Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி, மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியில் நியமிப்பதற்காக எடுத்த முடிவை நேற்று (28) நியாயப்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அரசமைப்புக்கு ஏற்பவே மேற்கொள்ளப்பட்டன எனவும் தெரிவித்தார்.
இலங்கையில் அண்மைய நாள்களாக ஏற்பட்டுள்ள அரசியல் பதற்ற நிலைமை தொடர்பாக, தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, உணர்வுபூர்வமாக உரையாற்றினார்.
அவரின் உரையில் அநேகமான பகுதிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான விமர்சனங்களாக அமைந்ததோடு, அவரோடு இணைந்து பணியாற்றுவதில், தனக்குப் பிரச்சினைகள் காணப்பட்டன என்பது தொடர்பாகவும் காணப்பட்டது.
பிரதமராக மஹிந்தவை நியமிப்பதற்கு எடுத்த முடிவை, 2014ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி, அப்போதைய அரசாங்கத்திலிருந்து பிரிந்து, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எடுத்த முடிவோடு ஒப்பிட்ட அவர், அம்முடிவை விட மிகவும் சவாலானதும் ஆபத்தானதுமான முடிவாக இம்முடிவு அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். அவ்விரு முடிவுகளையும், நாட்டின் நன்மைக்காகவே எடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், அதைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க மீதான கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
“ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டின் சிறப்புரிமை கொண்டவர்களாக அமைந்த அவரின் நெருங்கிய நண்பர்கள் குழுவும், மக்களின் நாடித்துடிப்பை அறிந்திருக்கவில்லை. அத்தோடு, அவர்கள் விளையாடிய களிப்பான விளையாட்டுப் போல, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பது அமைகிறது என்பது போல நடந்துகொண்டனர்” என்று குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி, நல்லாட்சியின் அடிப்படையான கொள்கைகளை, ரணில் விக்கிரமசிங்க மீறிவிட்டார் என உணர்வதாகவும் தெரிவித்தார்.
நல்லாட்சி தொடர்பாகக் காணப்பட்ட எதிர்பார்ப்புகளை, ரணில் விக்கிரமசிங்க உடைத்துவிட்டார் என்று குற்றஞ்சாட்டிய அவர், ஊழலும் மோசடியும், நாடு முழுவதிலும் பரவிக் காணப்பட்டது எனவும், இணைந்த முடிவுகளை எடுப்பதை அவர் தவிர்த்தார் எனவும், தனிப்பட்ட முடிவுகளையே எடுத்தார் எனவும், இதன் காரணமாகப் பல முரண்பாடுகள் ஏற்பட்டன எனவும் குறிப்பிட்டார்.
“கொள்கை வேறுபாடுகளுக்கு மேலதிகமாக, கலாசார அடிப்படையிலும், விக்கிரமசிங்கவுக்கும் எனக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்பட்டன” எனத் தெரிவித்த அவர், கொள்கை, கலாசாரம், ஆளுமை, நடத்தை ஆகியவற்றில் தங்கள் இருவருக்குமிடையில் காணப்பட்ட வேறுபாடுகள், இந்த அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்டது என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி சிறிசேன, அண்மைக்காலத்தில் வெளியிட்ட கருத்துகள் சில, சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்ததோடு, ஜனாதிபதிப் பதவிக்குப் பொருத்தமற்றுக் காணப்படுகின்ற என்ற குற்றச்சாட்டுகள் காணப்பட்ட நிலையில், அதைச் சுட்டிக்காட்டிய அவர், ரணில் விக்கிரமசிங்கவின் நடத்தை காரணமாகவே, அவ்வாறு நடந்துகொள்ள வேண்டியேற்பட்டது எனக் குறிப்பிட்டதோடு, தன்னையும் நியாயப்படுத்தினார். “அமைச்சரவைக் கூட்டங்களின் போது இடம்பெற்ற உள்வீட்டுக் கலந்துரையாடல்களில், எவ்வளவு பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் வெளிப்படுத்தினேன் என்பதை, எனது மனசாட்சி அறியும்” என்று, அவர் தெரிவித்தார்.
தன்னைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவருக்குத் தொடர்புள்ளது என்று குற்றஞ்சாட்டிய அவர், தன் மீதான கொலை முயற்சி தொடர்பாக, மூடிமறைக்கும் முயற்சிகள் இடம்பெற்றன எனக் குற்றஞ்சாட்டினார். குறிப்பாக, நாலக குமாரவால் ஒலிப்பதிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு 48 மணிநேரங்களுக்குள், நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்காமல், அக்குரல் பதிவு தொடர்பில் சந்தேகம் காணப்படுவதாக, பொலிஸ்மா அதிபர் தெரிவித்தாரெனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அது தொடர்பாக விசாரிப்பதற்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, அவ்வழக்கு வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பாகவும், தனது கவனத்தை வெளிப்படுத்திய அவர், அப்பிரச்சினை எழுந்திருந்த போது, மத்திய வங்கிக்குச் செல்வதற்குத் தான் முயன்றபோது, “மத்திய வங்கி எனக்குரியது. அங்கு செல்வதற்கு ஏன் செல்ல விரும்புகிறீர்கள்?” என, தனது வாசஸ்தலுக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க கேட்டாரெனவும், எனினும், ஜனாதிபதி என்ற ரீதியில் அங்கு செல்வதற்கான உரிமை தனக்குள்ளது எனப் பதிலளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு, அதன் பின்னர் மத்திய வங்கிக்குக்குச் சென்ற போது, அப்போது விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த, மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், வெற்றிலையோடு தன்னை வரவேற்றார் எனவும், அவர் அங்கே எவ்வாறு வந்தார் என்பது குறித்து ஆச்சரியமடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
இன்னொரு கட்டத்திலும், மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்குக் கொண்டுவந்து, நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்த வேண்டிய பொறுப்பு, ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது எனத் தெரிவித்ததோடு, “அது ஏனென்றால், அனைவரும் அறிந்தபடி, அர்ஜுன மகேந்திரன், ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர்” என்று தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைக்கு, ரணில் விக்கிரமசிங்கவின், “பிடிவாதத்தனமான” முடிவுகளே காரணமெனக் குற்றஞ்சாட்டிய அவர், இதன் காரணமாக, மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக நியமிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் தனக்கு இருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டமை, அரசமைப்புக்கு முரணானது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி அவர், “இந்த நியமனங்கள் அனைத்தும், அரசமைப்புக்கு ஏற்பவும், சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு ஏற்பவுமே மேற்கொள்ளப்பட்டன என்பதை, உறுதியாகத் தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்ததோடு, அரசமைப்புக்கு முரணான முடிவு என்பதை முற்றுமுழுதாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.
தன்னாலும் மஹிந்த ராஜபக்ஷவாலும் உருவாக்கப்பட்டுள்ள அரசாங்கத்துக்கான ஆதரவை வழங்குமாறு, அனைவரிடமும் கோரிய அவர், அந்தக் கோரிக்கையை, நாடாளுமன்றில் 225 உறுப்பினர்களிடம் கூறுவதாகவும், பொதுமக்களும் அரசியல்வாதிகளும் மகா சங்கத்தினரும் சமயத் தலைவர்களும், தான் எடுத்துள்ள முடிவுக்கு ஆதரவு வழங்க வேண்டுமெனவும் கோரினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
23 minute ago
36 minute ago
38 minute ago