2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

“ஜனாதிபதியின் தீர்மானம் அவசரப்பட்டு எடுக்கப்பட்டதல்ல”

J.A. George   / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேதனப் பசளைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கை மற்றும் எதிர்வரும் பெரும்போகத்துக்குத் தேவையான சேதனப் பசளையை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.

“ஆரோக்கியமானதும் பயனுள்ளதுமான பிரஜையை உருவாக்குதல், நஞ்சற்ற உணவு வேளையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமையை உறுதிப்படுத்திக்கொள்ளல், இலங்கையின் விவசாயத்துறையானது, எதிர்வரும் தசாப்தங்களில் முற்றுமுழுதாகச் சேதனப் பசளையைப் பயன்படுத்தி மேற்கொள்வதற்கு வழிவகுத்தல் போன்ற நடைமுறைகளை முன்னெடுப்பதாக, “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் ஊடாகப் பொதுமக்களுக்கு ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ளார்.

பெரும்பான்மையான மக்களின் இணக்கத்துக்குப் பாத்திரமாகியுள்ள அந்தக் கொள்கைப் பிரகடனத்தை, எதிர்காலச் சந்ததியினரின் நலனுக்காக நடைமுறைப்படுத்துவதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்” என, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“இரசாயனப் பசளைப் பயன்பாடு காரணமாக, எமது நாடு மாபெரும் சமூகப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றது. அதன் விளைவாக, மண் வளமற்றுப் போதல், நிலத்தடி நீருடன் நச்சு இரசாயனங்கள் கலத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இரசாயனப் பசளையில் உள்ளடங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ள ஆசனிக் மற்றும் கெட்மியம் போன்றன, சுகாதாரத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த இரசாயனப் பதார்த்தங்கள் காரணமாக, புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்று, உலக சுகாதார ஸ்தாபனமும் அறிவித்துள்ளது.

இலங்கையில், புற்று நோய்க்கு இலக்காகும் நபர்களின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. 2019ஆம் ஆண்டில் மாத்திரம், 31,834 புதிய புற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விவசாய நிலங்களினூடாகச் சுத்தமான நீருடன் கலக்கும் இரசாயனப் பதார்த்தங்கள் காரணமாகச் சீறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாட்டின் தொழிலாளர்ப் படையானது இவ்வாறான நோய்களுக்குப் பாத்திரமாவது, நாட்டின் எதிர்காலப் பொருளாதாரத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், நாட்டுக்குள் பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் உருவாகின்றன.

இதனால், எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுப்பினும், இரசாயனப் பசளைப் பயன்பாட்டினால் மனித வாழ்க்கைக்கு ஏற்படும் பாதிப்புகளுக்குத் தீர்வு காண்பதில் பின்வாங்கப் போவதில்லை என்பதே, ஜனாதிபதியின் நிலைப்பாடாகக் காணப்படுகிறது.

அதனால், இரசாயனப் பசளைப் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதற்காக ஜனாதிபதி எடுத்த தீர்மானமானது, எவ்வகையிலும் அவசரப்பட்டு எடுத்தத் தீர்மானமல்ல.

சேதனப் பசளை தொடர்பில் காணப்படும் கட்டுக்கதைகளை, தேசிய பரீட்சார்த்தத் திட்டங்களின் ஊடாகத் தவிடுபொடியாக்கி, விவசாயிகளின் நம்பிக்கையுடன் கூடிய சேதன விவசாயத்தை மேற்கொள்ளச் செய்வதற்காக, அரசாங்கத்தினால் கடந்த ஆண்டில், பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அவற்றின் முதற்கட்டமாக, தேசிய உரச் செயலகம் ஊடாகச் சேதனப் பசனை உற்பத்தியாளர்கள் பதிவு செய்யப்பட்டனர். அதன் பின்னர், சேதனப் பசளையை உற்பத்தி செய்யும் முதற்தர தேசிய  நிறுவனங்கள் 6 தெரிவு செய்யப்பட்டன. அதன் பின்னர், இரசாயனப் பசனை மற்றும் சேதனப் பசளை ஆகியவற்றை வெவ்வேறு விகிதாசாரங்களில் பயன்படுத்தி, கடந்த ஆண்டு சிறுபோகத்தின் போது, 20,275 (இருபதாயிரத்து இரநூற்று எழுபத்து ஐந்து) ஹெக்டெயார் நிலப்பரப்பில், சேதனப் பசளையைப் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்தி நெற் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

சேதனப் பசளையை, உரிய தரத்தில் உற்பத்தி செய்வது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டதோடு, சேதனப் பசளையைப் பயன்படுத்திப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாயக் காணிகளின் முன்னேற்றம் தொடர்பில் கண்டறியுமாறும், ஜனாதிபதியால், கடந்தாண்டு ஜூன் மாதத்தில், கமநலத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி, தேசிய உரச் செயலகம் மற்றும் கமலத் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து, சேதன விவசாயக் காணிகளின் வெற்றி தொடர்பிலான ஆராய்ச்சிகளும் மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, சேதனப் பசளைப் பயன்பாடு காரணமாகக் காணி நிலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அறுவடையின் அளவு மாற்றங்கள், நடைமுறைச் சிக்கல்கள் அனைத்தும் கண்டறியப்பட்டன. இதற்காக, பல்கலைக்கழகத்தினரும் இணைக்கப்பட்டு ஆராயப்பட்டன.

இவ்வாறான ஆராய்ச்சிகளின் ஊடாக, சேதனப் பசளையைப் பயன்படுத்தும் பரீட்சார்த்தத் திட்டத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்ட பின்னர், பெரும்போகத்தின் போது, அதாவது இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் முதல் முன்னெடுக்கப்படும் விவசாய நடவடிக்கைகளுக்காக, இரசாயனப் பசளையை இறக்குமதி செய்ய வேண்டாமென்று, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இரசாயனப் பசளைக்காக, அரசாங்கத்தினால் வருடாந்தம் பெருந்தொகைப் பணம் செலவிடப்பட்ட போதிலும், அதற்குச் சமாந்தரமாக, விவசாய உற்பத்திகளில் எவ்விதத் தரமான வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கவில்லை என்று, ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அதனால், அந்தத் தொகைப் பணத்தை, சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகப் பயன்படுத்த முடியும் என்பதே, ஜனாதிபதியின் கருத்தாக இருக்கிறது.

எதிர்வரும் பெரும்போகத்துக்குத் தேவையான சேதனப் பசளை உற்பத்தியை விரைவுபடுத்துவதற்குத் தேவையான அனைத்து வேலைத்திட்டங்களையும், அரசாங்கம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளது. இதன்படி, சேதனப் பசளை உற்பத்திக்குத் தேவையான காணிகள், தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை, தேவைக்கேற்றவாறு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றங்கள் ரீதியில் பசளை உற்பத்தியை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொடுக்கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்ளூராட்சிமன்றங்கள், தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை, கமநலத் திணைக்களம், மீன்பிடித்துறை அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களைப் போன்று, கூட்டுறவுத் திணைக்களம், இராணுவம், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் போன்ற நிறுவனங்கள் பலவும், சேதனப் பசளை உற்பத்தியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.

சேதனப் பசளை உற்பத்திக்காக விவசாயிகளுக்குத் தேவைப்படம் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கும், ஏற்கெனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோன்று, சேதனப் பசளைப் பயன்பாடு தொடர்பான தெளிவூட்டல்களை விவசாயிகளுக்கு வழங்கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறாக, அனைத்து நபர்கள் மற்றும் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் தரம் வாய்ந்த சேதனைப் பசளையை, தேசிய உர நிறுவனத்தினூடாகக் கொள்வனவு செய்யவும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, தேசிய உரச் செயலகத்தில், உற்பத்தியாளர்கள் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர், சேதனப் பசளை உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பசளையின் தரம் தொடர்பில், தேசிய உரச் செயலக அதிகாரிகள் பரிசோதனை செய்வார்கள்.

பெரும்போகத்துக்குத் தேவையான பசளைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தொண்ணூற்று ஆறாயிரம் (96,000) மெட்ரிக் தொன் நிறையுடைய, நைதரசன் 10% அடங்கும் சீ வீட் பசளையைக் கொள்வனவு செய்யவும் ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மூவாயிரம் (3,000) மெட்ரிக் தொன் நிறையுடைய, 15% நைதரசன் அடங்கும் புரோட்டீன் பெப்டயிட்டை இறக்குமதி செய்யவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சேதனப் பசளைகளைப் பயன்படுத்தி, 6 இலட்சத்து 20 ஆயிரம் முதல் 7 இலட்சம் வரையான ஹெக்டெயார் நிலப்பரப்பில் நெற் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு, போஷாக்குத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய பசளைத் தேவையை, தேசிய உற்பத்தியாளர்கள் ஊடாகப் பூர்த்தி செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக, தேசிய உரச் செயலகத்தினூடாக அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டுள்ள சேதனப் பசளை உற்பத்தியாளர்கள் 39 பேரிடம் இருந்து பசளையைக் கொள்வனவு செய்வதற்கான கேள்வி மனுக்களும் கோரப்பட்டுள்ளன.

சேதனப் பசளைப் பயன்பாட்டின் போது, விளைச்சல் குறைவடைந்து, வருமானத்தில் மாற்றம் ஏற்படுமாயின், கட்டுப்பாட்டு விலைக்கும் அதிக விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தயாராக இருக்கின்றமையால், விவசாயிகள் இது விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று, ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைமையில், நுகர்வோரும் சாதாரண விலையில் அரிசியைக் கொள்வனவு செய்துகொள்ளும் வகையில், மேலதிகச் செலவுச் சுமையை ஈடுசெய்வதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இரசாயன விவசாயத்திலிருந்து சேதன விவசாயத்துக்கு மாறுவதானது, விவசாயப் போரின் வெற்றி என்பதோடு, இயற்கையின் இருப்புக்கும் மிக முக்கியமான அடித்தளமாக இருக்குமென்பதே, நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சேதனப் பசளைப் பயன்பாட்டின் ஊடாக, நீண்ட காலத்துக்கு, வளமான மண் வளத்தோடு, விவசாய உற்பத்திகளின் மூலம் அதிக இலாபத்தையும் அதிகபட்ச விளைச்சலையும் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்றைய நிலைமையில், சேதனப் பசளையூடாக உற்பத்தி செய்யப்படும் விவசாய உற்பத்திகளுக்கு, உலகம் முழுவதிலும் அதிக கேள்வி நிலவுகின்றது. இரசாயனப் பயன்பாடற்ற நாடாக இலங்கையைச் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தி, அதனூடாகப் பாரிய சந்தை வாய்ப்பைப் பெற்றக்கொள்ளும் சந்தர்ப்பம், இலங்கை உற்பத்தியாளர்களுக்கு இதன்மூலம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார். அதனால், நிரந்தரமற்ற அசௌகரியங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாது, இந்த விசேட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும், தொழில் முனைவோரிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயத்துறைக்கு சேதனப் பசளைப் பயன்பாட்டைக் கொண்டுசெல்லும் வேலைத்திட்டத்தைப் பல தரப்பினர் விமர்சனங்களுக்கு உட்படுத்தி வருகின்ற போதிலும், எதிர்காலச் சந்ததியினரின் நலனுக்காக, தைரியமான தீர்மானங்களை எடுப்பது தலைவர்களின் பொறுப்பாகுமெனவும், ஜனாதிபதி கருதுகிறார்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப சேதன விவசாயத்தின் ஊடாக, உலக நாடுகளின் பட்டியலில், நஞ்சற்ற முதல் தேசமாக எமது நாட்டை உருவாக்கிக்கொள்வது, அனைத்து இலங்கையர்களதும் கடமையாகும் என்றும், ஜனாதிபதி நினைவூட்டுகிறார். அதற்காக, நேர்மறையான எண்ணங்களூடாக அரசாங்கத்துடன் கைகோர்த்துக்கொள்ளுமாறு, அனைவருக்கும் அவர் அழைப்பு விடுக்கிறார்” என்றார்.

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .