2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

நீதிமன்ற காணொலியில் வந்த ஆபாச படங்கள்

Editorial   / 2026 ஏப்ரல் 30 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

  

  கணினியுடன் இணைக்கப்பட்ட திரையில் வழக்குடன் தொடர்புடையவர்கள் தோன்றிச் சாட்சியம் அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரெனத் திரையில் அதிகச் சத்தத்துடனும் இரைச்சலான இசையுடனும் ஆபாச வீடியோக்கள் ஒளிபரப்பாகின. இதனால் அதிர்ச்சியடைந்த நீதிமன்ற ஊழியர்கள், உடனடியாகக் கணினி இணைப்பைத் துண்டித்தனர். இந்த சம்பவம், புதுடெல்லி உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்துவது வழக்கம். நேற்று மட்டும் 180 வழக்குகள் விசாரணைக்காகப் பட்டியலிடப்பட்டிருந்தன.

தலைமை நீதிபதி தேவேந்திர குமார் மற்றும் நீதிபதி தேஜஸ் கரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று வழக்கு ஒன்றைக் காணொலி வாயிலாக விசாரித்தனர். கணினியுடன் இணைக்கப்பட்ட திரையில் வழக்குடன் தொடர்புடையவர்கள் தோன்றிச் சாட்சியம் அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரெனத் திரையில் அதிகச் சத்தத்துடனும் இரைச்சலான இசையுடனும் ஆபாச வீடியோக்கள் ஒளிபரப்பாகின. இதனால் அதிர்ச்சியடைந்த நீதிமன்ற ஊழியர்கள், உடனடியாகக் கணினி இணைப்பைத் துண்டித்தனர்.

சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் இணைப்பு ஏற்படுத்தப்பட்டபோது, மறுபடியும் ஆபாச வீடியோ ஒளிபரப்பானது. விசாரணை நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியபோது, "உங்கள் கணக்கு ஹேக் (Hack) செய்யப்பட்டது" என்ற குறிப்பு திரையில் தோன்றியது. அடுத்தடுத்து ஏற்பட்ட இத்தகைய இடையூறுகளால் காணொலி வாயிலாக நடத்தப்பட்ட விசாரணை முழுமையாக நிறுத்தப்பட்டது. இந்த சைபர் தாக்குதலால் டெல்லி உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. இது குறித்து நீதிமன்ற நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், நீதிமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் தனது திரையைப் பகிர்ந்து (Screen Share), ஆபாச வீடியோக்களை இயக்கியது தெரியவந்துள்ளது. ஸ்ரீதர் சர்னோபத் மற்றும் ஷித்ஜீத் சிங் ஆகியோரின் பெயர்களில் கணக்குகள் இயங்கியதைத் தொடர்ந்து, அவர்களை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

காணொலி வாயிலாகப் பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் சூழலில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களையும் கவலைகளையும் எழுப்பியுள்ளது. இனிவரும் காலங்களில், இதுபோன்ற விசாரணைகளின்போது கூடுதல் பாதுகாப்பு அடுக்குகளை ஏற்படுத்துவது குறித்து நீதிமன்ற நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .