Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2017 மார்ச் 07 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பெண்களின் வகிபாகத்தையும் அவர்கள் எமது நாட்டுக்கு வழங்கியுள்ள பங்களிப்பையும் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினமான இந்நாளில், பாலின சமத்துவத்தையும் சம நீதியையும் உறுதி செய்வதோடு, இலங்கை வாழ் அனைத்துப் பெண்களின் சுய கௌரவத்தையும் பாதுகாக்கும் வகையிலான அபிலாஷைகளை, புதிய அரசியலமைப்பு உள்ளடக்க வேண்டும்” என்று, அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்துக்கான அவரது வாழ்த்துச் செய்தியில், சமுதாயத்தின் எல்லாக் கோணங்களிலும், பெண்களுக்கு அதிகளவு பாதுகாப்பையும் வலுவூட்டலையும் உறுதி செய்யவும் வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“எமது நாட்டுக்கு, பெண்களின் பங்களிப்பானது விலைமதிக்க முடியாததொன்றாகும். எனினும், துரதிர்ஷ்டவசமாக எமது சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலும், பெண்கள் ஒடுக்கப்படுதலுக்கும் துன்புறுத்தலுக்கும், கொடுமைகளுக்கும் முகங்கொடுக்கிறார்கள்.
மேலும், இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தில், அதிகம் பாதிப்புக்குள்ளானவர்களாக பெண்களே காணப்படுகிறார்கள். யுத்தமானது, அவர்களின் அன்புக்குரியவர்களின் உயிர்களைக் காவுகொண்டதுடன், அநேகரை விதவைகளாக்கியுமுள்ளது. அத்துடன் அவர்களது வாழ்வாதாரங்களையும் இல்லாமல் செய்தது. இதற்கும் மேலாக, இன்றுவரை ஆயிரக்கணக்கான பெண்கள், யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் காணாமற்போன தமது அன்புக்குரியவர்களைத் தேடி வருகிறார்கள்.
மேலும், பெண்களை வலுவற்றவர்களாகவும் துஸ்பிரயோகத்துக்கும், பல்வேறு சுரண்டல்களுக்கும் உள்ளாக்குவதால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு பாதிப்பாக உள்ளது. இவ்விடயம் தொடர்பில், அவசரமான கவனமும் நடவடிக்கைகளும் தேவையாகவுள்ளன.
எமது நாட்டு வரலாற்றின் முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் பிரவேசித்துள்ள இத்தருணத்தில், நிலைமாற்று நீதி செயன்முறைகளில், பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, இந்த செயன்முறைகளில் பெண்களின் முழுமையான பங்களிப்பை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திடம் கோருகின்றேன்.
இறுதியாக, செழிப்பும் முன்னேற்றமுமான நாட்டினை நோக்கி பெண்கள் வழங்கிய அதீத பங்களிப்புகளை வரவேற்பதோடு, எமது நாட்டின் அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் தொடர்ந்தும் அயராது பங்காற்ற வேண்டும் என, அனைத்து பெண்களிடமும் கோருகின்றேன்” என, அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago