2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தேர்தல் ஒத்திவைப்பே சிரமங்களுக்கு காரணம்: தினேஷ்

Kanagaraj   / 2016 மே 23 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளை திட்டமிட்ட முறையில் முன்னெடுப்பதில், அரசாங்கம் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துவருகிறது எனச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களைப் பிற்போட்டமையே இந்தச் சிரமங்களுக்குக் காரணமென்றும் தெரிவித்தார்.

'உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படாமல் இருந்திருந்தால், அந்தந்தப் பிரதேச, மாநகர மற்றும் நகர சபைகளின் உறுப்பினர்கள், அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கான நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதில் மும்முரமாக இருந்திருப்பார்கள். அரசாங்கத்துக்கும், இவ்விடயம் தொடர்பில் சிக்கல் நிலை எழுந்திருக்காது' எனத் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியவில் உள்ள அபயராம விஹாரையில், நேற்றுத் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்ததாவது,

 'சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சார்பில் அனுதாபத்தைத் தெரிவிக்கின்றோம்.

இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணப் பொருட்களை ஒழுங்கான முறையில் பங்கிடுவதில், அரசாங்கம் பல சிக்கல்களை எதிர்கொண்டதாக பிரதமர் வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார்.

இவ்விடயத்தில் அரசாங்கத்தை விமர்சிப்பதில் எவ்விதப் பயனும் இல்லை. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவு, அவர்களுக்குத் தேவையான மருந்து, உடமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது, மனிதர்களாகப் பிறந்த நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் பணியினை, அபயாராம விஹாரையின் ஊடாக மேற்கொள்கின்றோம். முடியுமானவர்கள் அபயராம விஹாரையில் கொண்டுவந்து கொடுக்கலாம். தூர இடங்களில் வசிப்பவர்கள், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கிளைக் காரியாலயங்களில் ஒப்படைக்கலாம்' எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .