2025 ஜூலை 03, வியாழக்கிழமை

‘பொறுத்தது போதும்’ கண்டியில் ஆரம்பம்

Editorial   / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

 

ஒன்றிணைந்த எதிரணி ஏற்பாடு செய்துள்ள “​பொறுத்தது போதும்” முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில், எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 3 மணிக்கு, கண்டியில் நடத்தப்படுமென, அவ்வணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், கண்டியில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நாடுமுழுவதிலும் அரசாங்கத்துக்கு எதிராக 10 பாரிய பேரணிகளை தாம் முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்ததோடு, ஜனாதிபதித் தேர்தல் நடக்கவிருக்கின்ற டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி வரையில் இந்தப் பேரணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் அவர் இதன்போது கூறினார்.

எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற, மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் இந்தப் பாரிய பேரணியில் கலந்துகொள்ள உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

“மத்திய வங்கிக்குள் யானை தாக்குதல் நடத்தி இன்றோடு நான்கு வருடங்கள். இதனால், ஒரு டிரில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டது” என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கம தெரிவித்தார்.

இதேவேளை, மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், இறுதியாக டிசெம்பர் மாதம் கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரையோடு நிறைவு செய்யப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

“ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கி, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ள 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலக வேண்டும்” என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

“19ஆவது திருத்தச் சட்டம் ஒரு குடும்பத்தை மாத்திரம் இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திருத்தச் சட்டத்தால், நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த திருத்தத்தின் பின்னரே நாட்டில் பிரச்சினைகள் ஆரம்பித்தது” என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .