2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’முஸ்லிம்களை அடிமைப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது’

Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கொவிட் 19 தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் நாங்கள் கதைக்கும் விடயங்கள், அரசாங்கத்தின் காதுகளுக்குள் செல்வதில்லை. நாங்கள் அமல்படுத்துகின்ற சட்டங்களுக்கு, முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது” என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மருத்துவத் துறையிலுள்ள சிரேஷ்ட பேராசிரியர்கள், அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்கள். உலகச் சுகாதார ஸ்தாபனம் என்ன கூறினாலும், நாங்கள் எங்கள் தீர்மானத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலிலிருந்து வேறொரு நபருக்கு வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், உலக சுகாதார ஸ்தாபனம் முதல் அனைத்துத் தரப்பினரும், வைரஸ் ஒன்றுக்கு உயிரிழந்த சடலத்தில் வாழமுடியாது எனக் கூறுகின்றன. உயிர் வாழ்கின்ற உடலிலேயே வைரஸ் உயிர்வாழும். பற்றீரியாக்களால் மாத்திரமே சடலத்தில் வாழமுடியும். இதனை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றார்கள்.

“உலக சுகாதார ஸ்தானம் சடலத்தை புதைப்பதற்கு சில கட்டுப்பாடுகளை மாத்திரமே விதித்துள்ளது. உலகிலுள்ள நூற்றுக்கணக்காக நாடுகள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை ஏற்று செயற்படுகின்றன. ஆனால், இலங்கை மாத்திரமே சடலத்தை எரிக்கின்றது. தங்களுக்கென ஒரு சட்டத்தை உருவாக்கிக்கொண்டு பின்பற்றுகின்றது.

“முஸ்லிம்களை புண்படுத்த வேண்டும் என்பதற்காக, இதனை அரசாங்கம் செய்கின்றது. இதில் கட்டாயம் உள்நோக்கம் இருக்கின்றது. முஸ்லிம்களை தண்டிக்கும் ஒரு செயற்பாடு. சர்வாதிகார முறையில் இந்த விடயத்தை அரசாங்கம் செய்து வருகின்றது. இதற்காக நாங்கள் சட்டத்துறையை நாடமுடியும். பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தை நாடமுடியும். நீதிமன்றத்தை நாடினாலும், பல மாதங்கள் இந்த வழக்கு தொடரும். அவசரமாக தலையீடு செய்யவேண்டும் என நீதிமன்றத்திடம் கேட்கலாம். பேச்சுவார்த்தை மூலம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மாற்றலாம் என்ற எண்ணத்திலேயே நாங்கள் முயற்சித்தோம். நாங்கள் இதுவரை நீதிமன்றத்தை நாடவில்லை.

“அரசாங்கத்தை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வரலாம் என்ற முயற்சிதான் நடந்து கொண்டிருக்கின்றது. புதைக்கலாம் என அரசாங்கம் கூறினால், நாட்டிலுள்ள 20 மில்லியன் பௌத்த மக்களும் வீதிக்கு இறங்கி போராடுவார்கள் என்ற கதையை இப்போது வெளியிட்டுள்ளனர். இவர்கள் நினைப்பதுதானே சட்டம்” என, அவர் மேலும் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X