2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வாக்குமூலம் ​குறித்து இரு கோணங்களில் விசாரணை

Niroshini   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக, கொலைக்குற்றத்தை ஏற்றுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி தொடர்பான விசாரணைகளை, பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ள அதேவேளை,   அவர் தெரிவித்துள்ள விடயம் தொடர்பிலும் பிறிதொரு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது” என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.   

வவுனியாவின் ஈச்சக்குளம் மற்றும் போகஸ்வெவ பிரதேசங்களுக்கான புதிய பொலிஸ் நிலையங்களைத் திறந்துவைத்த பொலிஸ்மா அதிபரிடம், அங்கிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களை, நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், கடந்தவாரம் கருத்தொன்று வெளியிடப்பட்டது. இக்கருத்து, அரசியல் வட்டாரத்தில் சூடு பிடித்துள்ளது.   

இதுகுறித்து, பொலிஸ்மா அதிபரிடம் கேட்டபோது, “பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கடற்படைத் தளபதிகள், நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டமை ​குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து தொடர்பில், என்னால் எதுவும் கூற இயலாது” என்றார்.   

“இதேவேளை, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக, கொலைக்குற்றத்தை ஏற்றுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி தொடர்பான விசாரணைகளை, பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.  

மேற்படி புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் மரணம் தொடர்பிலும், அவர் குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பிலும் இருவேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவர் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில், நாம் இன்னமும் விசாரணை நடத்தி வருகின்றோம். அவர் எழுதிவைத்துள்ள விடயம் குறித்து, இதுவரையில் இறுதியானதொரு முடிவுக்கு வந்துவிட முடியவில்லை. இது தொடர்பான பல விடயங்கள் குறித்து, நாம் நோக்க வேண்டியுள்ளது.   

அவர் இவ்வாறானதொரு விடயத்தைக் கூறக் காரணம் என்ன என்பது உள்ளிட்ட, பல விடயங்கள் தொடர்பில், அவதானிக்க வேண்டியுள்ளது. அவர் எழுதி வைத்தார் என்பதற்காக, நாமும் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது” என, பொலிஸ்மா அதிபர் மேலும் கூறினார்.   

கடந்த 2007ஆம் ஆண்டில், சேவையிலிருந்து ஓய்வுபெற்ற, இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜரான, கேகாலை, கரடுபன, தெஹிபிட்டிய வீதியைச் சேர்ந்த 52 வயதுடைய இலந்தரகே ஜயமான்ன என்பவரே, இவ்வாறு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, தற்கொலை செய்துகொண்டவராவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .