. இது, சிறுபான்மையினச் சமூகங்களின் பிரதிநிதித்துவங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேர்தல் முறைமை என்று கூறப்படுகிறது.   
அதேவேளை, புதிதாகத் தயாரிக்கப்படுகின்ற அரசியலமைப்புக்கு, மக்களின் அங்கிகாரத்தைப் பெறுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று முன்னர் சொல்லப்பட்டபோதும், இப்போது அந்த நிலைப்பாட்டை மாற்றி, சர்வஜன வாக்கெடுப்பில்லாமல் நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் மாத்திரம், அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவருகிறது.  

எமது சமூகத்துக்குப் பாதகமான தேர்தல் முறையை உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமாயின், அதனை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ், ஒருபோதும் துணைபோக மாட்டாது. இது விடயத்தில் எமது கட்சி, உறுதியாக இருக்கின்றது. இது தொடர்பாக அரசாங்கத்துடனும் ஏனைய தரப்புகளுடனும் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.  
சிவில் சமூக அமைப்புகளும் இது விடயத்தில் விழிப்பாக இருந்து, அரசியல் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்” என, பிரதியமைச்சர் ஹரீஸ், மேலும் தெரிவித்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .