2021 மே 18, செவ்வாய்க்கிழமை

தற்கொலைக்குண்டுதாரி என் காதலியாம்

Kanagaraj   / 2016 மார்ச் 23 , பி.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

என் வீட்டுப் பாதுகாப்பைக் கூட கவனத்திற்கொள்ளாது, முழு நாட்டின் பாதுகாப்பையும் கவனத்திற்கொண்டிருந்த போதே, என் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், தற்கொலைக் குண்டுதாரி என காதலி என்று, எதிரணியினர் தற்போது கூறிவருகின்றனர்' என்று, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'பயங்கரவாதிகளிடம் யாழ்ப்பாணம் விழுந்த போது, அதனை மீட்டெடுக்க யாரும் முன்வரவில்லை. கடும் எதிர்ப்புக்கு மத்தியில், என்னை நியமித்தனர். நான் சென்று, நான்கு திசைகளிலும் பலமுனைத் தாக்குதல்களை நடத்தி, யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றினேன்' என்றார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 'யுத்த வெற்றியைத் தம்வசப்படுத்திக் கொள்ள முயன்ற தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, நாட்டை ஆட்சிசெய்ய முடியாவிடின், தன்னிடம் தருமாறு கோரிநின்றார். நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் இருக்கும் போது, சாதாரண எம்.பியான மஹிந்த ராஜபக்ஷவிடம் எப்படி நாட்டை ஒப்படைப்பது? அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, நாட்டைக் கட்டியெழுப்பிய விதம், எங்களுக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் தெரியும்' என்றார்.

'அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுமாறு எனக்கு அறிவுறுத்தினர். அதற்கு நான் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன். அதேபோல, ஆனையிறவு விழவிருந்த வேளையில், ஹெலியில் சென்று அதனையும் காப்பாற்றினேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .