2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மறப்போம் மன்னிப்போமுக்கு நவநீதம்பிள்ளை கடும் விமர்சனம்

Editorial   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், அண்மையில் கிளிநொச்சியில் வைத்துத் தெரிவிக்கப்பட்ட “மறப்போம் மன்னிப்போம்” என்ற கருத்தில், நீதி, பொறுப்புக்கூறல் குறித்த முக்கியமான வாக்குறுதிகள் இடம்பெற்று இருக்கவில்லையென்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை, கடுமையாக விமர்சித்துள்ளார்.  

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர், இலங்கை அரசாங்கமானது, நீதி, பொறுப்புக் கூறல்களை உறுதிசெய்வதாக உறுதியளித்துள்ள போதிலும், உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கு மாத்திரம், அமைச்சரவையின் அனுமதியைப் பெறமுயல்வதன் மூலம் பின்னோக்கிச் செல்ல முயல்வதாகவும் விமர்சித்துள்ளார்.  

தென்னாபிரிக்காவின் மாதிரியைத் தவறாக அர்த்தப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், தென்னாபிரிக்காவானது, உண்மையைத் தெரிவிப்பது; விசாரணை இழப்பீடு என்பவற்றையும் உள்வாங்கியிருந்ததாகவும், நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டி உள்ளார்.  

தென்னாபிரிக்காவில் பின்பற்றப்பட்ட முறை என்பது பூரணமானது இல்லையெனினும் அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலைக்கு, அது உகந்ததாக இருந்ததால், அம்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தென்னாபிரிக்காவில் காணப்பட்ட நிலைமையை இலங்கையில் இடம்பெற்ற விடயங்களுடன் ஒப்பிட முடியாதென்றும் இங்கு பாரிய படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல் உட்பட பல்வேறு அட்‌டூழியங்களை பொதுமக்கள் அனுபவித்தனரென்றும் தெரிவித்துள்ளார்.  

இலங்கைப் பிரதமர் தெரிவித்திருப்பது போன்று, தென்னாபிரிக்க மக்கள் வழக்குத் தாக்கல் செய்யாமலிருக்கவில்லை என்றும் கடந்த மாதம் கூட, பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்ட ஒருவரது குடும்பத்தவர்கள், பொலிஸாருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனரென்றும், நவநீதம்பிள்ளை மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .