2021 மே 13, வியாழக்கிழமை

இரணைத்தீவு கேள்விக்கு சுற்றிவளைத்தார் அமைச்சர்

Editorial   / 2021 மார்ச் 03 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை, (ஜனாஸாக்களை) கிளிநொச்சியிலுள்ள இரணைத்தீவில் அடக்கம் செய்வதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, இது தொடர்பான வழிகாட்டிகளைத் தயாரித்து வரும் குழுவால் அறிவிக்கப்படவுள்ளது என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (3)  நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில், இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்த அவர், இரணைத்தீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளதாகவும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதற்காக, நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவே, இந்த இடத்தை அடையாளம் கண்டுள்ளதென்றும் அரசியல் ரீதியாக இது குறித்து எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். 


இந்த ஜனாஸாக்கள் தொடர்பில், வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானிக்கு அமைய நாம் முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்து, இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும். இது தொடர்பான அடிப்படைத் தேவைகள், அதனை முன்னெடுப்பதற்கான நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்படும்.

தற்போது குறித்த இடத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கான சகல அடிப்படை விடயங்களும் பூர்த்தி செய்யப்பட்டு, எந்தவொரு சடலத்தையும் பொறுப்பேற்கும் விதத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அது தீவுப் பிரதேசம்; அங்கு சடலங்களைக் கொண்டு சென்று விஞ்ஞானபூர்வ அடிப்படையில் சுகாதாரப் பிரவினரால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய ஜனாஸாக்களை அடக்கம் செய்யமுடியும் எனத் தெரிவித்த அமைச்சர், சடலங்களை இரணைத்தீவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையானது முழுமையாக அரச செலவில் முன்னெடுக்கப்படும் என்றார்.

இதேவேளை, இரணைத்தீவில் குறிப்பிட்ட சிலரே வாசிக்கின்றனர். அவர்களுக்கு சுத்தமான குடிநீர் ( பைப்) மூலமாக கிடைப்பதில்லை. இந்நிலையில், சடலங்களை அடக்கும் செய்யும் போது, குடிநீர் ஊடாக அவருக்கு ஏதாவது பிரச்சினை உருவாகுமா? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அக்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வல, “ இதுதொடர்பில், சுகாதார பிரிவினரிடம் வினவி, பதிலளிப்பேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .