2025 ஜூலை 03, வியாழக்கிழமை

'தடயவியல் அறிக்கை மூடியே வைக்கப்படும்’

Editorial   / 2019 டிசெம்பர் 04 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை, பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படமாட்டாதென, அக்குழுவின் முன்னாள் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வு நிறைவுற்றுள்ள நிலையில், கோப் குழுவும் இரத்தாகியுள்ளது. இதனால், மேற்படி அறிக்கையை, எதிர்காலத்தில் நிறுவப்படவுள்ள புதிய கோப் குழுவிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், அதுவரையில் அதை, இரகசிய அறிக்கையாக, கோப் குழுவின் செயலாளர் அலுவலகத்தில் வைக்கவுள்ளதாகவும், அவர் கூறினார்.

பிணைமுறி மோசடி தொடர்பில், தடயவியல் அறிக்கைகள் ஐந்து, இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றை, கோப் குழு உறுப்பினர்கள் மாத்திரமே பயன்படுத்த முடியுமென்றும் தெரிவித்த ஹந்துன்நெத்தி, அவற்றை, சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டுமென்றும் சட்டமா அதிபர் வழங்கியுள்ள ஆலோசனைகளின் பிரகாரம், அவற்றின் இரகசியம் பேணப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

அதேவேளை, “எட்டாவது நாடாளுமன்றத்தின் 3ஆவது கூட்டத்தொடர் நிறைவுற்றுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் சுமார் 50 தெரிவுக் குழுக்கள் இரத்தாகியுள்ளன” என நாடாளுமன்றச் செயலாளர் தம்மிக தசநாயக்க அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான தீர்மானம், புதிய கோப் குழுவாலேயே எடுக்கப்படுமெனத் தெரியவருகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .