Editorial / 2026 ஜனவரி 27 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

தோட்டங்களில் பணிபுரியும் மக்கள் ஒரு நாளைக்கு 1,750 ரூபாய் சம்பளத்தை பெறுவார்கள். இந்த மாதம் பெப்ரவரி 10ஆம் திகதி அந்த சம்பளம் கிடைக்கும் என்று தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இதை மேலும் அதிகரிக்க நாம் முயற்சிக்க வேண்டும். ஆனால் இது இலங்கையில் முதல் முறையாக நடக்கிறது. இந்த 400 ரூபாய் நாளாந்த சம்பள உயர்விலிருந்து 200 ரூபாவை ஏற்க அரசாங்கம் முடிவு செய்தது.
டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான 'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் ஜனாதிபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (27) அன்று ஆரம்பமானது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, சேதமடைந்த அனைத்து மதத் தலங்களும் அவற்றின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாக்கும் வகையில் மீண்டும் கட்டியெழுப்பப்படும். மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய அதிகார சபை நிறுவப்படும் அத்துடன், முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புகள் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். 13 வருடக் கல்வியை நிறைவு செய்யாமல் எந்தப் பிள்ளையும் பாடசாலையை விட்டு வெளியேறக்கூடாது என்றார்.
‘டிட்வா’ சூறாவளியால் கண்டி, உடபலாத பிரதேச சபைப் பகுதியில் 06 மதத் தலங்கள் முழுமையாக சேதமடைந்ததுடன் 15 மதத் தலங்கள் பகுதியளவு சேதமடைந்தன். அவற்றை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் சூறாவளியால் சேதமடைந்த தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
‘டிட்வா’ சூறாவளியால் சுமார் 1,350 மத, கலாசார மற்றும் தொல்பொருள் தலங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கிராமங்கள், விகாரைகள் மற்றும் மதத் தலங்களுக்கு இடையேயான தொடர்பை மீண்டும் நிலைநாட்ட இந்த மதத் தலங்களை விரைவாக மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நமது நாடு அண்மையில் ஒரு பாரிய பேரழிவைச் சந்தித்தது. அந்தப் பேரழிவு அண்மைய இலங்கை வரலாற்றில் மிகப் பாரிய இயற்கை பேரழிவாகும். சுமார் இரண்டாயிரம் மண்சரிவுகள் பதிவாகியுள்ளன. ஏராளமான மனித உயிர்களையும் இழந்தோம். அதிகளவான சொத்துகள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தோம்.
மேலும், வீதிக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வது மிகவும் முக்கியமானது. மாகாண மட்டத்தில் சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபை இந்த ஆண்டு 24,000 மில்லியனை ஒதுக்கியுள்ளது. மேலும், மாகாண சபைகளுக்கும் 8,000 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளோம். உள்ளூராட்சி நிறுவனங்களின் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த வீதி நிர்மாணிப்புக்காக ஒதுக்கியுள்ளன. எனவே, வீதிகளை புனரமைக்கும் பணிகளை மிக விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இந்த மாதம் பெப்ரவரி 10ஆம் திகதி சம்பளம் பெறும்போது, தோட்டங்களில் பணிபுரியும் மக்கள் ஒரு நாளைக்கு 1,750 ரூபாய் சம்பளம் பெறுவார்கள்.
கிராமப்புற மக்களை சுழற்சி வறுமையிலிருந்து விடுவிப்பதற்கான முக்கிய வழி கல்விதான். அதனால் நாங்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். 38,000 மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொள்ள முன்பே பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள்.
சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் சுமார் 74% பேர் 10ஆம் வகுப்பு வரை கல்வி கற்காதவர்கள். அவர்கள் குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்களில் தொடர்புபட்டுள்ளனர்.
எனவே, சாதாரண தரப் பரீட்சைக்கு முன்பே பாடசாலையை விட்டு வெளியேறுவதை நிறுத்த வேண்டும். சாதாரண தரப் பரீட்சைக்குப் பிறகு, அவர்களில் பெரும்பாலோர் பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள். சிலர் க.பொ.த உயர் தரத்திற்குத் தோற்றுகிறார்கள், அதில் சித்திபெற்ற பிறகு, ஒரு குழு பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறது. அதுதான் நம் நாட்டின் கல்விப் பாதையாகும் என்றார்.
48 minute ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
7 hours ago
8 hours ago