2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நிலைவரங்கள் தொடர்பில் 20ஆம் திகதி ரீட்டா அறிக்கையிடுவார்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுபான்மை விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரான ரீட்டா ஐசக் என்டியாயே, இலங்கை நிலைவரங்கள் தொடர்பில் எதிர்வரும் 20ஆம் திகதி, கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் வைத்து, விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். 

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், 10 நாட்கள் உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நேற்றுத் திங்கட்கிழமை (10) காலை இலங்கை வந்தடைந்த இவர், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இங்குவாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள், சவால்கள், உரிமை மீறல்கள், அடிப்படை வசதிகள் குறித்து நேரடி ஆராய்வொன்றை நடத்திய பின்னரே மேற்படி அறிக்கையினை அவர் வெளியிடவுள்ளார். 

மேலும், அரச தரப்புப் பிரதானிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாகாண முதல்வர்கள், உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் முக்கிய சந்திப்பிலும் ஈடுபடவுள்ளார். 

இது குறித்து, ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளரான ரீட்டா கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,  

“25 வருடங்களுக்கும் மேல் நிலவிய போரினால் ஏற்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, புதிய அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்தவகையில், இந்த அரசாங்கமானது ஆட்சிபீடமேறிய காலத்திலிருந்து தற்போது வரை முன்னேற்றமான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தாலும், சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையையும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த கடும் சவால்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றது. இந்நிலையில், எனது இந்த விஜயமானது இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஓர் உதவியாக இருக்கும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .