2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யானையிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தவர் மரணம்

Editorial   / 2025 ஜனவரி 06 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்  

யானையின் தாக்குதலில் இருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆற்றில் குதித்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மயில வெட்டுவான் வீரகட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மட்டக்களப்பு மயில வெட்டுவான் உப்போடை வீதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய கணபதிப்பிள்ளை கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தில் காலை தனது 14 வயதுடைய மகனுடன் விறகு வெட்டுவதற்காக தோணியில் விரகட்டுமுனை பகுதிக்குச் சென்று விறகு வெட்டி வரும் வழியில் காட்டு யானை துரத்தி உள்ளது யானை தாக்குதலுக்கு பயந்து தந்தையும் மகனும் ஆற்றில் பாய்ந்துள்ளனர். மகன் நீந்தி ஆற்றை கடந்த நிலையில் தந்தை ஆற்றில் நீர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.  

பிரதேச மக்கள் பல மணி நேரம் ஆற்றில் தேடிய நிலையில் மாலை வேளை சடலமாக மீட்கப்பட்டார். 

ஏறாவூர்  திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் கரடியனாறு பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு சென்று  சடலத்தை பார்வையிட்டு முதற்கட்ட விசாரணையில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடல் கூறு பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதலால் பலர் கொல்லப்பட்டதுடன் வேளாண்மை உட்பட பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓரிரு தினங்களாக சித்தாண்டி மற்றும் வந்தாறுமூலை கிராமங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து மரங்களை சேதப்படுத்திய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 

குறித்த பகுதிகளில் உள்ள யானை வேலிகள் சேதமடைந்து காணப்படுவதனால் யானைகள் இலகுவாக கிராமங்களுக்குள் நுழைகின்றன. இது தொடர்பாக பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்ட போதிலும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மாலை வேளையில் காட்டிலிருந்து வெளியேறும் யானைகள் காலையிலேயே மீண்டும் செல்கின்றன. இதனால் தமது வயல்களுக்கு செல்பவர்கள் உயிர் அபாயத்துக்கு மத்திலேயே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்த நிலையான தீர்வொன்றை பெற்றுத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X