Janu / 2026 மார்ச் 03 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த முயன்ற இலங்கை பயணிகள் இருவர், திங்கட்கிழமை (02) அன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் கடமையில் இருந்த சுங்க அதிகாரிகள் மற்றும் இலங்கை சுங்க திணைக்களத்தின் பல்லுயிர், கலாச்சாரம் மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 45 வயதுடைய சந்தேக நபர்கள் செல்லப்பிராணிகள் விற்பனை வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் திங்கட்கிழமை (02) காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-314 என்ற விமானம் மூலம் மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி பயணிக்கவிருந்தனர்.
இவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பைகளை சோதனையிட்ட போது ஈரத்துணிகளால் சுற்றி மறைத்து வைக்கப்பட்ட நட்சத்திர ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கையின் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ள இந்த நட்சத்திர ஆமைகள், அழிந்துவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களாகும். மேலும், இவை 'சிதேஸ்' (CITES) எனப்படும் சர்வதேச வர்த்தக உடன்படிக்கையின் கீழ் பட்டியலிடப்பட்டு, சர்வதேச ரீதியாக வணிக ரீதியான வர்த்தகத்திற்கு தடை செய்யப்பட்ட ஒரு இனமாகும்.
கைது செய்யப்பட்ட பயணிகள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் வியாழக்கிழமை (05) வரை விளக்கமறியலில் வைக்கவும், மீட்கப்பட்ட ஆமைகளை உரிய பராமரிப்புடன் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கத்தின் பல்லுயிர் பாதுகாப்பு பிரிவு ஆகியன இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
டீ.கே.ஜி கபில

33 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago