2026 ஜனவரி 17, சனிக்கிழமை

’முழு நாடுமே ஒன்றாக’ வட மாகாண நிகழ்ச்சி

Freelancer   / 2026 ஜனவரி 17 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது என்றும், எந்தப் பிரஜை, நகரம், கிராமம், ஏழை, பணக்காரன், சிங்களவர், தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல் பரவும் இந்த  போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு பலமாக செயல்படுத்தப்படும் என்றும், அது  ஒருபோதும் பின்வாங்கப்படும் ஒரு செயற்பாடாக இருக்காது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மேலும், ஒரு சமூகமாக மக்கள் தமது பொறுப்பை நிறைவேற்றவும், அதற்காக ஒரு பாரிய பாதுகாப்பு அரணாக ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று (16) பிற்பகல் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

போதைப் பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு தீவிர பங்களிப்பை வழங்கிய வட மாகாண முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.  

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, "முழு நாடுமே ஒன்றாக" தேசிய வேலைத்திட்டம் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ஒரு வேலைத்திட்டம் மாத்திரமன்றி, அதற்கு ஆளான பிள்ளைகளுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களுக்கு சிறந்த தொழிற்பயிற்சி வழங்கி, கிராமத்திற்கும் நாட்டிற்கும் பயன்மிக்க பிரஜைகளாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டமாகும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் முதல் முறையாக, தெற்கு மற்றும் வடக்கு மக்களால் சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்பகமான அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதிகாரத்தை இழந்த இனவாத குழுக்கள் சிறிய, சிறிய இடங்களில் இனவாதத்தை மீண்டும் தூண்ட முயற்சித்தாலும், நாட்டில் மீண்டும் எந்த இனவாத போக்கும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், வட மாகாணத்தில் கிராமப்புற வீதிகளின் அபிவிருத்திக்காக கடந்த ஆண்டு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டும் அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அந்தப் பணத்தை முறையாகப் பயன்படுத்தி மக்கள் அந்த அபிவிருத்திப் பலன்களைப் பெறுவதை உறுதி செய்ய அரசியல் வாதிகளும், அரச அதிகாரிகளும் பங்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X