Editorial / 2025 டிசெம்பர் 21 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும்போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மதங்கள் என்ற வகையில் வழங்கப்பட்டுள்ளபொறுப்புகளையும், மக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் என்ற வகையில் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும் முறையாக நிறைவேற்றுவதன் மூலம், வரலாற்றில் நமக்கு இருந்த பெருமை மற்றும் கெளரவத்துடன் தாய்நாட்டை மீண்டும் விரைவாக கட்டியெழுப்ப முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்தார்.
தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை (21) அன்று நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுர மார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், நமது நாடு ஒரு சிறந்த பாரம்பரியத்தையும் வெற்றிகளையும் பெற்றிருந்தாலும், கடந்த சில தசாப்தங்களாக நாடு அனைத்து வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளாகியுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு, தாய்நாட்டை மீண்டும் உலகில் மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்படும் ஒரு நாடாக மாற்றுவதாகும் என்றும் தெரிவித்தார்.
ஒரு அரசாங்கமாகவும் ஜனாதிபதியாகவும் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை, நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாகப் பயன்படுத்துவேன் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அதற்கு தேவையான பொறிமுறைகளைத் தயாரிப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கும், அரசியலை மக்களின் செல்வத்தை குவிக்கும் தொழிலிலிருந்து, பொதுமக்களுக்கு சேவை செய்யும் சமூகப் பணியாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்றி வருவதாகவும் இங்கு குறிப்பிட்டார்.
தியத்தலாவ, இராணுவ கல்வியியல் கல்லூரிக்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் வீரமிக்க தலைவர்களை உருவாக்கிய இராணுவத்தின் சிறந்த பயிற்சி நிறுவனமான தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியின் 100ஆவது விடுகை அணிவகுப்பு நிகழ்வு இதுவாகும். வதிவிட கெடட் உத்தியோகத்தர் பாடநெறி எண் 93, 94B குறுகிய கால பாடநெறி எண் 23, வதிவிட பாடநெறி எண்62 மற்றும் தன்னார்வ பெண் கெடட் உத்தியோகத்தர் பாடநெறி எண் 19 ஆகியவற்றைச் சேர்ந்த 240 கெடட் உத்தியோகத்தர்கள் வெற்றிகரமான இராணுவப் பயிற்சிக்குப் பிறகு அதிகாரிகளாக இராணுவ சேவையில் இணைந்தனர். இவர்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த பல கெடட் உத்தியோகத்தர்களும் பயிற்றுவிக்கப்பட்டு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கெடட் உத்தியோகத்தர்களின் விடுகை அணிவகுப்பை பார்வையிட்டதுடன், திறமை வாய்ந்த கெடட் அணிக்கு விருதினையும், கெடட் வீரர்களுக்கு கௌரவ சின்னங்களையும், ஒவ்வொரு பாடநெறியிலும் முதலிடம் பெற்ற அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதுகளையும் வழங்கினார்.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் நாட்டிற்கும் மக்களுக்கும் இராணுவம் ஆற்றிய சேவை பாராட்டத்தக்கது என்றும், அண்மைய சூறாவளியின் போது மக்களை மீட்டெடுத்தல் மற்றும் அவர்களுக்கான வசதிகளை வழங்குவதில் ஆற்றிய சிறந்த பணிக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025