2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’நிலையான பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றோம்’

Freelancer   / 2025 செப்டெம்பர் 28 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்ட இலங்கை தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்புப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றது எனவும் அந்த சுபீட்சத்தின் மூலம் அனைத்துப் பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்வதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் 'எக்ஸ்போ 2025' உலகக் கண்காட்சியில் நேற்று நடைபெற்ற இலங்கை தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
 
நட்புறவு, பொதுவான இலக்குகள் மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை ஜனாதிபதி தனது உரையில் வலியுறுத்தினார்.  

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் உரையாற்றுகையில்,
 
நட்புறவு என்பது மனிதகுலத்தின் விலைமதிப்பற்ற பிணைப்புகளில் ஒன்றாகும். இது தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் கலாசாரங்களை இணைத்து, எல்லைகளைக் கடந்து, ஒரு சிறந்த உலகை உருவாக்க நாடுகளை ஒன்றிணைக்கிறது.
 
'எக்ஸ்போ 2025' கண்காட்சி, பரஸ்பர நட்புறவு, நல்லிணக்கம், கலாசார பன்முகத்தன்மை மற்றும் மனித விழுமியங்களை வெளிப்படுத்த 150 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு உலகளாவிய தளமாகச் செயல்படுகிறது.
 
இலங்கையின் பாரம்பரியத்தின் செழுமையை மட்டுமல்லாமல், நிலைபேறான, வலிமையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தேசம் என்ற எமது தெளிவான நோக்கையும் இங்கு நாம் உலகிற்கு முன்வைக்கிறோம்.
 
எக்ஸ்போ 2025 இல் இலங்கையின் பங்கேற்பு, நவீன மற்றும் உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நகரும் ஒரு தீர்க்கமான பொருளாதார மாற்றத்திற்கான நாட்டின் அர்ப்பணிப்பை நிரூபிக்க ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
 
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, விவசாயம் மற்றும் கடல் வளங்களின் நிலைபேறான பயன்பாடு போன்ற அதிக திறன் கொண்ட துறைகளை வளர்ப்பதற்கான இலங்கையின் கொள்கையை இது பிரதிபலிக்கிறது.
 
சவால்களைத் தொடர்ந்து எதிர்கொண்ட நாம், இப்போது நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புகிறோம். இதன் மூலம் அபிவிருத்தியின் பலன்கள் பரவலாகப் பகிரப்படுவதையும், அனைத்துப் பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படுவதையும் உறுதி செய்வோம் என்று ஜனாதிபதி உறுதியளித்தார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X