2025 ஜூலை 12, சனிக்கிழமை

’பெரும்பான்மையை நாடாளுமன்றில் நிரூபிக்கலாம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஷிவானி

புத்திஜீவிகள் உள்ளிட்டோரின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதன் பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த முடிவுக்கு வந்துள்ளார் என்று தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவரான கெஹெலிய ரம்புக்வெல, எதிர்வரும் 16ஆம் திகதியன்று நாடாளுமன்றம் கூடும்போது, பெரும்பான்மையை நிரூபிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து​கொண்ட, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து கருத்துதெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் இரண்டு பிரதமர்கள் இருப்பதாக மக்கள் குழப்பத்தில் உள்ளதுடன், ரணில் விக்கிரமசிங்கவே நாட்டின் பிரதமர் என, பெரும்பாலானோர் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு அரசாங்கம் என்ற வகையில் என்ன கூறுகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

பதிலளித்த கெஹெலிய ரம்புக்வெல எம்.பி,

“ஐக்கிய தேசியக் கட்சியினர், தங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக கூறினால் அவர்கள் அதனை நாடாளுமன்றில் நிரூபிக்கலாம். அத்துடன், புதிய பிரதமருக்கு எதிராக இதன்போது நம்பிக்கையில்லாப் தீர்மானத்தை கூட அவர்கள் கொண்டுவந்து தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்” என்றார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த ​போது அவருக்கு பெரும்பான்மை இருக்கவில்லை. எனினும், அப்போதைய நிலவரத்துக்கமைய, நாடாளுமன்றில் நம்பிக்கைக்குரியவர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். ​அதன்பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பினருடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு, அவ்வரசாங்கம் இதுவரைக்காலம் இயங்கியது என்றார்.

இதன்போது, கருத்து தெரிவித்த மஹிந்த சமரசிங்க,

ரணிலை பிரதமராக நியமித்த போது 41 எம்.பிக்களே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தனர். ஆனால், மஹிந்த தரப்பில் 161 பேர் இருந்தனர். எனினும், ரணிலே பிரதமரானார். எனினும், இன்று பெரும்பான்மையை நிரூபிக்க கூறுகின்றனர். எனினும், ரணிலை அன்று நியமித்தபோது யாரும், அது தொடர்பில் வினவவில்லை என்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு தூதுவர்களை நேற்று (29) சந்தித்து கலந்துரையாடியிருந்தார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து விளக்கமளித்திருந்தார் என்றார்.

அத்துடன் இலங்கையின் அரசியல் நிலவரம் மோசமானதாக உள்ளதாகவும் இதனால் நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றூலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும், வெளிநாட்டு முதலீடுகளை தடுக்கும் வேலைத்திட்டமாக இத்தகைய செயற்பாடுகள் காணப்படுகின்ற எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் மங்கள சமரவீர, அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறித்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர அரச ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவிக்க மங்களவுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் குறிப்பிட்டதுடன், அரச ஊழியர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறதெனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .