2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிறுவர்களுக்கு ஏற்றவாறு பாடவிதானங்களைத் தயாரியுங்கள்

Kogilavani   / 2016 ஜனவரி 22 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர் உள்ளங்களுக்கு ஏற்புடைய வகையில் பாடசாலை பாடத்திட்டங்களை தயாரிப்பதில் கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி   மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

05 மற்றும் 06 ஆகிய வகுப்புகளுக்காக தற்போது நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டங்களில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாகவும் அதனால் மாணவர்கள்   அழுத்தங்களுக்கு  உட்பட்டுள்ளதாகவும் பெற்றோர்களிடம் இருந்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

கல்வித்துறையில் புதிய சீர்திருத்தங்கள் தொடர்பில் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனரஞ்சக பாடசலை எண்ணக்கரு தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டதோடு, சகல பிரதான பாடசாலைகளையும் ஜனரஞ்சக பாடசாலை மட்டத்துக்கு அபிவிருத்தி செய்து அப்பிரச்சினைக்கு தீர்வுகளை கண்டறிவது தொடர்பிலும் ஜனாதிபதி கல்வி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்துக்கு  கொண்டு வந்தார்.

தான் எந்தவொரு ஜனரஞ்சக பாடசாலைக்கும் எந்தவொரு பிள்ளையையும் சேர்த்துகொள்வதற்கு கடிதங்கள் வழங்கவில்லை என்றும் எல்லா பாடசாலைகளையும் ஒன்றுபோல் அபிவிருத்தி செய்து பிள்ளைகளுக்கு சம கல்வி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதே நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தரம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு பெற்றோர்களிடம் காணப்படும் போட்டித்தன்மை காரணமாக பிள்ளைகள் முகம் கொடுக்கும் அழுத்தங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, எல்லோரினதும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை கவனத்திற்கொண்டு அதற்கான   புதிய நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.

இன்று இலங்கையில் தற்கொலை செய்துகொள்ளும் விகிதம் மிக வேகமாக அதிகரித்து வருவதுடன், அதற்கு பாடசாலை கல்வியில் பிள்ளைகள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் எவ்வளவு தூரம் பாதிப்பு செலுத்துகின்றது என்பது தொடர்பில் கண்டறியுமாறும் ஜனாதிபதி கல்வி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கினார்.

நாட்டின் இலவசக் கல்விக்கொள்கையை பலப்படுத்தி நவீன தொழில்நுட்பத்துடன் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பது புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்ட அவர், அக்கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்கின்றபோது கல்வி அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

பிரிவெனாக் கல்வி அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், வெற்றிடங்கள் நிலவும் பிரிவெனா பணப்பாளர் பதவிக்கு புதிய பணிப்பாளர்களை நியமிப்பதற்கும் ஆலோசனை வழங்கினார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், பல்கலைக்கழக இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியு.எம்.பந்துசேன, தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணயக்கார ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X