2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ரவிராஜ் படுகொலை வழக்கு: எழுத்துமூலம் அறிவிக்கப் பணிப்பு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாரூக் தாஜுதீன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழங்கில், சிங்கள மொழி பேசும் ஜூரிகள் தேவையென்ற கோரிக்கையை தொடர்பாக, எழுத்துமூலக் கோரிக்கை வழங்குமாறு, பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிப்புரையை விடுத்த கொழும்பு மேல் நீதிமன்றம், இந்தச் சமர்ப்பிப்புகளை, இம்மாதம் 20ஆம் திகதி மேற்கொள்ளுமாறும் அறிவித்தது.

பிரதிவாதிகளுக்கு எதிராக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளின் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் றொஹாந்த அபேசூரிய மேற்கொண்ட சமர்ப்பிப்பையடுத்தே, இந்தப் பணிப்புரையை, மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக விடுத்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகள், ஜூரிகளின் கீழ் மேற்கொள்ளப்படக்கூடாது என்பதே, பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் வாதமாகும். 

சந்தேகநபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 5 குற்றச்சாட்டுகளில் 3, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருவதால், ஜூரி விசாரணையொன்று முன்னெடுக்கப்படக்கூடாது என, பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பாக ஆஜரான சட்டத்தரணியும், அதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 பேரில் மூவர், வழக்கு விசாரணைகளை இன்னமும் தவிர்த்து, தலைமறைவாகவுள்ள நிலையில், அவர்களின்றியே வழக்கு விசாரணைகளை, நீதிமன்றம் மேற்கொண்டது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ், நாரஹேன்பிட்டியவிலுள்ள அவரது வீட்டில் வைத்து, 2006ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .