Editorial / 2026 மார்ச் 15 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்து ஜனாதிபதிக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவன தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது குறிப்பாக சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம் மற்றும் கடற்றொழில் போன்ற துறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தந்த துறைகளில் தற்போதைய எரிபொருள் தேவைகள் குறித்து அமைச்சுக்களின் செயலாளர்களால் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த ஜனாதிபதி, சுகாதாரத்துறை போன்றவற்றுக்கு தேவையான அத்தியாவசிய எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேச ரீதியாக பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயுமாறு கேட்டுக்கொண்டார். அதேபோன்று, வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமை குறித்து மேலும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு செயலாளர்களுக்கு இதன்போது அறிவுறுத்தினார்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து முன்கூட்டியே எதிர்வு கூற முடியாது என்பதால், எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், அதற்காக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறையை (QR Code) மேலும் முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறையில் காணப்படும் குறைபாடுகளை மிக விரைவில் திருத்தியமைத்து அதனைப் புதுப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். மேலும், உருவாகும் புதிய நிலைமைகள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்புடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு துறையும் தனித்தனியாக முடிவெடுப்பதற்கு பதிலாக, ஒட்டுமொத்தமாகச் சிந்தித்து சவால்களுக்கான மாற்று வழிகளை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்றும் இதற்காக பரஸ்பர புரிந்துணர்வுடன் விரைவாகச் செயற்படுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷான் கமகே ஆகியோருடன் சுகாதாரம், கல்வி, கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago