2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’தாக்கம் அதிகரித்தால் பின்போடுவதில் சிக்கலில்லை’

Gavitha   / 2020 மார்ச் 17 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலை பிற்போடுவது தொடர்பாக இப்போதைக்கு எந்தவொரு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன, கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்குமாக இருந்தால், பொதுத் தேர்தலை பின்தள்ளிப் போடுவதில் எந்தவொரு சிக்கலும் ஏற்படாது என்றும் கூறினார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நெலும் மாவத்தையிலுள்ள அலுவலகத்தில், இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முழு உலகமும், கொரோனா வைரஸ் போன்றே இதற்கு முன்னர் பல நோய்த் தொற்றுக்கு உள்ளாகி, அதிலிருந்து வெளியே வந்ததாகத் தெரிவித்த அவர், மார்ச் மாதம் 1ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு வந்தவர்களாலேயே, இந்தப் பாரிய பிரச்சினை இலங்கையில் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

இராணுவம், வைத்தியர்களின் ஆலோசனைகளை தாங்கள் பெற்று வருவதாகவும் இந்த நிலைமை எந்த அளவுக்கு பாரதூரமானதாக அமையும் என்பது தொடர்பிலான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், பொதுத் தேர்​தலை தள்ளி வைப்பதானால், அதில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது என்றும் கூறினார்.

அத்துடன், சமூக வலைதளங்களில் தற்போது பிரபலமாகி வரும் #lockdownsl பற்றி கூறிய அவர், ஒரு நகரத்தை முற்றாக முடக்கி விடுவது என்பது, அவ்வளவு சாதாரண விடயம் அல்ல என்றும் ஆனால், அது குறித்து ஜனாதிபதி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறினார்.

ஒரு நகரத்தை முடக்குவதன் மூலம், நோயால் பாதிக்கப்படுவோர் குறைந்தாலும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளோர் பசியால் இறப்பது அதிகரித்து விடும் என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறான நிலைமையை ஏற்படுத்த, இந்த அரசாங்கம் இடம்கொடுக்காது என்றும் கூறினார்.

பொதுத் தேர்தலை நடத்தவேண்டும் என்று ஜனாதிபதி கூறிவந்தாலும், ​அவர் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தே அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முகமாக, ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயம், இன்று (17) முதல் நாளை மறுதினம் (19) வரை மூடப்பட்டிருக்கும் என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

அத்துடன், வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வருவோர், கூட்டமாக அல்லாமல், முடிந்தளவு தனியாக வருமாறும் அக்கட்சி கோரியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .