Editorial / 2026 ஜனவரி 19 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்
நவீன பிரபாகரன்களான கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அதற்கு மறைமுக ஆதரவு வழங்கும் அரச தரப்பு என்பவற்றிடம் இருந்து திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர்சிலையை பாதுகாக்க நாம் இன்று போராடுகின்றோம் என்று திருகோணமலையில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, திங்கட்கிழமை (19) கூறினார்.
“2004 இல் திருகோணமலை நகர மத்தியில் வைக்கப்பட்ட புத்தர்சிலையை பாதுகாக்க பிரபாகரனுடன் போரிட்டு அதனை பாதுகாத்தோம்.புத்தர் சிலைகளை பாதுகாக்க நாங்கள் எப்போதும் போராடுவோம்" என்றார்.
திருகோணமலை டச்பே கடற்கரையில் 2025 நவம்பர் 16 மாதம் வைக்கப்பட்ட புத்தர்சிலை தொடர்பிலான வழக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் திங்கட்கிழமை (19) எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை பார்வையிட்ட பின்னர் சரத் வீரசேகர நீதிமன்றத்திற்கு வெளியில் ஊடகங்களை சந்தித்த போதே மேற்கண்ட கருத்தை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்
"நாட்டின் ஜனாதிபதியும்,பிரதமரும் ஏனைய சில அமைச்சர்களும் பெளத்த சமயத்தையும்,பெளத்த சாசனத்தையும் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்.இதற்கு மேலாக தற்போது பெளத்த பிக்குகளை கைது செய்து சிறையில் வைத்துள்ளனர்.இவ்வாறு இவர்கள் தொடர்ந்து பெளத்தத்திற்கு எதிராக செயற்படுவதை நாம் அனுமதிக்க மாட்டோம்” என்றார்
ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்று பொங்கல் உண்ணுகின்றார்.ஆனால் சில் அனுஷ்டிக்க தெற்கில் இருந்து வடக்கிற்கு செல்லும் பெளத்தர்களை அவமதித்து கருத்து கூறுகின்றார்.தெற்கில் இருந்து செல்பவர்கள் இனவாத முரண்பாட்டை ஏற்படுத்தவே வடக்கிற்கு செல்கின்றனர் என்று கூறி எமது மத செயற்பாடுகளை நிந்திக்கின்றார்.பிரதமரும்,அமைச்சர் லால் காந்தவும் கூட தொடர்ந்து கெளரவத்திற்குரிய பிக்குமாரை அவமதிக்கும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த பெளத்த சிங்கள மக்களுக்கு இதன் மூலம் துரோகம் இழைக்கப்படுகின்றது" என்று அவர் மேலும் கூறினார்.
இதே வேளை வழக்கு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா ஜெகம்பதி,மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் ,மிகிந்தலை விகாரையின் நாயக்க தேரர் மற்றும் அதிக எண்ணிக்கையான தேரர்கள்,அரசியல்வாதிகள் ஆகியோர் திருகோணமலைக்கு வருகை தந்திருந்தனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .