2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வெதமுல்லையில் விபத்து: கர்ப்பிணி துடிதுடித்து பலி; சாரதி கைது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 28 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி-நுவரெலியா பிரதான வீதியில், வெதமுல்ல தோட்டப் பகுதியில் வைத்து, வீதியைக் கடக்கமுயன்ற கர்ப்பிணிப் பெண்ணொருவர் மீது, லொறியொன்று மோதியத்தில் அப்பெண், ஸ்தலத்திலேயே பலியானார்.

சம்பவத்தையடுத்து, லொறியின் சாரதி, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார். இதேவேளை, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள், லொறியை புரட்டிவிட்டனர்.

நேற்று திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தில், வெதமுல்ல இறம்பொடை ஆர்.பி பிரிவைச் சேர்ந்த, ஒரு குழந்தையின் தாயான சந்திரகலா என்றழைக்கப்படும் பெருமாள் கோகிலா (வயது 34) என்பவரே பலியானார்.

நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த லொறியே, அப்பெண்ணைப் பந்தாடியுள்ளது.

கடையொன்றை நடத்திவரும் குறித்த பெண், அவரது கடைக்கு எதிரேயுள்ள கடைக்குச் செல்ல முற்பட்ட போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து லொறியை சுற்றிவளைத்த பொதுமக்கள், லொறிமீது தாக்குதல் நடத்தியதுடன் சாரதியை லொறிக்குள்ளிலிருந்து வெளியில் இழுத்தெடுக்கவும் முயற்சித்தனர். இன்னும் சிலர், கற்கள் மற்றும் குண்டாந்தடிகளை பயன்படுத்தி லொறிமீது தாக்குதல் நடத்தினார். சோகம் தாங்க முடியாத கணவன், மனைவியின் சடலத்தைக் கட்டியணைத்து கதறியழுதார்.

தாக்குதலால் லொறியின் சாரதிக்கு தலையில் சிறு காயம் ஏற்பட்டதுடன், நுவரெலியா-கண்டி பிரதான வீதியில் சில மணிநேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

சம்பவத்தை கேள்வியுற்று ஸ்தலத்துக்கு விரைந்த கொத்மலை பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.  பெண்ணின் சடலம் கொத்மலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. லொரியின்  சாரதி, கைது செய்யப்பட்டு கொத்மலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில், கொத்மலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்;.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X