2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

புதிய அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர்கள் 32 பேருக்கு வெட்டு

Editorial   / 2019 நவம்பர் 22 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேனகா மூக்காண்டி

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று உருவாகவுள்ள புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.

48 முன்னாள் அமைச்சர்களைக் கொண்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில், 16 பேருக்கு மாத்திரமே அமைச்சுப் பொறுப்புகள் கையளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் 16 பேரில், தமிழர்கள் இருவர் உள்ளடங்குகின்ற நிலையில், அவர்கள் பெரும்பாலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானாகவும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவாகவும் இருக்க வாய்ப்பிருக்கின்றது.

இம்மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸவை விட, சுமார் 13.6 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றிபெற்று, இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மக்கள் ஆணைக்குத் தலைவணங்கி, புதிய ஜனாதிபதியால் புதிய அரசாங்கமொன்றை உருவாக்க இடமளிக்கும் நோக்கத்தில், தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாகக் கூறி, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகினார்.

அதைத் தொடர்ந்து, புதிய அரசாங்கத்துக்கான புதிய பிரதமராக, மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கான புதிய அமைச்சரவை, இன்று பதவியேற்கவுள்ளது.

பொதுத் தேர்தலுக்கு முன்னதான அமையவுள்ள குறுகியகால அரசாங்கம் என்பதால், குறுகிய எண்ணிக்கையுடைய அமைச்சரவையே நியமிக்கப்பட வேண்டுமென, ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த உள்ளடங்களாக 16 ​அமைச்சர்கள், இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

பிரதமர் தவிர்ந்த ஏனைய 15 பேருக்கான தெரிவு, மிகக் கடினமானதும் சவால்மிக்கதுமாக இருப்பினும், அந்தச் சவாலை எதிர்கொண்டு, நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலனுக்காக, பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலேயே அதிக அக்கறை செலுத்த வேண்டுமென்று, ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக, பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும, தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று (21) முற்பகல் 10 மணிக்கு, புதிய அமைச்சர்களுக்கான நியமனங்களும் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .